Published : 01 Jun 2015 10:54 AM
Last Updated : 01 Jun 2015 10:54 AM
மனுஷ்ய புத்திரனின் ‘நாற்காலிக்கும் சக்கர நாற்காலிக்கும் இடையே…’ பதிவு என் நினைவுகளை 20 வருடங்கள் பின்னோக்கி இழுத்துச் சென்றது.
வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தாரில் எனக்குப் பணி. 9 வயது மகளின் வலது கால் எலும்பு முறிந்து, சுமார் ஐந்தரை மாதங்கள் ஆன நிலையில், காலில் போட்ட கட்டுடன் பயணம் செய்யலாம் என்று மருத்துவர் கொடுத்த பரிந்துரைக் கடிதத்துடன், கத்தார் (தோஹா) திரும்ப சென்னை விமான நிலையத்துக்கு வந்திருந்த என் மனைவிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
பயணிக்க இருந்த கல்ஃப் ஏர் விமானத்தின் தலைமை அலுவலகத்திலிருந்து (மனாமா, பஹ்ரைன்) கடிதமும், பயணம் செய்யும் விமானத்திலேயே சக்கர நாற்காலியும் மனாமாவில் இருந்தே வந்திருக்க வேண்டும். இது செய்யப்படாததால் நீங்கள் பயணம் செய்ய முடியாது என்று விமான அலுவலர் தெரிவிக்க, என் மனைவி ‘‘எங்கள் விசா முடியப்போகிறது. எனவே, நாங்கள் இந்த விமானத்திலேயே பயணம் செய்ய ஏதாவது வழி சொல்லுங்கள்” என்று போராட, ‘‘விமானி நினைத்தால் முடியும்’’ என்று அவர் சொல்ல, விமானியைச் சந்தித்து நிலைமையை விளக்கியதும், ‘‘இவர்களை அனுமதியுங்கள், மற்ற ஏற்பாடுகளை நான் செய்துகொள்கிறேன்’’ என்று விமானி சொல்லியதும், மற்ற பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கு முன்பே, ஹைட்ராலிக் லிஃப்ட் மூலம் எங்களை விமானத்தில் ஏற்றிவிட்டனர். அந்தப் பயணத்தை இனிய நினைவுகளாக என்றென்றும் நிலைக்கச் செய்த பெருமை அந்த விமானியையே சாரும்.
அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் சட்டத்தை மட்டும் பேசி, நியாயமான நம் வேண்டுகோளை நிராகரிக்காமல், அந்த விமானியைப் போன்று மனிதபிமானத்துடன் சேவை செய்ய முன்வர வேண்டும்!
- த.கு. கணேசன்,தோஹா, கத்தார். (இப்போது விடுமுறையில் சென்னையிலிருந்து…)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT