Published : 24 Nov 2015 11:47 AM
Last Updated : 24 Nov 2015 11:47 AM

வருந்துதற்கும் கண்டனத்துக்கும் உரியது!

பெங்களூரில் மூன்று வயதுக் குழந்தை ஒன்று லிஃப்ட்டில் சிக்கி மரணமடைந்தது வருந்துதற்கும் கண்டனத்துக்கும் உரியது. தொடக்கப்பள்ளி வகுப்புகள் தரைத் தளத்தில்தான் இயங்க வேண்டும் என்பது விதி. பல தனியார் பள்ளிகளும் இவ்விதியைப் பின்பற்றுவதில்லை. மெட்ரிக் ஆய்வுக் குழு உறுப்பினராகப் பல பள்ளிகளையும் பார்வையிடும்போது பல பள்ளிகளில் தொடக்கப்பள்ளிக் குழந்தைகள் மேல் தளத்திலும் இறுதி வகுப்பு மாணவர் கீழ்த் தளத்திலும் இருப்பதைக் கண்டோம்.

சிறு குழந்தைகளுக்கு மேல் தளம் பாதுகாப்பென்றும் வயது வந்த மாணவர் அடாவடிச் செய்கைகளில் ஈடுபடுவதைக் கண்காணிக்கக் கீழ்த் தளத்தில் வைத்திருப்பதாகவும் சமாதானம் கூறினர்.

படியேற இயலாது குழந்தைகள் சிரமப்படுவதைப் பற்றி பள்ளி நிர்வாகங்கள் எள்ளளவும் கவலைப்படவில்லை. கல்வி அதிகாரிகள் வகுப்பறைக் கற்பித்தலை ஆய்வு செய்வதோடு கழிப்பறை உள்ளிட்ட பள்ளியின் சகல வசதிகளையும், வசதியின்மைகளையும் பார்க்க வேண்டும் என்ற நியதியும் காற்றில் விடப்பட்டது. நல்லவேளை, பொதுப் பள்ளிகளில் லிஃப்ட் கிடையாது. கும்பகோணம் தீவிபத்துப் பள்ளியில் கட்டணம் செலுத்தும் ஆங்கில வழிக் கல்வி பெறுவோர் தரைத் தளத்திலும், இலவச தமிழ்வழிக் கல்வி பெறும் குழந்தைகள் இரண்டாம் மாடியிலும் இருக்க விபத்தில் இறந்தவர் பெரும்பாலும் ஏழைக் குழந்தைகளே!

- ச.சீ. இராஜகோபாலன், கல்வியாளர், சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x