Published : 07 Feb 2015 10:51 AM
Last Updated : 07 Feb 2015 10:51 AM
‘கரூர் மாணவர் மட்டும்தான் குற்றவாளியா?' - தலையங்கத்தில், ‘அரசாங்கம் மது விற்பது சரியா? அதுவும் பள்ளிச் சீருடையில் இருந்த மாணவர்களுக்கு மதுவை விற்பது சரியா?' என்று சரமாரியாக, ஆனால் சரியாகக் கேள்வி கேட்டிருக்கிறீர்கள். கரூர் மாணவன் ஒரு சிறு உதாரணம்தான்.
தான் சம்பாதிக்கும் சிறு தொகையையும், அல்லது மனைவியின் சம்பாத்தியத்தையும் அவளைத் துன்புறுத்திப் பிடுங்கி வந்து, டாஸ்மாக் கடையில் தாரைவார்த்துவிட்டு, ‘தான் எங்கிருக்கிறோம், என்ன நிலையில் இருக்கிறோம்' என்ற சுய நினைவில்லாமலே சாலையோரம் அலங்கோலமான நிலையில் கிடக்கும் பலரைத் தமிழகமெங்கும் தினமும் காணலாம்.
மதுவை விற்றால் வருமானம் வரும்தான்; அதனால், உடலும் சமுதாயமும் எவ்வளவு சீர்கெடுகிறது? கண்ணைத் திறந்துகொண்டு யாராவது கிணற்றில் விழுவார்களா? ‘வருமானம் என்ற பெயரில் ஒட்டுமொத்த சமூகத்தையும் மதுவெனும் பாதாளத்தில் தள்ளி மூழ்கடிக்கும் நிர்வாகப் போதைக்கு என்ன தண்டனை?' என்று நெற்றிப்பொட்டில் அடித்தால்போல் நீங்கள் கேட்டிருப்பது மிகச் சரியே.
அ.ஜெயினுலாப்தீன்,சென்னை.
***
அணுகுமுறை சரியில்லை
மது அருந்தி சாலையில் படுத்துக் கிடந்த மாணவரைக் கல்வித் துறை அலுவலர் பள்ளியிலிருந்து நீக்கியிருப்பது முறையல்ல என்று தலையங்கம் மிகச் சரியாகச் சுட்டிக்காட்டியுள்ளது. மதுப் பழக்கத்திலிருந்து விடுவிப்பது பள்ளிகளின் சக்திக்கு அப்பாற்பட்டது.
எவ்வாறு இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது என்பது தீவிர விவாதத்துக்குரியது. மற்றொரு பள்ளியில் ஒரு மாணவியின் மதிய உணவை ஐந்து மாணவர்கள் எடுத்து உண்டதைக் காவல் துறைக்குத் தலைமையாசிரியர் புகார் கொடுத்து, காவல் துறையினர் மாணவரை அடித்து நொறுக்கியதாகவும், அம்மாணவர்கள் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டதாகவும் வந்துள்ள செய்தி வியப்பையும் அதிர்ச்சியையும் தருகிறது.
அறிவுரை கூறித் தம் செயலுக்கு வருந்தச் செய்து, மன்னிப்பு கோர வைத்து முடித்து வைத்திருக்க வேண்டும். காவல் துறையைப் பள்ளிக்குள் அழைப்பது முழுமையாகத் தவிர்க்க வேண்டும். பெரும் போராட்டங்களின் போதும் காவல் துறையினரைப் பள்ளி வளாகத்தினுள் அனுமதித்ததில்லை. இவ்விரு நிகழ்வுகளிலும் மாணவரிடம் பரிவு சார்ந்த அணுகுமுறையின்மையையே எடுத்துக்காட்டுகின்றன.
- ச.சீ. இராஜகோபாலன், கல்வியாளர்,ென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT