Published : 19 Nov 2015 10:32 AM
Last Updated : 19 Nov 2015 10:32 AM
திருச்செந்தூரில் வருடந்தோறும் சஷ்டி விழாவில் பித்துக்குளி முருகதாஸுடன் பாடிக்கொண்டு ஆறு நாட்களும் கோயிலை வலம் வந்தவர்கள் பல்லாயிரம் பேர். சஷ்டியன்று அவரையும் பஜனைப் பாடல்களையும் அவரது மறைவுச் செய்தி தெரியாமலே நினைவு கூர்ந்தவர்கள் அநேகம். ஜனவரி முதல் நாளில் ஆங்கிலேய அதிகாரிகளைத் துதிக்கும் பழக்கத்தை மாற்ற திருத்தணியில் படி பூஜை நடத்தினார். பழனி படி பூஜையும் அவருடைய பங்களிப்பே. அவருடைய உடையும் குளிர்க் கண்ணாடியும் தாடியும் தனியொரு அடையாளத்தைத் தந்தன. அவர் தேசப்பற்றுள்ள ஆன்மிகவாதி.
- அ. பட்டவராயன், திருச்செந்தூர்.
நாம்தான் வெட்கப்பட வேண்டும்
மடத்தனமான காரியங்களைச் செய்பவர்களைத்தான் ‘மடையர்கள்’ என்று நினைத்துக்கொண்டிருந்தேன். டி.எல்.சஞ்சீவி குமாரின் ‘மடையர்களைப் போற்றுவோம்’ கட்டுரையைப் படித்த பின்தான் மடையர்களின் தியாக வரலாறு மக்களுக்குத் தெரியவந்திருக்கிறது. வெள்ளக் காலங்களில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மடைகளைத் திறந்துவைத்த இந்த தியாக சீலர்களுக்கு வைத்த ‘மடையர்கள்’ என்ற பெயரை மடத்தனம் செய்வோருக்கு வைத்து அழைத்த நாம்தான் வெட்கப்பட வேண்டும்.
- கே.பி.எச்.முகம்மது முஸ்தபா, திருநெல்வேலி.
தண்ணடையும் உதிரப்பட்டியும்
சங்க காலத்தில் போர் வீரர்களுக்குக் கொடையாக 'தண்ணடை' என்ற பெயரில் நிலக் கொடை வழங்கியுள்ளனர். பொது நன்மைக்காக உயிர் துறந்தோருக்கு வழங்கப்பட்ட நிலக் கொடையை, ‘உதிரப்பட்டி' என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. திருவில்லிபுத்தூர் வட்டத்திலுள்ள ‘கருங்குள’த்தில் உடைப்பைச் சரி செய்யும் பணியில் ஈடுபட்ட பெரியதேவக்குடும்பர் இறந்துபோக, அவரது மகளுக்கு ஊரார், ‘உதிரப்பட்டி'யாக நிலக் கொடை வழங்கியுள்ளனர். இச்செய்தியை குலசேகரப் பாண்டியன் காலத்துக் கல்வெட்டொன்று குறிப்பிடுகிறது.
- ஆ. சிவசுப்பிரமணியன், தூத்துக்குடி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT