Published : 08 Dec 2014 11:04 AM
Last Updated : 08 Dec 2014 11:04 AM
‘மெல்லத் தமிழன் இனி!’ தொடரின் கடைசிஅத்தியாயம் புதிய எழுச்சியின் தொடக்கம் என்றே சொல்ல வேண்டும். வெறுமனே மதுவின் தீமைகளை மட்டும் சொல்லாமல் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கண்ணீர் அனுபவங்களைப் பதிவுசெய்தது இந்தத் தொடர்.
குடியின் விளைவாக உண்டாகும் மனநோய்களுக்கு, மனநல மருத்துவர்களைக் கொண்டுத் தீர்வுசொன்னது பல குடும்பங்களைக் குடியிலிருந்து மீட்டிருக்கும்.
அக்கறையுடன் இந்தத் தொடரை எழுதிய டி.எல். சஞ்சீவிகுமாருக்கும், வெளியிட்ட ‘தி இந்து’வுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
கூத்தப்பாடி மா.கோவிந்தசாமி,தருமபுரி.
***
‘மெல்லத்
தமிழன் இனி..!’ தொடர் மக்கள் மனதில், குறிப்பாக குழந்தைகள் மனதில் மாற்றத்தைத் தந்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. மதுவின் தீமை குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் தனிமனிதர்கள், அறக்கட்டளைகள், தன்னார்வ அமைப்புகளுக்கு ஒரு உந்து சக்தியை ஏற்படுத்தித் தந்திருக்கும் ‘தி இந்து’வின் பங்கு அளப்பரியது. இந்த நேரத்தில், சென்னை உயர் நீதிமன்றமும் மது தொடர்பாகக் கேள்விகளை எழுப்பியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
ம.மீனாட்சிசுந்தரம்,
சென்னை.
***
இந்தத் தொடரின் உள்ளடக்கத்தை அரசு கூர்மையாக ஆராய்ந்து மதுவின் கோரப்பிடியிலிருந்து தமிழகத்தை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுக்கடைகளை மூடுவது மட்டும் தீர்வாகாது. மதுவுக்கு அடிமையானவர்களுக்குத் தேவையான மருத்துவமும் அளிக்கப்பட வேண்டும். மகத்தான இந்த மக்கள் இயக்கத்தில் ‘தி இந்து’வின் பணியும் தொடரும் என்ற உறுதி மனநிறைவைக் கொடுக்கிறது.
ச.சீ. இராஜகோபாலன்,
சென்னை.
***
மதுவுக்கு எதிரான இந்தத் தொடர் சமூக அக்கறை உள்ள அனைவரது எண்ணங்களையும் பிரதிபலித்தது.
எந்த ஒரு மாற்றமும் நம்மிலிருந்தே தொடங்கப்பட வேண்டும். குடிப்பது தீமை என்று தெரிந்திருந்தும் அதிலிருந்து மீள முடியாமல் இருப்பதற்கு மன உறுதி இல்லாமல் இருப்பதே காரணம்.
தொடரின் நிறைவுப் பகுதியில் குழந்தைகள் ஏற்படுத்திய மாற்றங்கள்பற்றி வாசித்தபோது கண்கள் குளமாயின. தமிழக அரசு மதுவிலக்கு பற்றி முக்கியமான முடிவை எடுக்கும் தருணம் வந்துவிட்டது.
ரா.பொன்முத்தையா,தூத்துக்குடி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT