Published : 14 Dec 2015 10:39 AM
Last Updated : 14 Dec 2015 10:39 AM

நெகிழவைத்த கலைஞர்!

‘போய் வாருங்கள் ராமானுஜம்!’ என பேராசிரியர் ராமானுஜத்துக்கு அஞ்சலி செலுத்திய கட்டுரை மனதைக் கனக்கச் செய்தது.

கடைசி வரை நாடக் கலைக்கே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஆளுமை அவர். கைசிக புராண நாடகம் சம்பந்தமாக ‘தி இந்து’நாளிதழில் வந்த கட்டுரையைத் தொடர்ந்து எங்கள் கிராம பெருமாள் கோயிலில் அந்நாடகத்தை நிகழ்த்துவது சம்பந்தமாகத் தெருக்கூத்துக் கலைஞர்களாகிய நாங்கள் முடிவுசெய்தோம்.

புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்துவரும் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த பேராசிரியர் மூலம் ராமானுஜத்தைத் தொடர்புகொண்டோம்.

உடனடியாக, கலைஞர்களுக்குப் போக்குவரத்துச் செலவை மட்டும் ஏற்றுக்கொண்டு கைசிக நாடகத்தை நிகழ்த்தி எங்களுக்குப் பயிற்சி அளிக்கவும் ஒப்புக்கொண்டார். தனது இறுதி மூச்சு வரை நாட்டார் கலைகளை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்ல முற்பட்ட அற்புதக் கலைஞர் அவர்.

- நிலவளம் கதிரவன்,நல்லாண்பிள்ளைபெற்றாள்.

***

தமிழ் நாடக இயக்கத்தின் முன்னோடியாகத் திகழ்ந்த பேராசிரியர் சே. ராமானுஜம் வகுப்பறைகளோடும் கோட்பாடுகளோடும் தன்னைச் சுருக்கிக்கொள்ளாமல் மக்கள் இயக்கமாக நாடக இயக்கத்தை மாற்றியவர். அவர் நடத்திய நாடகப் பயிற்சிப் பட்டறைகள் தனித்துவமானவை.

நம் மண் சார்ந்த, மரபு சார்ந்த சாயலை வெளிக்கொண்டுவரும் நோக்கில் உயிர்த் துடிப்போடு நடத்தப்பட்ட பயிற்சிப் பட்டறைகள் அவை.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற நாடகத் துறை அறிஞராகத் திகழ்ந்த இப்ராகிம் அல்காஜியின் மாணவராக அவரிடம் பயின்றிருந்தாலும், கதை சொல்வதற்கும் அதை நாடகமாக்குவதற்கும் தனக்கென்று தனி பாணியை அவர் கைக்கொண்டிருந்தார். இந்திரா பார்த்தசாரதியின் ராமானுஜர் நாடகம் அதற்கு நல்ல சான்று.

- முனைவர் சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x