Published : 23 Feb 2015 11:15 AM
Last Updated : 23 Feb 2015 11:15 AM
பல்வேறு சிறுபான்மையின மக்களின் மொழிகளையும் கபளீகரம் செய்து, அரசியல் நிர்ப்பந்தத்தால் தேசிய மொழித் தகுதியை இந்தி பெற்றிருப்பதை ஆழி செந்தில்நாதனின் ‘#இந்திவாழ்க’ கட்டுரை வெளிப்படுத்துகிறது. எண்ணற்ற சிறிய மொழிகளின் மீது ஆதிக்கம் செலுத்துகிற இந்தி, அதைப் பேசுகிற மக்களிடமே முழுமையாகச் சென்று சேரவில்லை என்பதையும் கட்டுரை தெளிவுபடுத்துகிறது.
இந்தியைப் போலவே தமிழும் அரசியல் கருவியாக்கப்பட்டு, அதன் சீரிளமைத் திறன் குறைந்து செயலிழந்து அலங்கோலமாகக் காட்சியளிக்கிறது. தமிழை நேசிப்பது போலவே இந்தியையும் ஒரு மொழி என்கிற அடிப்படையில் நேசிப்பதில் தவறில்லை.
ஆனால், இந்தி மட்டுமே வாழ்வாதாரத்துக்கான மொழி என்று உளறுவதை நாம் ஏற்க முடியாது. போலி தமிழ்த் தலைவர்கள் தமிழை வெறும் அலங்கார மொழியாக, அடையாளமாகக் காட்சிப்படுத்தி வைத்திருப்பதால்தான் தமிழ் இன்னும் அரியணை ஏறாமல், ஆலய வாயிலுக்கு வெளியேயும், வழக்காடு மன்ற முற்றத்திலும் கையேந்தி நிற்கிறது. மூவாயிரம் ஆண்டு மூத்த மொழி, செம்மொழி என்றெல்லாம் பழம் பெருமை பேசுவதை விட்டுவிட்டு, சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கான மொழியாகவும் சரிவரக் கையாள வேண்டும்.
- அருணா சுந்தரராசன்,மானாமதுரை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT