Published : 29 Jul 2019 07:21 AM
Last Updated : 29 Jul 2019 07:21 AM

இப்படிக்கு இவர்கள்: காமராஜரின் மறக்கப்பட்ட அறிவுரை

காமராஜரின் மறக்கப்பட்ட அறிவுரை

ஜூலை 26அன்று வெளியான சமஸின் ‘சூர்யாவின் அகரத்திடம் இந்தியக் கல்வித் துறை கற்க வேண்டிய பாடம்’ கட்டுரை படித்தேன். அகரம் அறக்கட்டளையின் கல்விப் பணிகளைச் சிறிது அறிவேன். வீடு தேடிச் சென்று கல்வியைத் தொடர இயலாதவர்க்கு மன உறுதியையும் நல்வாய்ப்பையும் பெற்றுத் தரும் பணி மிகவும் பெரிது. வந்தவர்களுக்குக் கற்பிப்பது தவிர பள்ளி வாராதவர்களை வரவழைத்துக் கற்பிக்க வேண்டும் என்பது ஆசிரியர்களுக்கு காமராஜர் கொடுத்த மறக்கப்பட்ட அறிவுரை. அரசு ஆற்றிட வேண்டிய கடமையைத் தொண்டாக, அமைதியாக ஆற்றிவரும் சூர்யாவுக்கும், இப்பணியில் அவர்க்குத் துணைநிற்கும் அன்பர்களுக்கும் நல்வாழ்த்துகள்.

-ச.சீ.இராஜகோபாலன், மூத்த கல்வியாளர்.

அகரத்திலிருந்து எடுத்துக்கொள்ளலாமே

கல்வியையும் சுகாதாரத்தையும் தம் மக்களுக்குப் பாரபட்சமில்லாமல் கொடுக்க முன்வரும்போது அதற்கான வரைமுறைகளை வரையறுப்பதற்கு பல்வேறு குழுக்கள் அமைத்து கருத்துகளைப் பெறுவது நடைமுறை. ஏற்கெனவே வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு அமைப்பிலிருந்து அத்தகைய வரைமுறைகள் கிடைக்கும்போது அரசு அகரத்திலிருந்து எடுத்துக்கொள்ளலாமே. அத்தகைய சிறப்பான வரைமுறைகள் அங்கு வகுக்கப்பட்டிருக்கின்றன.

- அ.பட்டவராயன், திருச்செந்தூர்.

பாதிக்குப் பாதி கல்லூரிகள் மூடப்படும் அபாயம்

ஜூலை 25-ல் வெளியான கஸ்தூரி ரங்கன் பேட்டியில், ‘இப்போதுள்ள பள்ளிக்கூடங்களை மூடிவிடுவதல்ல புதிய கொள்கையின் நோக்கம்’ என்கிறார். ஆனால், கொள்கையோ பள்ளித் தொகுதி பற்றி பேசுகிறது. அதில் பள்ளிகளது இணைப்பு பற்றி வருகிறது. ‘போதுமான எண்ணிக்கையைக் கொண்டிருக்கக்கூடிய ஒவ்வொரு தனிப்பட்ட பள்ளியும் வழக்கமான முறையில் செயல்படும்’ என்று சொல்லப்படுகிறது.

அப்படியெனில், போதுமான எண்ணிக்கையில்லாத பள்ளிகள் மூடப்பட்டு, அதில் பயிலும் மாணவர்கள் வேறு பள்ளிக்கு மாற்றப்படுவார்கள் என்றுதானே பொருள்? இது கல்லூரிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 200 டைப் 1 பல்கலைக்கழகங்கள் உருவாவது பற்றியும், ஒவ்வொன்றிலும் 20,000 மாணவர்கள் இருப்பார்கள் என்றும் பேட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனில், சிறிய கல்லூரிகளின் கதி என்ன? ‘40,000 கல்லூரிகளை 20,000 ஆகச் சுருக்கியிருக்கிறோம்’ என்று உற்சாகமாகக் குறிப்பிட்டிருக்கிறார். ஆக, இங்கும் மூடுவிழாதான் - அதிலும் பாதிக்குப் பாதி!

- அருணன், பேராசிரியர்.

சமுதாய உணர்வை ஊக்குவிக்கம்

கல்வியே உண்மையான கல்வி

காந்தி-150 வரிசையில் ஆசை எழுதிய ‘கல்வியும் போராட்டத்தின் ஒரு பகுதி!’ கட்டுரை படித்தேன். இன்றைய ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை. ‘இப்போது உள்ள கல்வியால் மாணவர்களின் மனத்தில் சமுதாய உணர்வு இன்றி சுயநல உணர்வு புகுந்துவிட்டது’ என்றும், ‘நல்ல கல்வியின் அடிப்படை என்பது உயர்ந்த பண்புகள் கொண்ட பொறுப்பான குடிமக்களை உருவாக்குவதே’ என்றும் கூறும் மகாத்மாவின் கருத்துகளை ஆழ்ந்து சிந்தித்து உணர வேண்டும். சமுதாய உணர்வையும், சாதி, மதம் பாராமல் சக மனிதனை மதிக்கும் பண்பையும் ஊட்டாத கல்வி கல்வியே அல்ல.

- ப.முத்துக்குமார், ஸ்ரீரங்கம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x