Published : 03 Jun 2015 10:59 AM
Last Updated : 03 Jun 2015 10:59 AM
செங்கல்பட்டு அரசினர் இல்லத்திலிருந்து 6 சிறுவர்கள் தப்பி ஓட்டம் என்ற செய்தி தரும் பரபரப்பில், அதன் பின்னால் இருக்கும் சிக்கல்கள் நமக்குத் தெரியாமல் போய்விடுகின்றன.
தமிழக அரசின் சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் அரசினர் குழந்தைகள் காப்பகங்கள் (சில்ரன் ஹோம்ஸ்) மற்றும் கூர்நோக்கு (அப்சர்வேஷன் ஹோம்ஸ்) இல்லங்களில் பராமரிக்கப்படும் குழந்தைகள், பணியில் இருக்கும் காவலர்களைத் தாக்கிவிட்டு அவ்வப்போது தப்பிப்பது வாடிக்கையான நிகழ்வாக இருக்கிறது.
இதற்கு, காவலர்களின் பற்றாக்குறை மட்டுமே காரணமாகப் பார்க்கப்பட்டாலும், அதையும் தாண்டி இன்னும் பல சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன.
அரசால் நடத்தப்படும் இல்லங்களின் உள்கட்டமைப்புகளும், அடிப்படை வசதிகளும், சுகாதாரத் தேவைகளும் குறைவாகவே இருக்கின்றன என்பதை யாரும் மறுக்க வாய்ப்பில்லை. இருந்தாலும், கூடுதல் பணி நேரம், ஓய்வற்ற பணி உள்ளிட்டவை அவர்களைக் குழந்தைகளிடம் குறைந்தபட்ச நேயத்துடன் இருப்பதற்குக்கூட வாய்ப்பளிப்பதில்லை.
பாதுகாக்கப்படும் குழந்தைகள் நாள் முழுவதையும் ஒற்றை அறைகளில் எந்தவிதமான செயல்பாடுகளும் அற்று நகர்த்துவது என்பது எப்படிச் சாத்தியம்? அவர்களின் பொழுதுகளை அர்த்தமுள்ளதாக, கல்வி, விளையாட்டு, சமூகத் தொடர்பு இன்னபிற பொழுதுபோக்கு என வகுத்துச் செயல்பட்டால், அவர்கள் இங்கு அழைத்துவரப்பட்டதன் இலக்கை அடைய வாய்ப்பிருக்கிறது. தவறும்பட்சத்தில் கான்கீரிட் சுவர்களைத் துளைத்துக்கொண்டும் அவர்கள் வெளியேறவே செய்வார்கள்.
சிறார் நீதிச் சட்டம் வகுத்தளித்த கட்டமைப்பு வசதியும் காவல் உள்ளிட்டவை மட்டுமே மாற்றத்தைத் தந்துவிடாது. நம்முடைய பராமரிப்பு முறையிலும், குழந்தைகளை எதிர்கொள்ளும் முறையிலும் மாற்றம் வந்தால் மட்டுமே மாற்றம் சாத்தியம்!
- வ.சி. வளவன், குழந்தை நலச் செயல்பாட்டாளர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT