Published : 12 Aug 2019 07:29 AM
Last Updated : 12 Aug 2019 07:29 AM
கடந்த ஆகஸ்ட்-9 அன்று, இடைத்தேர்தல் நடைபெற்ற வேலூர் நாடாளுமன்றத் தொகுதியின் முடிவு வெளியாகியது. சட்டமன்றத் தொகுதி வாரியாகக் கட்சிகள் பெற்ற வாக்குகளின் விவரங்கள் பத்திரிகைகளில் வெளியாகின. வாக்குச் சாவடி வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்களின் மூலம் தனித்தனியே வாக்குகளின் விவரங்களைத் தற்போது உள்ள நடைமுறையில் அனைவரும் அறிய முடிகிறது.
இதனால் தனக்கு வாக்களிக்காத பகுதிகளை, வென்றவர்களாலும் ஆளுங்கட்சியாலும் அடையாளங்கண்டு, வருங்காலங்களில் புறக்கணிக்க வாய்ப்பிருக்கிறது. தேர்தலில் வென்றவர் தனக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டும் பிரதிநிதி இல்லை. அனைவருக்கும் பொதுவானவர், அனைவருக்காகவும் குரல்கொடுக்க வேண்டியவர் என்கிற அடிப்படை ஜனநாயகம் இங்கு தோல்வியடைந்து நிற்கிறது. வாக்குச் சீட்டு முறை இருந்தபோது, பல பெட்டிகளை ஒன்றாகக் கொட்டிக் கலந்த பின்னரே வாக்கு எண்ணிக்கைப் பணிகள் தொடங்கப்பட்டன என்பது நினைவுகூற வேண்டியிருக்கிறது.
இதை அரசியல் கட்சிகளும், தேர்தல் ஆணையமும் எப்படி அணுகும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஜனநாயகத்தின் ஒரு தூணாகிய பத்திரிகைகளும், பொதுநல ஆர்வலர்களும் இந்த விஷயத்தைக் கவனிக்க வேண்டும். வாக்களிப்போர்க்கு ‘தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை ரகசியமாக வைத்துக்கொள்ளும் உரிமை உண்டு. அந்த உரிமைக்கு மதிப்பளிக்கும் வகையில் வாக்கு எண்ணிக்கை நடைமுறைகள் அமைய வேண்டும்.
- ஏ.எம்.நூர்தீன், சோளிங்கர்.
மாணவர்களே வன்முறை தவிர்ப்பீர்
ஆகஸ்ட்-9 அன்று வெளியான ‘இளைஞர்களிடம் பெருகிவரும் வன்முறைக் கலாச்சாரம்’ கட்டுரை வாசித்தேன். உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில்தான் இளைஞர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதாகப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இளைஞர்களில் சிலர் தங்களது அறிவை, ஆற்றலை, ஆளுமையை, உழைப்பை வீட்டுக்கும் நாட்டுக்கும் பயன்படுத்தாமல் திசைமாறிச் செல்வது வேதனை. நாட்டின் முதுகெலும்பாகத் திகழ வேண்டிய இளைஞர்கள், எதைப் பற்றியும் கவலைப்படாமல், சமுதாயநோக்கு சிறிதும் இன்றி வன்முறைக் கலாச்சாரத்துக்கு ஆட்படுவது துயரமானது. இத்தகைய சமுதாயச் சீர்கேட்டிலிருந்து இளைஞர்களையும் மாணவர்களையும் மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த வேண்டியது அவசர அவசியம்!
- சீ.இலட்சுமிபதி, தாம்பரம்.
மக்களின் விருப்பம்
அணைகள் பாதுகாப்பு சட்ட முன்வடிவு குறித்த தலையங்கம் மாநில மக்களின் குரலாக இருந்தது. 2010-ல் ஐ.மு. கூட்டணி அரசு இருந்தபோது, இந்த சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது மாநிலங்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து, ‘விரும்பும் மாநிலங்கள் தங்கள் சட்டமன்றத்தில் அணை பாதுகாப்பு குறித்துத் தீர்மானம் நிறைவேற்றினால், இந்த அணை பாதுகாப்புச் சட்டம் அந்த மாநிலத்துக்குப் பொருந்தும்’ என்று மாநிலங்களுக்கு ‘விருப்புரிமை’ வழங்கப்பட்டிருந்தது. தற்போதைய சட்ட முன்வடிவில் அந்தப் பிரிவு இல்லை.
மாநிலப் பட்டியலில் உள்ள அதிகாரத்தைப் பறிக்கும் வகையிலேயே புதிய சட்ட முன்வடிவு உள்ளது. தமிழ்நாட்டுக்கு உரிமையுள்ள அணைகளான முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு மற்றும் பெருவாரிப்பள்ளம் ஆகிய அணைகளை இயக்குதல் மற்றும் பராமரித்தலில் தமிழக உரிமை பறிபோகிறது. எனவே, குறைபாடுகள் நீக்கிய சட்ட முன்வடிவை நிறைவேற்றுதலே பெருவாரியான மக்களின் விருப்பமாகும்.
- ப.மணிகண்ட பிரபு, திருப்பூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT