Published : 06 May 2015 10:56 AM
Last Updated : 06 May 2015 10:56 AM
அரசுப் பள்ளிகளிலும் ஆங்கிலவழி வகுப்புகள் உண்டென பொதுமக்களுக்கு அறிவிக்கப் பள்ளிக் கல்வி இயக்குநர் பள்ளிகளுக்கு ஆணையிட்டுள்ளது (‘தி இந்து’, மே 5) ஒரு பக்கம் நகைப்பையும் மறுபக்கம் வேதனையையும் அளிக்கின்றது.
அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சிக்கு ஆசிரியர் இன்மையும் முழுமையான ஆய்வு மேற்கொள்ளாமையும்தான் முக்கியக் காரணிகள். இவற்றைச் சரிசெய்யாது மேற்கொள்ளப்படும் எம்மாற்றமும் பயன் தராது.
இந்தியத் துணைக் கண்டத்தின் முதல் மாநிலத் திட்டக்குழுவில் கல்வி உறுப்பினராக இருந்த டாக்டர் மால்கம் ஆதிசேஷையா தனது பன்னாட்டு அனுபவங்களின் அடிப்படையில் 'கற்கும் சமூகத்தை நோக்கி' என்ற அறிக்கையில், தமிழ்நாட்டுக் கல்விக்கென ஒரு தொலைநோக்குத் திட்டம் வெளியிட்டார். அதுவே தமிழ்நாட்டின் முதலும் இறுதியுமான கல்விக் கொள்கை. கல்வி நோக்கங்களாகத் தமிழ்மொழி வளர்ச்சி, தமிழ்ப் பண்பாடு, தமிழ்வழிக் கல்வி ஆகியவற்றை அவ்வறிக்கை வலியுறுத்தியுள்ளது. இவை அனைத்தும் இன்று புறந்தள்ளப்பட்டுள்ளன.
சமீப சில ஆண்டுகளில் தமிழக அரசு எடுக்கும் கல்வி பற்றிய முடிவுகளுக்கு எவ்வாதரமும் கிடையாது. மாறாக, பல கல்விக் குழுக்களாலும் வற்புறுத்தியுள்ள தாய்மொழிவழிக் கல்வியை மறுக்கும் வகையில் தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அமைச்சர்களும் அதிகாரிகளும் வருவார்கள், போவார்கள். தமிழன் நிரந்தரம். தமிழனின் அடையாளத்தைத் திரை போட்டு மறைக்கும் செயல் கண்டிக்கத் தக்கது. பொய்யாக ஆங்கிலத்தின் மீது ஒரு மாயையை உருவாக்கி, தம் தவறுகளை மறைக்கும் முயற்சிகளைக் கைவிட்டு, அரசுப் பள்ளிகளின் தர உயர்வுக்குச் செயல்திட்டங்கள் வகுப்பதே அறிவுடைமை!
- ச.சீ. இராஜகோபாலன்,சென்னை
***
உங்கள் ஆசையைத் திணிக்காதீர்கள்
தமிழகமெங்கும் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவியர், ஆசிரியர் வழிகாட்டுதலுடன் மேற்கொண்ட இரு வருட உழைப்பின் பலன் சில நாட்களில் கிட்டவுள்ள சூழ்நிலையில், மாணவர்கள் தான் என்ன படிக்க வேண்டும் என்பதைப் பெற்றோர் மற்றும் கல்வியாளர்களின் உதவியுடன் தீர்க்கமாக ஆராய்ந்து முடிவுவெடுக்க வேண்டிய பொன்னான நேரமிது. ஏனென்றால், பொறியியல் மற்றும் மருத்துவம் என்பதை எல்லாம் தாண்டி நவீன காலத்துக்கேற்ற எண்ணற்ற படிப்புகள் கல்வி உதவித்தொகையுடன் பல்வேறு பல்கலைக்கழகங்களால் வழங்கப்படுகின்றன. அதே போல் பெற்றோரும் மாணவர்களின் சுய விருப்பம் மற்றும் ஆர்வம் அடுத்து வரப்போகும் ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி எந்தெந்தத் துறைகளில் சிறப்பாக இருக்கும் என்பதை எல்லாம் கவனத்தில் கொண்டு மாணவருக்கு வழிகாட்டி, அவர்கள் விரும்பாத துறையைத் திணிப்பதை அறவே தவிர்த்து, விரும்பும் துறையில் சாதிக்க வழிகாட்ட வேண்டும்.
- சி. விஜய் ஆனந்த் சிதம்பரம்,அரூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT