Published : 28 Apr 2015 10:43 AM
Last Updated : 28 Apr 2015 10:43 AM
ஜெயமோகனின் ‘அஜிதனும் அரசுப் பள்ளியும்' என்ற அற்புதமான கட்டுரை என்னைக் கண்கலங்கச் செய்துவிட்டது.
அரசுப் பள்ளி அஜிதனைக் கண்டுபிடித்தது; கட்டவிழ்த்தது; அவனது கலக்கத்தை ஒழித்தது. அதற்கு முக்கியக் காரணம், அவனது சக மாணவர்கள். அடித்தட்டிலிருந்து, சாப்பாட்டுக்கும் வழியற்று, சனி, ஞாயிறில் கூலி வேலைக்குச் செல்லும் மாணவர்தான் அவனிடத்தில் அத்தகைய அற்புதமான மாற்றத்தைக் கொண்டுவருகின்றனர். இதுதான் பொதுப் பள்ளிகளின் பெரும் சிறப்பு.
உலகின் அனைத்து நாடுகளிலும் வர்க்க பேதமின்றி, வசதிபெற்றவரும், பெறாதவரும், அனைத்துக் குழந்தைகளும் ஒன்றாகக் கற்கும் பள்ளிகளே உண்மையான கல்வி அளிக்கும் என்ற அந்நாடுகளின் கல்வி அமைப்பின் நம்பிக்கை இதுதான்.
புகழ்பெற்ற கோத்தாரி கமிஷன் இத்தகைய பொதுப்பள்ளிகள்தான் இந்தியாவுக்குத் தேவை என்ற பரிந்துரையை வைத்தபோது கூறிய வாதம்: “சாமான்ய மக்களுடன் வாழ்வைப் பகிர்ந்துகொள்ளல் தரமான கல்வியின் முக்கியத் தன்மை”. இதற்கு எதிர்மாறாக, கல்வி உரிமைச் சட்டம், தனியார் பள்ளிகள் 25% வசதியற்ற குழந்தைகளைச் சேர்க்க வேண்டும் என்றபோது, வசதி படைத்தோர் பள்ளிகள் அதனைக் கடுமையாக எதிர்த்தன.
ஏழைக் குழந்தைகளுடன் படித்தால், உங்கள் குழந்தைகள் நாசமடைவார்கள் என்று கூறி, சட்டத்தை எதிர்க்கப் பெற்றோரைத் தூண்டின. கல்வித் துறையைச் சார்ந்த ஒவ்வொரு வரையும் சென்றடைய வேண்டிய கட்டுரை இது.
- வசந்தி தேவி,கல்வியாளர், சென்னை.
***
நவீன சமூகத்தில் அதிக மதிப்பெண்கள் பெறுபவனே நல்ல மாணவன் என்பதான சித்திரம் வலுப்பெற்றிருக்கிறது.
கல்வி என்பதும் வேலைவாய்ப்பு தொடர்புடையதாகவே இருக்கிறது. எதிர்காலத்தைக் குறிவைத்து மட்டுமே கல்வி நிலையங்கள் மாணவர்களை முன் தள்ளிக்கொண்டிருக்கின்றன.
நிகழ்காலத்தில் ஒரு நிமிடம்கூட வாழ அவர்கள் அனுமதிக்கப்படுவதே இல்லை. மூளையை நம்பச் சொல்லித் தூண்டுவதில் தவறில்லை.
அதற்காக, இதயத்தை முற்றிலும் மறந்துபோனவர்களாக நம் மாணவர்களை மாற்றி வைத்திருப்பதுதான் வேதனை. அரசுப் பள்ளிகளில் மட்டுமே மாணவர்கள் ‘மாணவர்களாகவே’ இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம் இருக்கின்றன. ஜெயமோகனும் அஜிதனும் அதையே நமக்கு உணர்த்தவும் செய்கின்றனர்.
- முருகவேலன், கோபிசெட்டிபாளையம்
***
காத்துக் கிடக்கும் அஜிதன்கள்
குழந்தைகளின் குழந்தைத்தனமான குறும்புகளைக் கொன்று, அவர்களின் இயல்பான விளையாட்டைக் கொன்று, அவர்களின் சின்னச் சின்ன ஆசைகளைக் கொன்று, அச்சில் வார்த்த பொம்மைகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம் என்ற உண்மையை ஜெயமோகனின் ‘அஜிதனும் அரசுப் பள்ளியும்’ கட்டுரை முன்வைத்திருக்கிறது.
குழந்தைகளின் உலகத்தை மதிப்பெண் இயந்திரங்கள் அரைத்து நசுக்கித் தரைமட்டமாக்கியிருப்பதை உணர முடிகிறது. எடிசனும் இப்படித்தான் உருவானார்.
எட்டரை வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்டு மூளைக் கோளாறு உடைய மாணவன் என்று முத்திரை குத்தப்பட்டு, பள்ளியை விட்டு வெளியே அனுப்பப்பட்ட தாமஸ் ஆல்வா எடிசனுக்கு வீட்டிலேயே மூன்றாண்டுகள் பாடம் சொல்லித்தந்து ஊக்கப்படுத்தியவர் அவர் தாய் நேன்சி மேத்தீவ்ஸ் எலியட்.
அவருக்குப் பழங்கதைகளைச் சொல்லியும் கணிதம் கற்றுத்தந்தும் எழுதப் படிக்கச் சொல்லியும் தந்தவர் அவர் தந்தை சாமுவெல் ஓக்டென் எடிசன்.
ஆங்கிலவழிக் கல்வியின் வெம்மை தாங்க முடியாமல் குமுறி ‘‘கணக்கு எனக்குப் பிணக்கு” என்று கவிதை வரைந்த எட்டயபுரத்து சுப்பையாதான் மகாகவி பாரதியாய்ப் பரிணமித்தவர்.
வெளியே உள்ள தகவல்களைக் குழந்தைகளின் மூளைக்குள் திணிப்பதையே கல்வி என்று பல ஆண்டுகளாய் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஜெயமோகன் காப்பாற்றிய அஜிதனைப் போல் நாம் காப்பாற்ற வேண்டிய ஆயிரக் கணக்கான அஜிதன்கள் நமக்காகக் காத்திருக்கிறார்கள்.
- சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT