Published : 22 Aug 2017 09:44 AM
Last Updated : 22 Aug 2017 09:44 AM
மக்கள் நல்வாழ்வுக்கு கூடுதல் நிதி
இ
ந்தியாவில் சுகாதாரத் துறையின் அவலத்தை ஆக.18-ம் தேதிய தலையங்கம் (குழந்தைகள் மரணம்: என்ன செய்ய வேண்டும் அரசு?) தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளது. நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், சிறப்பு மருத்துவர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள், பரிசோதனைப் பிரிவில் ஊழியர்கள் என்று கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது. மேலும், அரசு மருத்துவமனைகளில் உயிர்காக்கும் மருந்துகளும், மருத்துவ உபகரணங்களும் போதுமான அளவு இல்லை. அத்துடன் காப்பீட்டுத் திட்டம், கட்டணப் பிரிவுகள் தொடங்குவதன் மூலம் அரசுப் பொது மருத்துவமனைகள் படிப்படியாகத் தனியார்மயமாக்கப்படுகின்றன. இவ்வாறு தனியார்மய, வணிகமயக் கொள்கைகளால் மருத்துவர்களற்று, மருந்துகளற்று சீரழியும் அரசு மருத்துவமனைகள் பச்சிளங்குழந்தைகளின் மரணக்கிடங்குகளாக மாறிவருகின்றன. மக்கள் நல்வாழ்வுக்கு அரசு நிதி ஒதுக்க மறுப்பதே சுகாதாரக் கேட்டுக்கும் மருத்துவமனை அவலங்களுக்கும் காரணம். எனவே, மத்திய அரசு மக்கள்நலத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். மருத்துவத் துறையைத் தனியார்மயமாக்குவதைக் கைவிட வேண்டும்.
- மா.சேரலாதன், தர்மபுரி.
ஆச்சரியப் பள்ளி!
த
மிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள முன் மாதிரிப் பள்ளிகளைப் பற்றி தேவதாசன் மற்றும் குழுவினர் எழுதும் ‘ஆச்சரியப்பள்ளி’ தொடர் சிறப்பாக உள்ளது. சாதாரண சிறு பள்ளிகளை, சாதனைப் பள்ளிகளாக மாற்றத் தேவையான தீப்பொறி முதலில் தலைமை ஆசிரியர் அல்லது ஏதாவது ஒரு ஆசிரியரிடத்தில் தொடங்குகிறது. பின் ஆசிரியர் குழு, பெற்றோர்கள், ஊர் மக்கள், முன்னாள் மாணவர்கள் என்று பெரும் மக்கள் எழுச்சியாக மாறுகிறது. இந்த தீப்பொறியைப் பிற பள்ளிகளுக்கும் பரப்பும் வேலையை ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் செய்கிறது. மிகச் சிறந்த பள்ளிகள் எல்லாவற்றிலும் பொதுவான சில கூறுகளைப் பார்க்கலாம். அடிப்படை வசதிகள், கட்டமைப்பு வசதிகள், நவீனக் கருவிகளை, தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல், பசுமை யான சூழல், குழந்தைகளின் கற்றல் திறன் மேம்பாடு குழந்தைகள் பள்ளியை விரும்புதல் போன்றவை. தொடர்பு எண் தந்து, மற்ற ஆசிரியர்களுக்கும் தூண்டுகோலாய் இருக்கும் இச்சமூகப் பணிக்கு வாழ்த்துகள்.
- ஜெ.சாந்தமூர்த்தி,
முதன்மைக் கல்வி அலுவலர் (ஓய்வு), மன்னார்குடி.
நீட் மறு சிந்தனை தேவை
நீ
ட் தேர்வு சிக்கல் குறித்த மூன்று கட்டுரைகளையும் (ஆக.20) படித்தேன். கட்டுரையாளர்கள் மூவருமே நீட் தேர்வின் உள்நோக்கத்தைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார்கள். ஆனாலும், நீட் தேர்வு வேண்டும் என்று தமிழ்நாட்டில் குரல் கொடுப்பவர்களின் சிந்தனைக்காகச் சில தகவல்கள். இந்தியாவிலேயே தமிழக அரசுதான் மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து, அதிக அளவில் மருத்துவப் படிப்புக்கான இடங்களை உருவாக்கியிருக்கிறது. மருத்துவ உயர் படிப்பு இடங்களும் தமிழ்நாட்டில்தான் அதிகம். இவற்றை உருவாக்கியிருப்பதன் நோக்கம் பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட, கிராமப்புற மாணவர்களும் இக்கல்வியை எளிதாகப் பெற வேண்டும் என்பதுதான். இந்த இடங்கள் தமிழக மாணவர்களுக்கே முன்னுரிமையாகக் கிடைக்கவும், தமிழ்நாட்டின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை காப்பாற்றப்படவும் நீட்டை எதிர்ப்பதே சரியானது.
- கோமல் தமிழமுதன், திருவாரூர்.
திட்டமிடல் தேவை
ஆ
க.18-ல் வெளியான, ‘விவசாயத்துக்கு உடனடித் தேவை தகவல் தொழில்நுட்பத் திட்டமிடல்’ கட்டுரையை வாசித்தேன். விவசாயிகளின் தற்கொலை பற்றி நன்கு ஆராய்ந்தால் இயற்கைப் பேரிடர்களையே, கடன்களைத் திரும்ப செலுத்த இயலாத நிலையையோ மட்டுமே முதன்மைக் காரணங்களாகக் கூற முடியாது. திட்டமிட்ட பயிரிடுதல், உற்பத்திச் செலவுகளைக் குறைத்தல், விளைபொருட்களைச் சந்தைப்படுத்துதல் போன்ற விழிப்புணர்வு இல்லாததும் இந்தப் பிரச்சினையைத் தீவிரப்படுத்துகின்றன. திருச்செல்வம் முன்வைக்கும் திட்டம் இந்த அடிப்படைப் பிரச்சனைக்குத் தீர்வாக அமையும். விவசாயிகளின் தற்கொலைக்கு நஷ்டஈடு என்றும் நிரந்தரத் தீர்வாகாது. அரசு உண்மை நிலையை உணர்ந்து அவரின் திறமைக்கும் முயற்சிக்கும் ஒரு வாய்ப்பளிக்க வேண்டும்.
- மு.விஜயலட்சுமி, மின்னஞ்சல் வழியாக.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT