Published : 26 Jul 2017 08:41 AM
Last Updated : 26 Jul 2017 08:41 AM

இப்படிக்கு இவர்கள்: தண்டனை மாணவர்களுக்கா?

சில மாநிலங்களில் தாய்மொழி, ஆங்கிலம் என்ற இரு மொழித் திட்டமும், சில மாநிலங்களில் இந்தி மொழியையும் சேர்த்து மும்மொழித் திட்டமும் நடைமுறையில் உள்ளது. மேலும் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய மூன்று முதன்மைப் பாடங்களும் கற்பிக்கப்படுகிறன. ஆக, 6, 7, 8 ஆகிய வகுப்புகளுக்கு பாடத்துக்கு ஒரு ஆசிரியர் என்று நியமித்தால், குறைந்தது ஐந்து அல்லது ஆறு ஆசிரியர்களை ஒவ்வொரு பள்ளிக்கும் நியமிக்க வேண்டும்.

ஆனால், ஒரு மொழிப்பாட ஆசிரியர், கணிதம் மற்றும் அறிவியல் இரண்டு பாடங்களுக்கும் சேர்த்து ஒரு ஆசிரியர், சமூக அறிவியல் பாடத்துக்கு ஒரு ஆசிரியர் நியமிக்கவே கல்வி உரிமைச் சட்டம் அனுமதிக்கிறது. குழந்தைகள் தரமான கல்வியைப் பெறுவதற்கான உரிமையை மட்டுமல்லாமல், மொழி அறிவு பெறுவதற்கான வாய்ப்பையும் அச்சட்டம் மறுக்கிறது.

குறைந்தபட்சம் பாடத்துக்கு ஒரு ஆசிரியர், வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதியைச் சாத்தியமாக்கும் வகையில் கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை முயற்சி எடுக்க வேண்டும். கல்வித் தரத்தை உயர்த்துவோம் என்று கூறி 5, 8-ம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி இல்லாமல் செய்வதை ஏற்க முடியாது. குழந்தைகளை மட்டும் தண்டனைக்கு ஆளாக்குவது கல்வி மறுப்புக்கு ஒப்பான அநீதியே.

- சு.மூர்த்தி, ஒருங்கிணைப்பாளர், கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு.

 

மாலை நேரத் திருமணங்கள்!

கரு.முத்து எழுதிய, ‘மாலை நேரத் திருமணங்களும், மக்கள் சொல்லும் காரணங்களும்’ கட்டுரை (ஜூலை 19) படித்தேன். 3000 ஆண்டுகளுக்கு முந்தைய தொல்காப்பியத்தில், ‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம்’ என்கிறார் தொல்காப்பியர். பழங்காலத்தில் காதல் திருமணங்கள் மட்டுமே நடந்த தமிழகத்தில், காலப்போக்கில் சமூக ஒழுங்கீனமும் துன்பமும் ஏற்பட்டதால், ஆணும் பெண்ணும் ஊர் அறியத் திருமணம் செய்ய வேண்டும் என்று திருமணச் சடங்ககை (காரணத்தை) அமைத்தார்கள் என்று கூறுகிறது தொல்காப்பியம்.

ஆனால், ஏறுபொழுதில்தான் திருமணம் செய்தார்கள் என்று எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால், இறங்குபொழுதில் திருமணம் செய்யக் கூடாது என்று அதிகாலையிலேயே திருமணங்களை நடத்துகிறார்கள். அனைத்து ஊர்களிலும் நிச்சயதார்த்தம் மாலையில்தான் நடைபெறுகிறது. அதைப் போலவே திருமணங்களையும் மாலை நேரத்தில் நடத்தினால் வசதியாக இருக்கும்.

- எஸ்.பரமசிவம், மதுரை.

 

குழப்பமான கல்விச் சூழல்

5 மற்றும் 8-ம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் முறை ரத்துசெய்யப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியிருப்பது ஒன்றும் வியத்தகு முன்னேற்றத்தைக் கொண்டுவந்துவிடாது. மாநில - மத்திய அரசுகள் முரண்பாடாக வெவ்வேறு கல்விக் கொள்கைகளைக் கொண்டிருப்பது மாணவர்களையே பாதிக்கும். ஆரம்பப் பள்ளி முதல் நீட் தேர்வு வரை இந்த குழப்பமான சூழல்களுக்குக் கல்வியாளர்கள் குழு அமைத்து தீர்வு காண வேண்டும்.

- எம்.விக்னேஷ், மதுரை.

 

பூப்பறிக்கக் கோடரி எதற்கு?

செடிகளுக்கு வலிக்காமல் பூக்களை எடுப்பதுபோல், சிறுபான்மையினரை நோக்கி வீசப்பட்ட அம்புகளை வீசியவர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தாமல் தனது கைவசமுள்ள எழுத்து ஆயுதத்தால் ரவிக்குமார் ‘கும்பலாட்சியிலிருந்து கொடுங்கோன்மைக்கு..’ புத்தகத்தை எழுதியிருக்கிறார். ‘பல மொழி, இன, மத, சமயங்களைச் சார்ந்த மக்கள் வாழும் இந்தியாவில், குறிப்பிட்ட ஒரு மதத்தைப் போற்றுவதையும் அதேபோல் இந்துத்துவப் பெரும்பான்மைவாத ஆட்சியை நோக்கித் தள்ளுவதற்குரிய செயல்பாடுகளில் அக்கறை காட்டுவதையும், இதற்கு உடன்படாத மதத்தினரை, இனத்தவரை, உதட்டளவில் போற்றுவதையும் உள்ளத்தில் தூற்றுவதையும் எதிர்த்து - தனது சொற்போரை நிகழ்த்தும்போதும் சுய கண்காணிப்போடு தன் எழுத்துத் தேரினை நகர்த்துகிறார்’ என குறிப்பிட்ட வரிகளில் நூலாசிரியரின் பண்பையும், நூலின் தனிச் சிறப்பையும் அறிந்தேன். (ஜூலை 22, நூல்வெளி).

- கு.மா.பா.கபிலன், சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x