Published : 18 Oct 2019 07:44 AM
Last Updated : 18 Oct 2019 07:44 AM
மகாராஷ்டிர அரசியல் சூழல் குறித்து இந்த வாரத்தில் ஆசை எழுதிக்கொண்டிருக்கும் கட்டுரைகள் வெகு அருமை. மகாராஷ்டிர அரசியல் சூழலை நேரில் அனுபவித்ததுபோன்ற உணர்வை ஏற்படுத்தியது.
- சரவணன், மின்னஞ்சல் வழியாக...
களத்தில் நிற்கும் நாயகர்கள்
நம் கண் முன்னே களத்தில் வறுமை ஒழிப்புக்காக நிற்கும் நாயகர்களான அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டுஃப்லோ, மைக்கேல் கிரெமர் ஆகியோர் கொண்டாடப்பட வேண்டியவர்கள். இந்தப் பொருளாதார அறிஞர்களின் ஆய்வு முதல் அது களத்தில் நிகழ்த்திய மாற்றம் வரை நேர்த்தியாகக் கட்டுரையாக்கிய செல்வ புவியரசன் பாராட்டுக்குரியவர்.
- இரா.ப.இராக்கண்ணன், கரூர்.
தொடரும் சமூக அவலத்துக்கு முடிவுகட்ட வேண்டும்
அக்டோபர் 15 அன்று வெளியான ‘சாதிய வெறிக்குப் பள்ளி மாணவர்கள் பலியாகலாமா?’ தலையங்கத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்த மதுரை சம்பவத்தைப் போலவே தேனியிலும் ஒரு சாதியத் தாக்குதல் கடந்த வாரம் நிகழ்ந்தேறியது. இதுபோல ஊடக கவனம் பெறாத நிகழ்வுகள் எங்கெங்கோ நிகழ்ந்துகொண்டிருக்கக்கூடும். வன்முறைக்கு ஈடாக மனதளவிலான வன்முறைகளும் வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
சாதிக்கு எதிராக இங்கே பெரிய அளவில் உரையாடல் சாத்தியப்பட்ட பிறகும் இன்றும் அது தொடர்ந்துகொண்டிருப்பது மிகப் பெரும் சமூக அவலம். நமது உரையாடல்களின் போதாமையைத்தான் இதுபோன்ற சம்பவங்கள் உணர்த்துகின்றன. பெரியார், அம்பேத்கர் போன்ற ஆளுமைகள் முன்னெடுத்த சாதிக்கு எதிரான ஆயுதங்களைச் சமகாலத்துக்கு ஏற்றவாறு கூர்படுத்தி இந்தக் கொடூர அவலத்துக்கு முடிவுகட்ட வேண்டும்.
- ஜத்துஜஸ்ரா, கொடைக்கானல்.
சாதியப் பிரச்சினைகளுக்கு அரசுதான் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும்
பள்ளிக்கூடம்தான் எதிர்கால சமூகத்தை உருவாக்கும் களம். அங்கேயே சாதிப் பேய் பிடித்து ஆடுகிறது. இவர்கள் வளர்ந்து எதிர்காலத்தில் என்னவாக உருவாகி நிற்பார்கள் என்று கற்பனைசெய்து பார்ப்பது மிகுந்த வருத்தத்தை உருவாக்குகிறது. அரசுதான் சாதியப் பிரச்சினைகளுக்குத் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும்.
- இலக்கியா, மின்னஞ்சல் வழியாக...
குற்றவுணர்ச்சியை உண்டாக்கும் பிளாஸ்டிக் தொடர்
தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை தன் கொடூர முகத்தைக் காட்டியபோது தொடர்ந்து அதுகுறித்துச் சில வாரங்கள் எழுதியது ‘இந்து தமிழ்’. அந்தக் கட்டுரைகள் அரசுகளையும் அதிகாரிகளையும் கேள்வி கேட்டதற்கு நிகராகப் பொதுமக்களையும் கேள்வி கேட்டது குறிப்பிடத்தக்க அம்சம். எல்லோரும் பங்கெடுக்கும்போதுதான் முழுமையான தீர்வை நோக்கி நகர முடியும்.
இப்போது, மிகவும் ஆபத்தான பிளாஸ்டிக் பற்றி ‘பிளாஸ்டிக் எனும் அணுகுண்டு’ எனும் தொடரை வெளியிட்டுவருகிறீர்கள். இந்தத் தொடரும் அதே அம்சங்களோடு வெளிவருவது பாராட்டுக்குரியது. கட்டுரைகளோடு வெளிவரும் படங்களைப் பார்க்கும் ஒவ்வொருவரும் குற்றவுணர்ச்சிக்கு ஆளாவதைத் தவிர்க்க முடியாது.
- ப.வேலுமணி, கோவை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT