Published : 07 May 2015 02:35 PM
Last Updated : 07 May 2015 02:35 PM

முதலில் ‘அவற்றை’ப் பயன்படுத்துங்கள்

முதலில் ‘அவற்றை’ப் பயன்படுத்துங்கள்

நிலம் கையகப்படுத்தும் கட்டுரையின் முதல் சில வரியிலேயே தமிழிசை சொல்லும் பல காரணங்களில் ஒன்றாகக் கழிப்பறை கட்ட நிலங்கள் தேவை என்பது மிகவும் வியப்பாக உள்ளது. விவசாய நிலங்களைக் கையகப்படுத்தித்தான் கழிப்பறைகள் கட்ட வேண்டுமா? இறுதியில் அவர் சீனாவை எடுத்துக்காட்டாகக் கூறுகிறார். சீனாவில் விவசாய நிலங்களைக் கையகப்படுத்தி, இங்கு மாதிரி அதானிகள், அம்பானிகள், டாட்டா, பிர்லாக்களுக்கா கொடுக்கிறார்கள்? அதனால், அங்கு விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளார்களா? ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்டு அதில் பயன்படுத்தாமல் 56.64% நிலம் இருக்கிறது. முதலில் அவற்றைப் பயன்படுத்திவிட்டு, பிறகு இதைப் பற்றி மோடி அரசு அக்கறை காட்டலாமே?!

- வே. பாண்டி, தூத்துக்குடி.

சரியான தீர்ப்பு

கார் விபத்து வழக்கில் நடிகர் சல்மான் கான் குற்றவாளி என மும்பை நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததில், அவருக்கு பெயில் வேண்டுமானால் கிடைக்கலாம். ஆனால், இனிமேல் இந்த மாதிரி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் யாராயிருந்தாலும் இதுதான் தண்டனை என்று உறுதியாகிவிடும். ஆயுள் பூராவும் போலீஸ், ஜெயில், பெயில், என்று நாளைக் கடத்த வேண்டிய சிக்கல். அந்தத் தீர்ப்பு எல்லோரையும் கொஞ்சம் கவனத்துடன் செயல்பட வைக்கும்.

சுந்தர்ராஜன், ‘தி இந்து’ இணையதளம் வழியாக…

இதையும் தெரிந்துகொள்ளுங்கள்

‘தங்கத்தில் கலப்படத்தைக் கண்டுபிடிக்க புதிய கருவி’ நல்ல செய்திதான். ஆனால், அதில் ஒரு முக்கியமான விஷயம் விடுபட்டுள்ளது. இந்தக் கருவி கெட்டி நகை எனப்படும் ஆண்கள் அணியும் காப்பு, பெண்கள் அணியும் வளையல் போன்றவற்றில் உள்ள தரத்தை அறிய முடியாது. ஏனெனில், இது ஒரு குறிப்பிட்ட மைக்ரான் அளவுதான் உள்ளே ஊடுருவிச் சென்று தரம் அறிய முடியும். இந்தக் கருவி எப்போதோ வந்துவிட்டது. இதன் விலை பல லட்சங்கள். எனவே, பெரிய நகைக் கடைகளில் மட்டுமே இருக்கும்.

- பாலாஜி, ‘தி இந்து’ இணையதளம் வழியாக…

பயனுள்ள தகவல்கள்

இன்று வெளிவந்துள்ள ‘காசு பணம் துட்டு’ குறித்த தகவல்கள் மிகவும் பயனுள்ளவையாக இருந்தன. ரூபாய் நோட்டுக்களைப் பார்வையற்றவர்கள் எவ்வாறு அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதையும் அறிந்துகொள்ள முடிந்தது. ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கும் இடத்திலேயே நாணயங்களையும் உருவாக்குகிறார்கள் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் அதற்கெனத் தனியாக நாணயச் சாலைகள் உள்ளன என்பதை இன்று அறிந்துகொண்டேன். ஒவ்வொரு நாணயச் சாலையிலும் தயாராகும் நாணயங்களுக்கு வேறுவேறு அடையாளங்கள் உள்ளன என்பதையும் தெரிந்துகொண்டேன். பல பயனுள்ள தகவல்களைத் தந்த ‘மாயா பஜா’ருக்கு நன்றி!

- பொ. ராஜசிந்தியா, ஏ.பி.சி.வீ. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தூத்துக்குடி.

சமுதாயத் தேவை

கோடைக் காலத்து மழையெனப் பெய்து மனதைக் குளிரவைத்துள்ளது ‘போகும் வழியும் ஒரு பள்ளிக்கூடம்தான்' கட்டுரை. அக்காலப் பிள்ளைகள் இயல்பாகக் கொண்டாடிய தோழமை, விளையாடிய விளையாட்டுகள், அவர்களுக்குள்ளே எழும் சிறுசிறு பிரச்சினைகள், அதை அவர்களே தீர்த்துக்கொள்ளும் பாங்கு - ஒரு இணக்கமிகு சமுதாயத்துக்குத் தேவையான அத்தனை பண்புகளும் அவர்களுக்கு இலகுவாகக் கிடைத்தன. இன்றைக்கு பாதுகாப்பு அல்லது ஜாக்கிரதை என்ற பெயரில் அவர்களைச் சுற்றி முள்வேலியைப் போட்டு வைத்திருக்கிறோம். மேலும், பிறருடன் பழகுவது ‘வினையை விலைக்கு வாங்குவது' என்ற போதையைப் பிள்ளைகள் மனதில் ஏற்றி வைத்திருக்கிறோம். மக்கள் தங்களைத் தாங்களே திரும்பிப் பார்க்கவும், சரிசெய்துகொள்ளவும் இதுபோன்ற கட்டுரைகள் அத்தியாவசியத் தேவையாகின்றன.

- ஜே. லூர்து, மதுரை.

‘போகும் வழியும் ஒரு பள்ளிக்கூடம்தான்’ கட்டுரை படித்தேன். தற்போதைய கல்விமுறை வெறும் பட்டதாரிகளை மட்டுமே உருவாக்குகிறது. அதோடு, மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில்தான் பாடத்திட்டமும், தேர்வும் முறைகளும் உள்ளன. உடற்பயிற்சி, ஓவியம், கைத்தொழில் போன்றவற்றுக்கு நம் பள்ளிக்கல்வியில் போதிய முக்கியத்துவம் தருவதில்லை. ஒருவருடைய 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் மட்டுமே ஒரு மாணவன் அல்லது மாணவியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது. இதுதான் இன்றைய தமிழத்தின் பள்ளிக் கல்வியின் நிலை.

- எம். ஆர். லட்சுமிநாராயணன், கள்ளக்குறிச்சி.

குரங்காய்ப் போன அதிசயம்!

‘தப்பித்த குரங்குகள்’ கட்டுரை மிக அருமை. நான் அரசுப் பள்ளியில்தான் படித்தேன். தற்போது அரசுப் பணியில் இருக்கிறேன். என்னைப் போலவே எனது குழந்தைகளையும் அரசுப் பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்பது எனது லட்சியம். ஆனால், அது முடியவில்லை. காரணம், எனது குடும்பத்தார். “நீங்கள் எப்படியாவது போங்கள். ஆனால், என் மகனைத் தனியார் பள்ளியில்தான் படிக்க வைக்க வேண்டும்” என அடம்பிடித்துச் சாதித்தார் என் மனைவி. மேலும், “இவ்ளோ சம்பாரிக்கிற நீங்க, ஒரு நல்ல ஸ்கூல்ல பசங்கள படிக்கவைக்க மாட்டிங்களா? பணம் சம்பாரிச்சு என்னதான் பண்ணப்போறீங்க?” எனக் கையாலாகாதவன் போலச் சித்தரித்தார்கள். கடைசியில், எனது குழந்தைகள் மாட்டிக்கொண்ட குரங்குகளாக மாறிப்போனார்கள். அவர்கள் மட்டுமல்ல, அவர்களை அந்த நிலைக்கு இட்டுச் சென்ற நானும் குரங்காய்ப் போனதுதான் விசித்திரம்!

- மோகன்பாபு, சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x