Published : 25 Jul 2017 09:10 AM
Last Updated : 25 Jul 2017 09:10 AM
ஓய்வூதிய உயர்வு போதாது!
ஜூலை 21-ம் தேதி வெளியான பத்திரிகையாளர் ஓய்வூதியத்தைப் பற்றி அலசும் தலையங்கம் மெச்சத்தகுந்தது. இதேபோல வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் – சுமார் 600 பேர் வெறும் ரூ. 2,000 மட்டுமே ஓய்வூதியத் தொகையாகப் பெற்று வாழ்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் அறிஞராயிருக்கின்ற ‘வறி’ஞர்கள். தம் சக்திக்கு அப்பாற்பட்டு கடன் வாங்கி நூல்கள் வெளியிட்டு, விற்கத் திறனற்று, அரசு நூலக ஆணை பெறும் நுணுக்கங்கள் அறியாது, பார்க்கிறவர்களிடமெல்லாம் இலவசமாக நூல்களைத் தருபவர்கள். இன்னும் சொல்லப்போனால், அரசின் இந்த ஓய்வூதியத்தையே பெரிதாய் நம்பிக் கிடப்பவர்கள். பணியேதும் இல்லாதவர்கள். மருத்துவ செலவுக்கே அல்லாடுபவர்கள். சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஊதியத்தை இருமடங்காக்கிய அரசு, சமீபத்தில் இவர்களுக்கான ஓய்வூதியம் ரூ.500 மட்டும் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரான இந்த உயர்வு போதாது. இந்த ஓய்வூதிய உயர்வை இன்றைய விலைவாசி கருதி இன்னும் சற்று உயர்த்துவது அவசிய அவசரம்.
- காஞ்சி சாந்தன், எழுத்தாளர்.
இலக்கை நிர்ணயுங்கள்
நூ
ற்றுக்கணக்கான ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாதோர் ஒன்று கூடி மூன்று நாட்கள் பள்ளிக் கல்வியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் பற்றி விவாதித்தது போற்றுதலுக்குரியது. 1948-ல் அன்றைய கல்வி அமைச்சர் தி.சு.அவிநாசிலிங்கம், விடுதலை பெற்ற இந்தியாவுக்கான தேசியக் கல்வித் திட்டத்தை வகுக்க முற்பட்டார். மிகச் சிறந்த அம்சங்களைக்கொண்டிருந்த அத்திட்டம் செயலிழந்ததற்குக் காரணம், திட்டத்தைச் செயல்படுத்த வேண்டிய ஆசிரியர்களைத் தயார்படுத்தாமையே. அதற்கடுத்து, 1971-ல் ஆசிரியர்களுக்கே அறிமுகமாகாத புதிய கணிதம், அறிவியல் ஆகியவை கொணரப்பட்டும் அவை ஏற்றுக்கொள்ளக் காரணமாக அமைந்தது ஆசிரிய இயக்கப் பிரதிநிதிகள் பாடத்திட்டக் குழுக்களில் இடம்பெற்றமையே. எனவே, ஆசிரியர்களும், பலதரப்பட்ட ஆர்வலர்களும் பங்கேற்ற இக்கருத்தரங்கம், நல்விளைவுகளை உருவாக்கும் என எதிர்பார்க்கலாம். ஒவ்வொருவர்க்கும் மாறுபட்ட கருத்துகள் இருக்கும். இருந்தாலும், கல்வியின் நோக்கங்கள் யாவை, தமிழ்நாட்டின் கொள்கைகள் என்ன என்பவையே கல்வித் திட்டத்தின் உள்ளடக்கத்தைத் தீர்மானிக்கும். தமிழக அரசு தம் கல்விக் கொள்கை, மொழிக் கொள்கை ஆகியவற்றைத் தெளிவுபடுத்த வேண்டியது முதற்பணியாகும். இல்லையென்றால், திக்குத் தெரியாத காட்டில் செல்லும் பயணமாக இம்முயற்சிகள் பயனற்றுப் போய்விடும்.
-ச.சீ.இராஜகோபாலன், சென்னை.
ஜனநாயகத்தில் இருந்து
கொடுங்கோன்மைக்கு..
ர
விக்குமார் எழுதிய ‘கும்பலாட்சியிலிருந்து கொடுங்கோன்மைக்கு: தலித் நோக்கில் பாஜக ஆட்சி’ என்ற புத்தகம் பற்றி, நூல்வெளிப் பகுதியில் வெளியான கட்டுரை மோடியின் இந்த மூன்று வருட ஆட்சியில் தலித் மற்றும் சிறுபான்மையினர்மீது தொடுக்கப்பட்ட கொடுமைகளையும், அவற்றுக்கு எதிராக ரவிக்குமார் குரல் கொடுத்ததையும் விவரிக்கிறது. இந்தித் திணிப்பு, கல்வியைக் காவிமயமாக்கும் தன்மை, பண மதிப்பு நீக்க நடவடிக்கை, இந்துத்துவப் பெரும்பான்மைவாத ஆட்சியை நோக்கி தேசத்தைத் தள்ளுவது என மோடி அரசின் பல கொடுமைகள் அடையாளம் காட்டப்பட்டுள்ளன.
முத்தாய்ப்பாக, பசுப் பாதுகாப்பு, கலாச்சாரப் பாதுகாப்பு என்ற பெயரில், ஒரு கும்பல் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு வன்முறையில் இறங்குவதைச் சுட்டிக் காட்டி, ‘ஜனநாயகத்திலிருந்து கொடுங்கோன்மை ஆட்சிக்கு மாறும் இடைப்பட்ட காலத்தில் சில காலம் கும்பலாட்சி நடக்கும்’ என்ற கிரேக்க அறிஞரின் கூற்றைச் சொல்லி எச்சரிக்கையும் விடுக்கிறார் ரவிக்குமார். மோடி அரசின் நடவடிக்கைகள் இப்படியே தொடருமானால், இந்திய நாட்டின் ஒருமைப்பாடு கேள்விக்குறியாகிவிடும்.
- அ.ஜெயினுலாப்தீன், சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT