Published : 30 Nov 2015 10:38 AM
Last Updated : 30 Nov 2015 10:38 AM
சமீபத்தில் பெய்த கனமழையால் தமிழக மக்களுக்கு நேர்ந்த இழப்புக்கு தமிழக அரசு அறிவித்த வெள்ள நிவாரண நிதியையும், மத்திய அரசு உடனடியாக ஒதுக்கியுள்ள தொகையையும் இழப்போடு ஒப்பிட்டுப்பார்த்தால், மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாகத் தெரிகிறது.
இது போதாதென்று, கடும் அவஸ்தைக்கு உள்ளாகியிருக்கும் பள்ளிக்கரணை பகுதி மக்களுக்குப் போதுமான உதவிகள் செய்யப்படவில்லை.
அங்கு எந்த அதிகாரியும் வந்து பார்க்கவில்லை என்ற தகவல் மனித நேயத்துக்குவிடப்பட்ட சவாலாகவே தெரிகிறது. கடலூரில் ‘தி இந்து’ வாசகர்கள் செய்துவரும் நிவாரண உதவிகளைப் பெற்ற கிராமவாசிகள், மனதார அவர்களை வாழ்த்தினார்கள்.
இந்நிகழ்வு, இன்னும் மனித நேயம் வற்றி விடவில்லை என்ற ஆறுதலைத் தந்திருக்கிறது. இனிமேலாவது நீர் வளப் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரப்படுமா? கடலூரில் உள்ளவர்கள் கண்ணீரைத் துடைக்க, தொலை நோக்குப் பார்வையோடு நிரந்தரத் தீர்வு காண வழிவகை செய்யப்படுமா?
- கு.மா.பா.கபிலன் ,சென்னை.
***
மீட்டெடுப்போம்!
‘ஏரி, குளம், குட்டை காணாமல் போனதால்தான் தண்ணீர்ப் பஞ்சம்’ எனப் பேசாத ஆள் இல்லை... நாளும் இல்லை.
ஆனால், காவேரியில் நீர் பொய்த்தும், கர்நாடகத்துடன் பிரச்சினையும் நீடிக்கும் நிலையில் நமது நிலத்தடி நீரைப் பெருக்கவும், மழை நீரைச் சேமிக்கவும், வீணாய்க் கடலில் கலக்கும் நீரினை நமது பிற்காலத் தேவைக்குத் தேக்கி வைக்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையே! ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து நாம் மீட்டெடுக்க வேண்டியது குளம், ஏரியை மட்டும் அல்ல.
மழை நீரையும் ஆற்று நீரையும் கொண்டு சென்ற... சேர்க்கின்ற வாய்க்கால்களையும், கால்வாய்களையும், முக்கிய சாலைகளிலும் தெருக்களின் ஓரங்களிலும் உள்ள வடிகால்களையும்தான்.
- அப்பர் சுந்தரம்,மயிலாடுதுறை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT