Published : 03 Jun 2015 11:01 AM
Last Updated : 03 Jun 2015 11:01 AM
மனுஷ்ய புத்திரனின் ‘நாற்காலிக்கும் சக்கர நாற்காலிக்கும் இடையே…‘கட்டுரையைப் படித்தவுடன் என் நினைவுகளும் 4 வருடங்களுக்குப் பின்னோக்கிச் சென்றன.
நானும் என் மனைவியும் ‘உம்ரா’ என்ற புனிதப் பயணம் மேற்கொண்டு சவூதி அரேபியா சென்றிருந்தோம். சென்ற சில நாட்களில் எனக்கு மயக்கமும் மூச்சுத்திணறலும் ஏற்பட்டதால் பயணத்தை முடித்துக்கொண்டு ஊர் திரும்ப எண்ணினோம். உடனே, ஜித்தா விமான நிலையம் வந்து, செக்-இன் கவுன்டரில் உள்ள நபரிடம் எங்கள் நிலைமையைச் சொன்னோம்.
சிறிது நேரத்தில் ஊழியர்கள் இருவர் சக்கர நாற்காலியுடன் வந்தனர். அவர்கள் இருவரும் உடனிருந்து, நாங்கள் விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட்டவுடன் சக்கர நாற்காலி உதவியுடன் ஒரு வேனில் எங்களை ஏற்றிவிட்டனர். அதனுள் ஒரு ஹைட்ராலிக் லிஃப்ட் இருந்தது.
வேன் விமானம் வரை வந்து, விமானத்தின் ஒரு சிறிய கதவு திறக்கப்பட்டு, ஹைட்ராலிக் லிஃப்ட் உயர்ந்து எங்களை விமானத்தினுள் இறக்கிவிட்டனர். விமான ஊழியர்கள் எங்களை ஆசனத்தில் உட்காரவைத்தனர்.
சென்னைக்கும் தகவல் சொல்லி, எங்களை அழைத்துச் செல்ல சக்கர நாற்காலி வரும் என்றார்கள். சென்னை வந்ததும் சக்கர நாற்காலியும் இல்லை. ஊழியர்களும் இல்லை. விசாரித்ததில் சரியான பதிலும் இல்லை. இதுதான் இங்குள்ள விமான நிலையங்களுக்கும் வெளிநாட்டு விமான நிலையங்களுக்கும் உள்ள வித்தியாசம்!
- எஸ். பஷீர் அஹமத், நாகப்பட்டினம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT