Published : 10 Jul 2017 10:04 AM
Last Updated : 10 Jul 2017 10:04 AM

இப்படிக்கு இவர்கள்: காவிரி பெருகட்டும்!

தேவை பகுத்தறிவுச் சட்டம்

சிவப்புப் பவளம் அணிந்தால் கணவர் உயிருக்கு ஆபத்து என கர்நாடகாவில் பரவும் வதந்தி பற்றிய செய்தி (ஜூலை - 8) நகைப்பூட்டியது. முன்பே, பச்சை சேலையை சகோதரிகளுக்குப் பரிசளிக்க வேண்டும், புதுத் தாலிக்கயிறு அணியவில்லையேல் கணவன் உயிருக்கு ஆபத்து, ஆண் குழந்தைகளுக்கான உயிராபத்தைத் தவிர்க்க வீட்டுக்கு வெளியில் விளக்கேற்ற வேண்டும் என்பன போன்ற வதந்திகள் கிளம்பின. இந்த வதந்திகளுக்குப் பின்னணியில் ஆண்களின் உயிருக்கு ஆபத்து என பயங்காட்டுவதைப் பார்க்கலாம். ஆணாதிக்க சமுதாயத்தில் அதுதானே எடுபடும்? மாறாக பெண்களுக்கு, பெண் பிள்ளைகளுக்கு ஆபத்து என்றால், அந்த வதந்தி சீந்துவாரின்றி புறக்கணிக்கப்படும் அல்லவா? இந்த மாதிரி மூட நம்பிக்கையைப் பரப்புவோர், பில்லி சூனியம் வைத்துப் பிழைப்பு நடத்துவோருக்கு எதிரான சட்டம் கர்நாடகம், மகாராஷ்டிரத்தில் நடைமுறையில் உள்ளது. பகுத்தறிவுப் பூமியான தமிழகத்திலும் அது மாதிரியான சட்டம் கொண்டு வர வேண்டும்.

- ஜி.அழகிரிசாமி, செம்பனார்கோயில்.

கூட்டாட்சி தொடரட்டும்!

முதல்வர்கள் இடத்தை ஆளுநர்கள் பிடிக்கலாமா என்ற தலையங்கத்தின் (ஜூலை -7) தலைப்பே ‘பிடிக்கக் கூடாது!’ என்ற சரியான பதிலையும் தாங்கி நிற்கிறது. மக்கள் அதிபர் (ஜனாதிபதி), மாநில ஆளுநர்கள், மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள் போன்ற பதவிகள் ஆளும் அதிகாரம் பெற்றவையல்ல. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கே ஆளும் அதிகாரம். நடுவண் அரசின் முகவர்களுக்கும், மாநில முதல்வர்களுக்கும் இடையில் ஏற்படும் அதிகாரப் போட்டியில் அரசு நிர்வாகம் முடங்குகிறது; மக்கள் நலன் பாதிக்கப்படுவது வேதனையானது. டெல்லி, புதுச்சேரி என்று தொடர்ந்து ஆளுநர்களைக்கொண்ட மாநில உரிமைகளில் தலையிடுவதை நடுவண் அரசு கைவிட்டு, கூட்டாட்சிக் கட்டமைப்பை உறுதிசெய்ய வேண்டும்.

-அ.ஜெயினுலாப்தீன், சென்னை.

திரையரங்க அவலம்

ஜூலை 7-ல் களந்தை பீர்முகம்மது எழுதிய ‘மூடிய திரையரங்குகளும் மூடாத நினைவுகளும்' கட்டுரையைக் கண்ணுற்றேன். எனது நினைவுகளைத் திறந்துவிட்டது கட்டுரை. திரைப்படங்கள் மனத் திரைகளில் எழுப்பிய மாய பிம்பங்களையும், இன்றைய திரையரங்கப் பின்னணியின் அவலங்களையும் அழகாகவும், நளினமாகவும் சுட்டிக் காட்டிய விதம் பாராட்டுதற்குரியது.

-மீ.ஷாஜஹான், திருவிதாங்கோடு.

காவிரி பெருகட்டும்!

காவிரி பற்றிய கட்டுரைகளைப் படிக்கும்போது மனம் கனத்துவிடுகிறது. மறக்க முடியுமா அந்த ஆடி மாத காவிரியை? மேட்டூரில் இருந்து ஆடி மாதத்தில் தண்ணீர் வருவதே ஒரு திருவிழாதான். ஆடி முதல் தேதிதான் வீட்டுப் பெண்கள் முளைப்பாரி போட்டு வைப்பார்கள். ஆடி பதினெட்டாம் தேதி அந்த முளைப்பாரியைக் காவிரிக் கரையில் வைத்துக் கும்மியடித்து ஆடிப் பாடி காவிரித் தாயை வணங்கி காவிரியில் விடுவார்கள். மூன்று அல்லது ஐந்தாம் ஆடி மாத புதன்கிழமை முன்னோரை வழிபட்டுச் சிறப்புச் செய்வார்கள். இன்றைய காவிரியை நினைத்தால் கண்ணீர் வருகிறது. இனி இயற்கைதான் மனது வைக்க வேண்டும். இந்த வருடம் ஆடி மாதம் காவிரி கரை புரண்டு ஓட வேண்டும். மக்கள் மகிழ்ச்சியும் ஆனந்தமும் பொங்க காவிரியை வழிபட வேண்டும். டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் மனம் குளிர வேண்டும்.

- கார்த்திகேயன் வையாபுரி, சென்னை.

பேசப்படாத ஆளுமை

தமிழகத்தில் பல ஆளுமைகள் பதிவுசெய்யப்படாமலும் பேசப்படாமலும் உள்ளனர். குறிப்பாக, மொழிபெயர்ப்பாளர்கள். அவர்களில் ஒருவரான திருவொற்றியூரானடிமை என்று அழைக்கப்படும் த.ப.ராமசாமிப்பிள்ளை, எவ்வாறு வேத மொழிபெயர்ப்புகளின் முன்னோடிப் புரவலராக விளங்கிவருகிறார் என்பதைக் கட்டுரை மூலம் வெளிப்படுத்தியுள்ளார் ரெங்கையா முருகன். ஒரு மொழிபெயர்ப்பாளராக மட்டுமின்றி சென்னையில் பல முக்கிய இடங்களைத் தானமாக அளித்துள்ளார் என்பது மிக முக்கியமான பதிவு.

-பொன்.குமார், சேலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x