Published : 13 Jul 2017 10:29 AM
Last Updated : 13 Jul 2017 10:29 AM
கைபேசியில் வானம்
ஜூலை 10-ல் வெளியான, ‘வானத்தைப் பார்க்க ஒரு வாசஸ்தலம்’ கட்டுரை வாசித்தேன். நகரத்தில் பெரும்பாலானோர் வானத்தை அண்ணார்ந்து பார்ப்பதில்லை என்பது உண்மையே. தொழில்நுட்ப வளர்ச்சி, மனித சமுதாயம் பலநூறு வருடங்களாக சேர்த்து கொண்டு வந்த அறிவுத் திரட்டுக்களை எல்லாம் பயன்படுத்த தேவையில்லாமல் செய்துவிட்டது. வானத்தைப் பார்ப்பதும், எந்த நட்சத்திரம் எங்கு உள்ளது என்று கண்டுபிடிப்பதும் சிரமமாக இருப்பதாகக் கவலை கொள்ளத் தேவையில்லை. இதற்கென ஸ்டார் சார்ட், நாசா உள்ளிட்ட பல செல்போன் செயலிகள் இருக்கின்றன. அதை தரவிறக்கிக்கொண்டு வானத்தை நோக்கி உங்கள் கைபேசி கேமராவைக் காட்டினால், நட்சத்திரக் கூட்டங்களின் பெயர்களை அதுவே காட்டும். சிலநாட்கள் கைபேசி உதவியுடன் குழந்தைகளை வானத்தைப் பார்க்கச் செய்துவிட்டு பின்னர், வெறும் கண்களாலேயே பார்த்து நட்சத்திரக் கூட்டங்களைக் கண்டுபிடிக்கக் கற்றுக்கொள்ளலாம். இது நல்ல பொழுதுபோக்காகவும், வானியல் பற்றித் தெரிந்துகொள்ளும் வாய்ப்பாகவும் அமையும். முயற்சிக்கலாமே?
-சுரேஷ்குமார், இணையதளம் வழியாக...
குற்றமும் நிம்மதியும்
ஜூலை 10 அன்று வெளியான ‘கைதிகளைக் காப்பாற்றும் சீர்திருத்தங்கள் அவசியம்’ தலையங்கம் மிகுந்த மனித நேயத்துடன் எழுதப்பட்டிருக்கிறது. சிறையில் இருக்கும் பெரும்பாலான கைதிகள் வெறும் அம்புகள்தான். அவர்களை ஏவிவிட்டவர்கள் பணம், பதவி, அதிகாரம் என படு சுதந்திரமாக உலா வந்துகொண்டிருக்கிறார்கள். குற்றங்களின் ஆணிவேரான இவர்களைக் களைந்தாலே, பாதிச் சிறைகள் காலியாகிவிடும் என்று தோன்றுகிறது. சிறையில் சீர்திருத்தங்களை ஆரம்பிக்காமல் சிறு வயதிலிருந்தே, “குற்றம் புரிந்தவன் வாழ்வில் நிம்மதி இல்லை” என்ற வாழ்க்கை அடிப்படை தத்துவத்தை மனதில் பதியவைத்துவிட்டால் குற்றவாளிகள் குறைவார்கள் என நம்பலாம். சரிதானே?
-ஜே.லூர்து, மதுரை.
கட்சி பேதமின்றி இணைய வேண்டும்
செம்மொழி நிறுவனத்தை முடக்க நினைக்கும் மத்திய அரசின் (ஜூலை 11, தலையங்கம்) மாற்றாந்தாய் மனப்போக்கு வேதனை தருகிறது. சங்க இலக்கியங்கள் பற்றிய ஆராய்ச்சிகள், தொன்மையான கல்வெட்டுகள் பற்றிய ஆய்வுகள் என இவ்வளவு காலம் இயங்கிவந்த செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை, தற்பொழுது மத்தியப் பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டுவர வேண்டிய அவசியம் எதற்காக ஏற்பட்டது என்று தெரியவில்லை. தமிழாய்வு நிறுவனம் இன்னும் செய்து முடிக்க வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன. தமிழின் பெருமை காக்க கட்சி பேதமின்றி அனைவரும் இணைய வேண்டிய நேரமிது.
-கே.ஆர். அசோகன், கிட்டம்பட்டி.
யோசிக்க வைக்கிறது
நல்லவர்கள் கெட்டவர்கள் யார்? எனப் பட்டியலிட்டு அவர்கள் இருவரும் சமூகத்தில் எப்படி வாழ்கின்றனர் என தன் நடையில் நாட்டு நடப்பை நிதர்சனமாக அலசியிருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன் (கடவுளின் நாக்கு தொடர், ஜூலை 11) சுயநலம் விரிந்து பொதுநலம் சுருங்குவதை புத்த ஜாதகக்கதையான வெள்ளை யானைத் தந்தம் கதை மூலம் ரத்தினச் சுருக்கமாகச் சொல்லிவிட்டார். தன் வாழ்நாள் முழுவதும் சமூகப் போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்ற ஆளுமைகள் ‘டவுன்பஸ்’ஸில் போவதும் கள்ளச் சாராயம் விற்றவர்களோ சொகுசுக் காரில் போவதும் யோசிக்க வைக்கிறது.
-சாமி குணசேகர், அம்மாசத்திரம்.
ஆசிரியர்களின் பொறுப்பு
அருகமைப் பள்ளிகளின் தேவையை கல்வியாளர் வசந்திதேவி அக்கறையுடன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். (‘குழந்தைகளை மிரட்டும் மஞ்சள் வாகனங்கள்’). பள்ளிக் கல்வித்துறையில் தற்போது நடக்கத் தொடங்கியிருக்கும் மாற்றங்கள் நம்பிக்கை தருகின்றன. இதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டியவர்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்களே. தன்னம்பிக்கையுடனும், அக்கறையுடனும் தங்கள் கடமைகளை அவர்கள் செய்யத் தொடங்குவார்களேயானால் அனைத்து அரசுப் பள்ளிகளும் ‘தி இந்து’வில் வருவதைப் போன்ற ஆச்சரியப் பள்ளிகள் ஆகிவிடும்.
-நா.புகழேந்தி, பழனி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT