Published : 04 Nov 2015 10:54 AM
Last Updated : 04 Nov 2015 10:54 AM

மனிதாபிமானம் இன்னும் உயிரோடிருக்கிறது

பேச்சு மற்றும் கேட்புத் திறனற்ற, இந்தியாவைச் சேர்ந்த சிறுமி கீதா, அவரது பெற்றோரை அடையாளம் கண்ட பின்னரே இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டிருக்க வேண்டும். இந்திய-பாகிஸ்தான் உறவு மேலும் சிக்கலாவதற்குள் கீதாவை அழைத்து வந்துவிடுவோம். அவரது பெற்றோரை பின்னர் தேடிக்கொள்ளலாம் என இந்தியா நினைத்திருக்கக் கூடும். ஆனால், அவர் கராச்சியிலிருந்து புது டெல்லி விமான நிலையம் வந்தபோது, அவரிடம் ஊடகங்கள் கேட்ட கேள்விகள் கசப்பானவை.

'ஊடகங்கள் நுண்ணுணர்வை இழக்கலாமா?' தலையங்கத்தில் சொல்லப்பட்டிருப்பதைப் போல, தனி மனித உணர்வுகளை எப்படிக் கையாள்வது என்ற நுண்ணுணர்வை ஊடகங்கள் இழந்துவருவது வேதனைக்குரியது. வழி தவறி பாகிஸ்தானுக்கு வந்த கீதாவை, முஸ்லிமாக மாற்றாமல், இந்துவாகவே வளர்த்த கராச்சி 'எதி' அறக்கட்டளையைச் சேர்ந்தவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மேலும், இந்திய அரசு அவர்களது சேவைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகத் தருவதாகச் சொன்ன ஒரு கோடி ரூபாய் பணத்தை வாங்க மறுத்தது, மனிதாபிமானம் இன்னும் உயிரோடு இருக்கிறது என்பதை நினைவுபடுத்துகிறது.

- அ. ஜெயினுலாப்தீன், சென்னை.



‘ஊடகங்கள் நுண்ணுணர்வை இழக்கலாமா?’ தலையங்கம் சில விஷயங்களைச் சிந்திக்க வைத்தது. எல்லை கடந்து பாகிஸ்தான் சென்ற கீதாவுக்கு ‘எதி’ அறக்கட்டளை மறுவாழ்வு கொடுத்தமை பாகிஸ்தானைப் பற்றிய தவறான பிம்பத்தைக் கலைத்திருக்கிறது. இந்தியாவின் எதிரி நாடு பாகிஸ்தான் என நெடுங்காலமாக நமக்குச் சொல்லப்பட்டுவருகிறது. ஆனால், இந்த நிகழ்வு நாடு எதிரியாக இருக்கலாம். ஆனால், மக்கள் யாரும் எதிரி அல்ல என்பதை நிரூபித்துள்ளது.

ஆனால், இதில் வருத்தமளிப்பது என்னவென்றால், சமூக நலன் கருதிச் செயல்பட வேண்டிய ஊடகங்கள் தனிமனித உணர்வுகளைக் காயப்படுத்துவதுபோல நடந்துகொள்வதுதான். எங்கு அன்பு காண்பிக்கப்படுகிறதோ அங்குதான் நேசம் வளரும். அதைவிட்டு "உன்னை மதம் மாற்றினார்களா?" என்ற கேள்வி மீண்டும் வெறுப்பை மூட்டிவிடும் நாச வேலை அன்றி வேறென்ன? துணிந்து தவறைச் சுட்டிக்காட்டிய ‘தி இந்து’வுக்குக் கோடி வணக்கங்கள்.

- மா.கார்த்திகேயன், ஆர்.எஸ்.மஙலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x