Published : 14 Nov 2015 09:57 AM
Last Updated : 14 Nov 2015 09:57 AM
கொரிய மொழி தமிழ்போல் இருக்கிறது, கொரிய இளவரசி தமிழ்ப் பெண்போல என்பன போன்று ஓர் ஆய்வாளர் வெளியிட்ட கருத்தைச் செய்தியாக ‘தி இந்து’வில் பார்த்தபோது அதிர்ச்சி ஏற்பட்டது. இப்படியான கருத்துகளைச் செய்தியாக்குவது நல்ல இதழியலுக்கான மரபு அல்ல. இவ்வகைக் கருத்துகளைச் செய்தி என ஒரு நாளிதழ் வெளியிடுகையில், கருத்துகள் உருவாகிச் செயல்படும் விதம் குறித்து அறியாதவர்கள் அதை ஒரு தகவலாக, புறவயமாக நிரூபிக்கப்பட்டதாக எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளது.
தமிழில் பல காலமாக இப்படியான விஷயங்கள் ஆய்வு என்ற பேரில் செய்யப்படுகின்றன. உலக மொழிகளுக்கிடையே உள்ள ஒற்றுமையைப் பற்றி உலகப் பண்பாடுகளுக்கிடையே உள்ள ஊடுபாவுகளைப் பற்றி ஏதுமறியாதவர்கள் தங்கள் பார்வையில் தமிழின் சாயல் கொண்ட அல்லது அப்படி விளக்கமளிக்கத் தக்க எதைக் கண்டாலும் தமிழிலிருந்து சென்றது, அவையெல்லாம் தமிழே என்றெல்லாம் பேசும் தவறு நீண்ட காலமாக நிகழ்கிறது. தமிழ்ப் பண்பாட்டுச் செல்வாக்கை ஆய்வுசெய்வதற்கு சர்வதேச ஆய்வுப் புலத்தில் உரிய மரியாதை கிடைக்காமல் போக இப்படியான ஆய்வுகளும் ஒரு காரணம். ஆய்வு என்பது அதற்கான முறைமைகளுடன் புறவயமான தகவல்களைச் சார்ந்து முன்முடிவுகள் இல்லாமல் செய்யப்படுவது. குறிப்பாக, பண்பாட்டு ஆய்வுகளில் மேலும் நிதானம் தேவை. பெருமிதங்களைத் தேடிச் செல்வதும் புளகாங்கிதம் அடைவதும் ஆய்வுக்கு எதிரான மனநிலைகள்.
இது போன்ற கருத்துகள் ஆய்வாளர்களின் பேட்டியாகவோ, கட்டுரையாகவோ வெளியிடப்பட்டு, கூடவே அதன் மறுதரப்புகளையும் வெளியிட்டால் அது ஒரு விவாதமாக அமையும். மாறாக, இப்படிச் செய்தியாக வெளியிடுவது, பத்திரிகையே இந்த விஷயங்களை நம்பி வெளியிடுவதான தோற்றத்தை உருவாக்கி, வாசகர்களிடம் தேவையற்ற நம்பகத்தன்மையை உருவாக்கிவிடும். ‘தி இந்து' அப்படிச் செய்யக் கூடாது என்று நினைக்கிறேன்.
- ஜெயமோகன், நாகர்கோவில்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT