Published : 04 Jun 2015 02:49 PM
Last Updated : 04 Jun 2015 02:49 PM

அரசியல் குறுக்கீடு

சரியான சமயத்தில் வெளியிடப்பட்டுள்ள சிறப்பான தலையங்கம், ‘நிதித் துறையின் பிரச்சினை மட்டுமல்ல வாராக்கடன்கள்’. தள்ளாடும் பொதுத்துறை வங்கிகளின் நலிவுக்கு அரசியல் குறுக்கீடே காரணம் என்பது ஊரறிந்த உண்மை. வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்டதே அரசியல் நோக்குடன்தான். அப்போதிலிருந்து எத்தனையோ திட்டங்கள்: அவை எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி அடையாமல் போனதற்குக் காரணம், பயனாளிகளைத் தேர்வு செய்யும் இடத்திலிருந்தே அரசியல் குறுக்கீடுதான். அதேபோல், கல்விக் கடன் மூலம் வெளிநாடு சென்று படித்துவிட்டு, நல்ல வேலையில் இருக்கும் சில இளைஞர்களுக்குக்கூட குறிப்பிட்ட காலத்தில் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் நேர்மையான சிந்தனை இல்லை என்பது துரதிர்ஷ்டவசமானது.

- வி. மஹாலிங்கம், மின்னஞ்சல் வழியாக…

விற்பனைக்கு அல்ல, உற்பத்திக்கே தடை!

நலம் வாழ பகுதியில் ‘நின்று கொல்லும் புகை: சர்வதேசப் புகையிலை எதிர்ப்பு நாள் மே 31’ கட்டுரை கண்டேன். விளையாட்டுத்தனமாக ஆரம்பிக்கிற இப்பழக்கம், நாளடைவில் நம்மை அதன் பிடியில் சிக்கவைத்து விடுகிறது. புண்பட்ட மனதை புகை விட்டு ஆற்று என்ற தவறான கருத்தை முன்வைத்து, புகை பிடிப்பதையும் மது அருந்துவதையும் தீர்வாக ஏற்படுத்திவைத்திருப்பது வருந்தக்கூடிய செயல். பொது இடங்களில் புகைபிடித்தால் அபாராதம் வசூலிக்கச் சட்டம் இருந்தாலும் அது தண்டனைக்குரிய குற்றமாக எவரும் நினைப்பதில்லை. புகையிலைப் பொருட்களின் மீது எச்சரிக்கை வாசகங்களையும் அச்சுறுத்தும் படங்களையும் போட்டு விற்பனைக்கு அனுமதிப்பதைவிட, அவற்றின் ஒட்டுமொத்த உற்பத்திக்கும் தடை விதித்தால் மட்டுமே புகை இல்லாத நாடாக மாறும் வாய்ப்பு 100% உண்டு.

- மு.க. இப்ராஹிம், வேம்பார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x