Published : 05 Nov 2015 10:48 AM
Last Updated : 05 Nov 2015 10:48 AM

இந்து - முஸ்லிம் நட்பின் வரலாறு



தமிழ்த் தாயின் இஸ்லாமியப் புதல்வர்கள்’ கட்டுரை பாதுகாக்கப்பட வேண்டிய வரலாற்று ஆவணம். தங்கள் ஆட்சியை நிலைநிறுத்திக்கொள்ள இந்து - முஸ்லிம் மதத்தினரிடையே மதத் துவேஷத்தைத் தூண்டியவர்கள் ஆங்கிலேயர்களே. அதற்காகவே இஸ்லாமியர்கள் தமிழுக்கும் நாட்டுக்கும் செய்த தொண்டுகளை எல்லாம் வரலாற்றிலிருந்து திட்டமிட்டு மறைத்துவிட்டார்கள். இப்படி மறைக்கப்பட்ட சில தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறேன். 1908-ல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அடக்குமுறையைக் கையாண்டு தேசியத் தலைவர்களை வேட்டையாடியது.

அப்போது தலைமறைவாக இருந்த வ.உ.சிதம்பரனார் கோம்பைக்கு சுப்பிரமணிய சிவாவுடன் போய்க்கொண்டிருந்தார். அவர்களை வழியிலேயே மடக்கிக் கைது செய்து, செக்கிழுக்கச் செய்தது ஆங்கிலேய அரசு. இச்சம்பவத்தைக் கேள்விப்பட்ட பாரதியார் "மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதும் நூலோர்கள் செக்கடியில் நோவதும் காண்கிலையோ" என்ற பாடலை கோம்பையைச் சேர்ந்த உ.ம.சே.முகைதீன் பிள்ளை என்பவருக்குக் கடிதமாக எழுதினார்.

பின்னர், 1934-ல் கோம்பை வந்த வ.உ.சிதம்பரனார் உ.ம.சே. முகைதீன் பிள்ளையின் வீட்டிலேயே பல மாதங்கள் தங்கியிருந்து திருக்குறளுக்கு உரையையும் வேறு சில அரிய நூல்களையும் எழுதினார். கோம்பையில் வ.உ.சி எழுதிய நூல்களை அங்குள்ள ஆனந்தா அச்சுக்கூடத்தில் அச்சிட்டு வெளியிட்டவர் உத்தமபாளையத்தைச் சேர்ந்த கே.எம். அகமது மீரான். தேசிய வரலாற்றைப் புனைந்தவர்கள் வ.உ.சிக்கும் கோம்பை உ.ம.சே. முகைதீன் பிள்ளைக்கும் இடையிலான உறவையும் அவர்கள் தமிழுக்குச் செய்த தொண்டையும் வரலாற்றிலிருந்து திட்டமிட்டு மறைத்துவிட்டார்கள். இப்படித் தமிழுக்கும் நாட்டுக்கும் அரும்பணி ஆற்றிய முஸ்லிம்களின் மறைக்கப்பட்ட வரலாறுகள் எத்தனையோ.

- கே.பி.எச். முகம்மது முஸ்தபா, திருநெல்வேலி.



அரபுத் தமிழ் இலக்கியங்கள்

‘தமிழ்த் தாயின் இஸ்லாமியப் புதல்வர்கள்’ பொருத்தமான நேரத்தில் வெளிவந்திருக்கும் கட்டுரை. தமிழகத்தில் குறிப்பாகத் தென்னகத்தில் கடல் மார்க்கமாக இஸ்லாம் அறிமுகமான காலத்திலிருந்து அரபுத் தமிழ் இலக்கியங்கள் வழியாகத் தமிழுக்கு இஸ்லாம் பங்களித்திருக்கிறது. டாக்டர் அஜ்மல்கான், பேராசிரியர் சாயபு மரைக்காயர், அறிஞர் எம்.ஆர்.எம் அப்துல்ரகீம் போன்ற ஆய்வாளர்களின் பங்கும் மகத்தானது.

மேலும் திருவாசகம், குறுந்தொகை போன்ற சமய சங்க இலக்கியங்களுக்கு இஸ்லாமியர்கள் ஆற்றிய தொண்டினைப் படித்து மிகவும் பரவசம் அடைந்திருக்கிறேன். தமிழ் வளர்த்த இஸ்லாம், இஸ்லாம் வளர்த்த தமிழ் என்று கூறுமளவுக்கு கிஸ்ஸா, முனாஜத், நொண்டி நாடகம் போன்ற பல புதுமையான இலக்கிய வடிவங்களைத் தமிழுக்கு அறிமுகப்படுத்திய பெருமையும் இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்களுக்கு உண்டு.

- நிலவளம் கதிரவன், நல்லாண்பிள்ளைபெற்றாள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x