Published : 30 Jun 2015 10:48 AM
Last Updated : 30 Jun 2015 10:48 AM
ம.பொ.சிவஞானம் பற்றிய அரிய தகவல்களைப் பிறந்தநாள் நினைவாக அழகுறத் தொகுத்து வழங்கியுள்ளீர்கள்.
கள் இறக்கும் ஏழ்மையான குலத்தில் பிறந்த இவர், சிகரம் தொட்ட தமிழறிஞராக உயர்ந்தது மட்டுமல்ல, உண்மையான காந்தியவாதியாக கள்ளுக் கடைகளை மூட வேண்டுமென்று தான் சார்ந்த சமுதாயத்துக்கு எதிராகப் போராட்டங்களை நிகழ்த்தியிருக்கிறார்.
தனது இறுதி வாழ்நாள் வரை மாநில சுயாட்சிக்காகக் குரல் கொடுத்ததுடன், அதற்கான அவசியங்களை ஆய்ந்து நூல்களாகப் படைத்திருக்கிறார்.
இந்திய தேசியக் கூட்டாட்சி முறையில் மிகுந்த நம்பிக்கையும், பக்தியும் உள்ள அவரே மாநில சுயாட்சியின் அவசியத்தைக் கூறுவது ஏன் என்று இன்றைய இந்திய தேசியத் தலைவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டிய தருணம் இது.
தமிழ்நாடு பெயர் மாற்றத்துக்குக் காரணமான அவர், தமிழை ஆட்சிமொழியாக்க வேண்டும் என்று பெரிதும் விரும்பினார். 1967-ல் அண்ணா, ராஜாஜி, காயிதேமில்லத் போன்ற தலைவர்களுடன் இணைந்து தேர்தலை எதிர்கொண்டார்.
ஆனால், அவர் பிறந்த மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் தோல்வியைத் தழுவினார். மகாபாரதப் போரில், சக்ரவியூகத்தில் திரும்ப முடியாமல் சிக்கி மாண்ட அபிமன்யுவோடு தன் தோல்வியை ஒப்பிட்டு இலக்கிய நயமாகப் பேசினார்.
ஒழுக்கமான அரசியல்வாதிகள், தமிழுணர்வு மிக்கவர்கள், இவர் வகுத்த பாதையைப் பெரிதும் விரும்புவர். தமிழ் உள்ளளவும் சிலம்புச் செல்வரின் புகழ் நிலைத்திருக்கும்.
- கு.மா.பா.திருநாவுக்கரசு,சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT