Published : 07 Nov 2015 10:31 AM
Last Updated : 07 Nov 2015 10:31 AM
பி.ஏ.கிருஷ்ணனின் ‘நம் மருத்துவத்துக்கு நோபல் கிடைக்குமா?’ கட்டுரை தொடர்பாக தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் சார்பாகச் சில கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். “பெருமிதம்மிக்க நூல் நிலையங்களே உங்களுடைய கதவுகளை மூடாதீர்கள்! ஏனெனில், முழுமையாக நிறைந்திருக்கும் உங்களுடைய அலமாரிகளில் எது இல்லையோ ஆனால் எது மிகவும் தேவையோ அதை நான் கொண்டுவருகிறேன்” என அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மன் கூறியது இங்கு மிகவும் பொருந்தும்.
மூவாயிரம் ஆண்டு இலக்கியப் பாரம்பரியம் உள்ள தமிழ் மொழியில் எது இல்லையோ, இன்றைய நாகரிக உலகில் முக்கியமாக எது தேவையோ அதை உருவாக்கும் குறிக்கோளுடன் 1946-ல் தொடங்கப்பட்டதுதான் ‘தமிழ் வளர்ச்சிக் கழகம்’. அதை நிறுவியவர் சிறந்த கல்வியாளரும், அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தின் கல்வி அமைச்சராக இருந்தவருமான தி.க அவினாசிலிங்கம் செட்டியார்.
ஆனால் அத்தகைய தமிழ் வளர்ச்சிக் கழகத்தில் சித்த மருத்துவத்தின் வரலாறு, அதன் அடிப்படைகள், சித்த மருத்துவத்தில் அண்மைக் காலங்களில் ஏற்பட்ட மாற்றங்கள், பயிற்சி போன்ற தலைப்புகளில் முறையாகப் பதிப்பிக்கப்பட்ட நூல்கள் இல்லை. அந்தக் குறையைப் போக்க பாரத ரத்னா சி.சுப்பிரமணியம் தலைமையில், தமிழ் வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில், சித்த மருத்துவக் கல்லூரியின் விரிவுரையாளர்கள், உதவிப் பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களைக் கொண்டு சித்த மருத்துவத் துறையில் சித்த மருத்துவ நூல் வரிசை வெளியிட முடிவெடுத்தது.
சித்த மருத்துவம் தமிழர்களின் பாரம்பரிய மருத்துவம் ஆயினும் தமிழ் தெரியாதவர்கள், சித்தமருத்துவம் என்றால் என்ன? என்று கேட்டால், எடுத்துக் கொடுத்துப் படிக்கச் சொல்ல ஆங்கிலத்தில் சித்த மருத்துவ நூல் வரிசை இல்லை. இந்தக் குறையைப் போக்க மைய அரசு நிதி உதவியுடன், சித்தா மெடிசின் சீரிஸ் (Siddha Medicine Series) என்ற தலைப்பில் தமிழ் வளர்ச்சிக் கழகம் ஏழு தொகுதிகள் கொண்ட ஒரு வெளியீட்டு திட்டத்தை ஆரம்பித்தது. ஆறு தொகுதிகள் வெளிவந்துள்ளன. ஏழாவது தொகுதி தயாரிப்பில் உள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
டாக்டர் உலகநாயகி பழனி, தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT