Published : 17 Nov 2015 11:01 AM
Last Updated : 17 Nov 2015 11:01 AM
சுதந்திர இந்தியாவின் எல்லா தீமைகளுக்கும் காந்தியும் நேருவும்தான் காரண கர்த்தாக்கள் என்பது போன்ற போலியான பிரச்சாரங்கள் சமீப காலமாகத் திட்டமிட்டுப் பரப்பப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் ‘நேருவை ஏன் காந்தி தன் வாரிசாக்கினார்?’ என்ற கட்டுரை முக்கியத்துவம் பெறுகிறது. சாதியக் கட்டமைப்பில் இறுகிப்போயிருந்ததோடு அல்லாமல் மொழி, இனம் மற்றும் பிராந்தியப் பிரச்சினைகளாலும் கொந்தளித்துக்கொண்டிருந்த ஒரு நாட்டை ஜனநாயகப் பாதையில் நகர்த்தி வந்ததில் நேருவுக்கும் பங்கிருந்தது என்பதை நாம் மறுக்க முடியாது.
பழைய இந்தியாவின் இயல்பிலிருந்தே முன்னோக்கி நகரலாம் என்று காந்தி நினைத்திருந்த வேளையில், பழைய சாத்திரங்களையும் சம்பிரதாயங்களையும் புறந்தள்ளிவிட்டு, நவீன இந்தியா கனவு கண்டவர் நேரு. இருவரும் தவறுகள் இழைத்திருக்கலாம். அந்தத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு நாம் தொடர்ந்து பயணிக்க வேண்டியுள்ளது. ஆனால், அவற்றையெல்லாம் மறந்துவிட்டு வெறுப்பு அரசியலைச் சிலர் பரப்பிவருவது மிகவும் கவலைக்குரியதாகும்.
தங்களைத் தோற்கடித்ததாகக் கருதும் மன்னராட்சிக் காலத்தின் அரசர்களை வெற்றிகொள்ள, தற்போதைய ஜனநாயக நாட்டில் வாழும் ஒரு பகுதி மக்களுக்கு எதிராக கலாச்சார ரீதியான நெருக்குதல்களையும் உடல் ரீதியான வன்முறைகளையும் கட்டவிழ்த்துவிடும் விசித்திர மன நிலை கொண்டவர்களை என்னவென்று சொல்ல? நல்ல வேளை, இன்றைய மத அடிப்படைவாதிகளின் மூதாதையரிடம் ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்காததன் மூலம், பின்னோக்கி நகர்வதிலிருந்து நாட்டைப் பாதுகாத்திருக்கின்றனர் நமது முன்னோர்கள். நாமும் எச்சரிக்கையுடன் செயல்பட்டு நாட்டைப் பாதுகாப்போம்.
- மருதம் செல்வா, திருப்பூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT