Published : 03 Jul 2017 10:31 AM
Last Updated : 03 Jul 2017 10:31 AM
பல இனங்கள், மதங்களைக் கொண்டது இந்த தேசம் என்பதைப் படையெடுத்துவந்த இஸ்லாமிய மன்னர் பாபர் புரிந்துகொண்ட அளவுக்குக்கூட இம்மண்ணின் மைந்தர்கள் என்று கூறிக்கொள்ளும் பாஜகவினர் புரிந்துகொள்ளவில்லை. பாபர் தனது மகன் ஹுமாயூனுக்கு எழுதிய கடிதத்தில் ‘பல இனங்கள் மற்றும் பல மதங்கள் உள்ள நாடு இந்தியா. எந்தவொரு மதத்தைச் சார்ந்தவரது புனிதத் தலங்களின் தெய்வீகத்தன்மையையும் சிதைக்காதே’ என எழுதியுள்ளார். ஹால்டி போரின்போது, அக்பரின் படையை வழிநடத்தியவர் ராஜபுத்திர இனத்தைச் சார்ந்த மான்சிங். ராணா பிரதாப்பின் படையை வழிநடத்தியவர் ஹக்கீம்கான் சூர் என்கிற இஸ்லாமியர்.
1857-ல் நடைபெற்ற முதல் விடுதலைப் போரின்போது ராணி லட்சுமிபாயின் படையில் ராணுவ ஜெனரலாக இருந்தவர்கள் குலாம் கவுஸ்கான் மற்றும் குதாத்கான் என்கிற இஸ்லாமியர்கள். ஜான்சி கோட்டையின் கதவுகளைப் பாதுகாப்பதற்காக அவர்கள் உயிரிழந்தனர். சங்பரிவாரங்கள் கொண்டாடும் சத்ரபதி சிவாஜியின் பாதுகாப்பு உட்பட பல உயரிய பதவிகளில் இஸ்லாமியர்கள் இருந்தார்கள் என்பதும் வரலாறு. ஏகாதிபத்திய அணுகுமுறையோடு கூடிய ஆட்சியாக இருந்தாலும், இவர்கள் ஆட்சியில் எங்குமே மதம் குறுக்கிடவில்லை.
இதை உணர்ந்து சமூகப் பொறுப்போடும், துணிச்சலோடும் எழுதப்பட்டுள்ளது ஜுன் 29 அன்று வெளியான தலையங்கம். சமூக வன்முறைக்கு எதிராக மதங்களைக் கடந்து ஒவ்வொருவரும் போராட வேண்டிய தருணமிது என்பதைத் தலையங்கம் தெளிவாக சுட்டிக்காட்டியது.
- சே.செல்வராஜ், தஞ்சாவூர்.
தனிமனிதக் கடமையும்கூட!
ஜூன் 30-ல் வெளியான ‘மந்த்சவுர் விவசாயிகளின் கதை’ கட்டுரை அரசாங்கத்தின் நிர்வாகக் கோளாறையும், அக்கறையின்மையையும் வெளிப் படுத்தியது. மகாராஷ்டிராவில் விதர்பா விவசாயிகள், தமிழகத்தில் டெல்டா விவசாயிகள் தற்போது மந்த்சவுர் விவசாயிகள் என்று வாழ்வாதாரத்துக்காகவும், கடன் சுமைக் காகவும் போராடுவோர் பட்டியல் நீண்டுகொண்டே போவது வேதனை தருகிறது. அரசாங்கத்தை மட்டும் குறைகூறாமல், தனி மனிதரிடத்திலும் மாற்றம் ஏற்பட வேண்டும். சுற்றுச்சூழலைப் பேணிக் காப்பது ஒவ்வொருவருடைய கடமையாக இருக்க வேண்டும்.
- த.சுதன், தஞ்சாவூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT