Published : 21 May 2015 10:30 AM
Last Updated : 21 May 2015 10:30 AM

காந்தியக் கல்வி

சுனில் கிருஷ்ணனின் ‘காந்தியக் கல்வி சொல்வதென்ன?’ கட்டுரை காந்தியடிகளின் கல்விக் கருத்துகளைப் பட்டியலிட்டுள்ளது.

கல்விமுறைக்கும் அடிமைத்தளைக்கும் உள்ள நெருங்கிய உறவை அறிந்து சுயசிந்தனை, தற்சார்பு, அச்சமின்மை ஆகியவை கல்வியின் அஸ்திவாரங்களாக இருக்க வேண்டுமென்று கருதினார்.

ஆதாரக் கல்வி, வார்தா கல்வித் திட்டம் என்று அறியப்பட்ட அவரது கல்விமுறை கல்வியாளர் டாக்டர் ஜாகிர் ஹுசைன் தலைமையில் அமைந்த குழுவால் உருவாக்கப்பட்டது. தன் கருத்துகளைக் களப் பரிசோதனைக்கு உட்படுத்துவது காந்தியடிகளின் நெறிமுறை. அவ்வண்ணமே அவரது திட்டம் வார்தாவிலும் பிற காந்திய நிறுவனங்களிலும் சோதிக்கப்பட்டு மெருகூட்டப்பட்டது.

கற்றலில் குழந்தைகள் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டுமென்று கைத்தொழில் வழியே அனைத்துப் பாடங்களையும் கற்பிக்க அத்திட்டம் வலியுறுத்தியது. பம்பாய் மாகாணத்தில் பி.ஜி. கெர் தலைமையில் அமைந்த அரசு விடுதலைக்கு முன்னரே ஆதாரக் கல்வியை முழுமையாகச் செயல்படுத்த முனைந்தது.

விடுதலைக்குப் பின் காங்கிரஸ் கட்சி ஆண்ட மாநிலங்களில் ஆதாரக் கல்வித் திட்டம் புகுத்தப்பட்டது. ஏனோ தானோ என்று இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டதைக் கண்டித்து, ஜாகிர் ஹுசைன் விமர்சித்தார். ஆதாரக் கல்வித் திட்டம் எட்டாண்டுக் கல்வியாக அமைந்தது.

இன்று கல்வி உரிமைச் சட்டமும் அதனையே ஏற்றுள்ளது ஒரு வேடிக்கை. விடுதலை பெற்ற மனதை வலியுறுத்தும் ஆதாரக் கல்வித் திட்டம் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தலாம்.

- ச.சீ. இராஜகோபாலன்,சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x