Published : 31 Aug 2017 09:09 AM
Last Updated : 31 Aug 2017 09:09 AM
உருப்படியான யோசனைகள்
எ
ம்.எஸ்.சுவாமிநாதன் பேட்டி (ஆகஸ்ட் 30) இந்திய விவசாயம் கடைத்தேற உருப்படியான வழிகளைக் கூறியிருக்கிறது. இந்திய வேளாண்மை ஓர் இக்கட்டான நிலையில் உள்ளது. உணவு உற்பத்தியில் உபரி என்ற நிலையை எட்டியபோதிலும் பசுமைப்புரட்சியின் பின்விளைவுகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது. அளவு கடந்த ரசாயன உரம், பூச்சிக்கொல்லி உபயோகம் மண்ணின் உயிர்த்தன்மையை இழக்கச் செய்து தீராத ரசாயன உரப்பசியில் இருக்க வைத்துள்ளது. கெடுதல் செய்யும் பூச்சிகளையும் நன்மை செய்யும் பூச்சிகளையும் பூச்சிக்கொல்லிகள் பேதமின்றி அழித்து, இயற்கைச் சமநிலையை இழக்க வைத்துவிட்டது. இருக்கும் பிரச்சினைகளிலேயே சூழலியல் பிரச்சினைதான் தலையாய பிரச்சினையாகிவிட்டது. நிலத்தடி நீர்தான் முதல் களப்பலி. அரசின் நிவாரணங்களும் மானியமும் கடன் தள்ளுபடியும் சரியான நபர்களைச் சென்றடையவில்லை. விவசாயப் பிரச்சினைகளுக்கு ஒருங்கிணைந்த அணுகுமுறைதான் தீர்வாக அமையும்.
-ஜி.அழகிரிசாமி, செம்பனார்கோயில்
காணாமல் போகும் இயற்கை
ஆ
க.30ம் தேதியிட்ட ‘தி இந்து’ நாளிதழில், கரைந்து போன ‘கரும்பு விவசாயமும், காணாமல் போகும் தூக்கணாங் குருவிகளும்’ என்ற கட்டுரை படித்தேன். சுற்றுச்சூழல் சீர்கேட்டால் பாதிக்கப்படுவது மனித இனம் மட்டுமல்ல பறவையினங்களும் விலங்கினங்களும் கூடத்தான். கழுதைகள், பன்றிகள், தவளைகள், சிறுபூச்சிகள், வண்ணத்துப் பூச்சிகள், பல்வேறு பறவைகள் என்று சென்ற நூற்றாண்டில் நம்மைச் சுற்றிலும் இருந்த பல்வேறு உயிரினங்கள் இன்று காட்சிப்பொருளாகிவிட்டன. விவசாயத்தோடு பறவைகள், விலங்கினங்களும் அழிந்துவருவது ஆபத்தானது.
- பி.கே.ஜீவன், கும்பகோணம்.
வாழ்கிறது மனிதநேயம்
‘ம
றுபிறவி எடுத்த உண்மைக் கதை..!' (ஆகஸ்ட்-29) கட்டுரையை வாசித்ததும் நெஞ்சம் நெகிழ்ந்துபோனது. மகாராஷ்ரத்தில் பிறந்து வறுமை காரணமாக குஜராத்துக்குப் பிழைக்கப்போன இடத்தில் கட்டிடப் பணிசெய்தபோது விபத்தில் சிக்கி உயிர் மீண்ட ஏழைச் சகோதாரி வைசாலியும், அவருடைய தாய், சகோதரன் ஆகியோரும் இந்தியாவின் பல மாநிலங்களிலும் சிகிச்சைக்காக அலைந்து திரிந்திருக்கிறார்கள். மொழி தெரியாத நிலையிலும் தமிழகம் வந்து ஒரு ஆட்டோவில் ஏறியுள்ளனா். மனித நேயமும் பிறமொழி அறிவும் கொண்ட கரீம்பாய், அவர்களின் திக்கற்ற நிலையைப் புரிந்துகொண்டு நம்பிக்கையுடன் ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் அலுவலகத்தில் கொண்டுவந்து சேர்த்தது நெகிழவைக்கிறது. ‘தி இந்து’ செய்த உதவி, மனிதம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதைப் பறைசாற்றுகிறது.
-பாலுச்சாமி,பட்டாபிராம்.
சட்டத்தின் மீது நம்பிக்கை
ச
ட்டம் தன் கடமையைச் செய்யும்போது, அதற்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய ஹரியாணா மாநில அரசு பாராமுகமாக இருந்ததன் விளைவு கோடிக்கணக்கில் மதிப்புள்ள சொத்துக்கள் சேதத்துடன் 38 மனித உயிர்களும் பலியாகியுள்ளன. 'தேரா சச்சா சவுதா' அமைப்பின் தலைவர் ராம் ரஹீம் சிங்குக்கு 20-ஆண்டுகள் தண்டனையும் அபதாரமும் வழங்கிய தீர்ப்பில் சட்டம் தன் கடமையை மனச்சாட்சியுடன் செய்தது, சட்டத்தின் மீது பாமரருக்கும் நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளது. மொத்தத்தில் ஒரு மாநில அரசு மக்களின் தேவையற்ற கொந்தளிப்பை அடக்க முடியாததும், குற்றவாளி இருக்கும் சிறைக்குச் சென்று நீதிமன்றமே தண்டனையை அளித்ததும்தான் அவமானம்.
-சொக்கலிங்கம், மின்னஞ்சல் வழியாக…
ஏமாறுபவர்கள் இருக்கும்போது…
ம
னிதனுக்குக் கடவுள் நம்பிக்கை, ஆன்மிகம் தேவைதான் என்றாலும் கடவுளை வழிபடுவதற்கு இடையில் ஒரு தூதுவர் நமக்கு வேண்டுமா? கடவுளின் தூதுவர்களாகத் தங்களை அடையாளப்படுத்திக்கொண்டு மக்களை ஏமாற்றுவதுடன் பெண்களையும் ஏமாற்றுவதைப் போலிச் சாமியார்கள் தொடர்ந்து செய்துவருகிறார்கள். மக்களின் மூடநம்பிக்கை இதற்கெல்லாம் அடிப்படையான காரணங்களில் ஒன்று. போலிச் சாமியார்களை நாமே வளர்த்துவிட்டு, பின்னர் சாமியார் தவறு செய்துவிட்டார் என்று புலம்புகிறோம்?
- நன்னிலம் இளங்கோவன், மயிலாடுதுறை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT