Published : 29 Oct 2015 07:55 AM
Last Updated : 29 Oct 2015 07:55 AM

வங்கிகளின் வாராக் கடன்கள்

‘வங்கி மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்!’ தலையங்கம் படித்து அதிர்ச்சி அடைந்தேன். 2012 மார்ச்-ல் ரூ.1,37,000 கோடியாக இருந்த மொத்த வாராக் கடன் 2015 மார்ச்-ல் ரூ.2,97,000 கோடியாக உயர்ந்துள்ளது.

இதில் பொதுத் துறை வங்கிகளுக்கு வர வேண்டிய தொகை மட்டும் ரூ.2,55,000 கோடி. வசதியிருந்தும் திருப்பிக் கட்டாத 7,035 பேரிடமிருந்து வங்கிகளுக்கு வர வேண்டிய வாராக் கடன் தொகை ரூ. 59,000 கோடி என்று 18.10.2015 எகனாமிக் டைம்ஸ் பத்திரிகை தெரிவிக்கிறது. “இவர்களிடமிருந்து வாராக் கடனை வசூலிக்கத் தற்போதுள்ள சட்டங்கள் போதாது. எனவே, இதற்காகத் தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும். அச்சட்டத்தில் கடனைத் திருப்பிச் செலுத்தாத நிறுவன இயக்குநர்களின் சொத்தையும் பறிமுதல் செய்து வங்கிக் கடனை அடைக்கும் வகையில் கடுமையான ஷரத்துகள் இருக்க வேண்டும்” என்று வங்கி ஊழியர் இயக்கம் கடந்த 10 ஆண்டுகளாகப் போராடிவருகிறது.

ஆனால், பொதுத் துறை வங்கி உயர் அதிகாரிகள் விநோதமான கோரிக்கை வைக்கிறார்கள். இந்த ஆண்டு ஜனவரி மாதம் புனேவில் நடைபெற்ற பொதுத் துறை வங்கி உயர்மட்ட அதிகாரிகள் நடத்திய மாநாட்டில், “பொதுத் துறை வங்கிகளின் உயர் அதிகாரிகளுக்கு மத்தியக் கண்காணிப்பு ஆணையம், மத்தியப் புலனாய்வுத் துறை, சிஏஜி ஆகியவற்றின் மேற்பார்வையை வெகுவாகக் குறைக்க வேண்டும். தகவல் பெறும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்களிக்க வேண்டும். அப்போதுதான் பொதுத் துறை வங்கிகள் தைரியமாக முடிவெடுக்க முடியும்” என்று கோருகிறார்கள்.

இவையெல்லாம் மத்திய அரசின் நிதி அமைச்சகம் மெக்கன்சி என்ற வெளிநாட்டு கம்பெனியுடன் இணைந்து தயாரிக்கப்பட்ட குறிப்புகளின் அடிப்படையிலிருந்து வைக்கப்பட்ட கோரிக்கைகள். இம்மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் ஆகியோர் முக்கிய விருந்தினர்களாகப் பங்கேற்றனர். நாடு எத்திசையில் போய்க்கொண்டிருக்கிறது என்பதை இதிலிருந்து சுலபமாகப் புரிந்துகொள்ளலாம்.

- சி.பி. கிருஷ்ணன், பொதுச் செயலாளர், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம், சென்னை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x