Published : 11 Apr 2015 11:00 AM
Last Updated : 11 Apr 2015 11:00 AM
தலையங்கம் தொடங்கி முழுமையாக இரண்டு பக்கங்களை ஜெயகாந்தனுக்காக ஒதுக்கிய ‘தி இந்து' தமிழ் நாளிதழுக்குப் பாராட்டுகள்.
எழுத்தாளரை மதிக்காத எந்தச் சமூகமும் முன்னேற இயலாது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தொடங்கி ஜெயந்திரர் வரை பல்வேறு கருத்தோட்டம் உடையவர்கள் ஜெயகாந்தனுக்கு அளித்திருக்கும் பாராட்டுகளே அவருடைய பண்பாட்டுக்கும் புலமைக்கும் சான்று.
தனது எழுத்துகளால், படிப்பவர் மனங்களில் ஊடுருவியவர் ஜெயகாந்தன். இன்னும் 200 வருடங்கள் கழித்தும் நிற்கப்போவது அவரின் எழுத்துகள்தான். எழுத்தாளன் என்பவன் கையேந்தும் பிச்சைக்காரன் அல்ல, தனது கருத்துகளை எழுத்துகளால் அள்ளி அள்ளி வழங்கும் வள்ளல் என்பதை நடைமுறையில் காட்டியவர். எவருக்கும் பயப்படாத தன்மை கொண்டவர்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் ‘வாழ்வியல் சிந்தனைகள்' நூல் வெளியீட்டு விழாவில், கலந்துகொண்டு உரையாற்றியபோது ‘நான் இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டுத்தான் பேசுகிறேன்' என்று ஆரம்பித்து, அவர் ஆற்றிய உரை இன்னும் காதுகளில் ஒலிக்கிறது.
கி.வீரமணிக்கும் ஜெயகாந்தனுக்கும் கடுமையான கருத்து முரண்பாடு இருந்தாலும்கூடப் பொதுத்தன்மையான அந்த நூல் வெளியீட்டு விழாவில் அவ்வளவு ஈர்ப்பாகவும் எடுப்பாகவும் தோழமையோடும் பேசினார். இன்னும் பல ஆண்டுகளுக்குத் தமிழ் இலக்கிய உலகில் மறையாமல் நினைவில் நிற்கும் ‘கம்பீரமான முகம்'தான் ஜெயகாந்தனின் முகம்.
- முனைவர் வா. நேரு,மாநிலத்தலைவர், பகுத்தறிவாளர் கழகம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT