Published : 21 Nov 2015 01:15 PM
Last Updated : 21 Nov 2015 01:15 PM
எங்களை மன்னித்துவிடு அன்புச் செல்வமே சையத் சைனாப் ஃபாத்திமா ஜாஃப்ரி, எங்களை மன்னித்துவிடு! இந்த முறை ஹைதராபாத்தில் ஒரு பள்ளிக்கூடத்தின் லிஃப்ட் இடைவெளியில் வைத்து உன்னைப் பறிகொடுத்தோம். ஒரு தாயின் கண்ணெதிரே - துடித்துக் கதறும் தாத்தாவின் அதிர்ச்சி மிகுந்த தருணங்களுக்கு இடையே உயிரற்ற உன் உடலை, ஏதோ உன்னையே மீட்டெடுப்பது போன்ற எதிர்பார்ப்போடு, வலியோடும் வேதனையோடும் எடுத்துக் கிடத்தும் காட்சியைக் கண்ணுறவும் நெஞ்சுரம் கொண்டிருந்த என்னைப் போன்ற பாவிகளை மன்னித்து விடு.
நவீன போட்டிக் களத்தில், ஒரேயொரு முதலிடத்துக்கான விபரீத ஓட்டப் பந்தயத்தில் குழந்தைகளை சாவி கொடுத்து இறக்கிவிடும் எங்களை மன்னித்துவிடு, கண்மணி. குழந்தைகள் மீது உரிமை கொண்டாடப் பழகியிருக்கும் சமூகத்துக்குக் குழந்தைகளுக்கான உரிமைகள் இருப்பது தெரியாது என்பதை மன்னித்துவிடு ஜாஃப்ரி! தூய்மையான குடிநீரோ, கழிப்பறையோ, விளையாட்டுத்திடலோ, அன்பான கல்விச் சூழலோ, அரவணைப்பான காற்றுவெளியோ உத்தரவாதம் செய்யாமலே அடுத்த நூற்றாண்டுக்கான கல்வி நிலையங்களாக அறிவிப்போரை நம்பிக் குழந்தைகளைக் காவு கொடுப்போரை மன்னித்துவிடு ஜாஃப்ரி!
ஆபத்துகளைத் தவிர்க்கவோ, விபத்துகளை எதிர்கொள்ளவோ வக்கில்லாமல் இருந்துகொண்டு, எந்தக் கோர மரணத்தையும், எதிர்பாரா விபத்து என்று சொல்லித் தப்பிக்கவும், நஷ்டஈடு வேண்டுமானால் கொடுத்துவிட்டுப்போகிறோம், அதற்கென்ன என்று அராஜகத் திமிரோடு வாதம் செய்யவும், இதெல்லாம் ஒன்றும் செய்ய முடியாது என்று கை விரித்துவிட்டு அடுத்த வேலைக்குப் போகவும் துணிச்சல் கொண்டு திரிய அனுமதிக்கும் எங்கள் அரசியல், பண்பாட்டுச் சூழலை மன்னித்துவிடு ஜாஃப்ரி!
வேகமான உணவு, வேகமான பயணம், வேகமான வாழ்க்கை என்றான உலகில், குழந்தைகளின் வளர்ச்சி மைல்கற்களை இப்போது வேகமாக ஊன்ற வேண்டியதை மன்னித்துவிடு ஜாஃப்ரி!
அறைந்து நசுக்கப்பட்டிருக்கும் உன் மென்மையான நாசி மீது உறைந்து மின்னும் ரத்தத்தின் துளிகளில் பிரதிபலிக்கிறது எங்களது கையாலாகத்தனம். பறிக்குமுன் வாடி விழும் வெள்ளை மலர்போல் கிடக்கும் எங்கள் முழுமதியே ஜாஃப்ரி, மன்னித்து விடு எங்களை!
- எஸ்.வி. வேணுகோபாலன், சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT