Published : 28 Jul 2017 10:29 AM
Last Updated : 28 Jul 2017 10:29 AM
ஏறத்தாழ 53 ஆண்டுகளாக தனுஷ்கோடி தவங்கிடந்த தேவை
இப்போது நிறைவேறியிருக்கிறது. மனித வாழ்க்கைக்குத் தகுதியற்றதென அரசால் தடைசெய்யப்பட்டிருந்த அந்த இடம், இன்று தேசிய நெடுஞ்சாலையினால் மனிதப் புழக்கத்துக்குத் தகுதி பெற்றுள்ளதுடன், அரிச்சல்முனை வரை சாலை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சியான செய்தி.
மூன்று வருடங்களுக்கு முன்னால், தமிழ்நாட்டுக் கடற்கரை நெடுகப் பயணித்து, கடலையும் கடல்சார் மக்களின் வாழ்க்கையையும் வாசக வெளியில் கொணர்ந்த ‘தி இந்து’ நாளிதழ், ‘பேய் நகரம் நோக்கி ஒரு பயணம்’ என்னும் தலைப்பில் தனுஷ்கோடியின் வரலாற்று அவலத்தைக் கவனப்படுத்தியிருந்தது (‘நீர், நிலம், வனம்’ தொடர்). ‘தி இந்து’வின் பங்களிப்பு தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை நிறுவுவதற்கு அடிப்படையாக அமைந்தது. ‘தி இந்து’வுக்கு என் உளமார்ந்த பாராட்டுகள்!
- பேராசிரியர் வறீதையா கான்ஸ்தந்தின், மின்னஞ்சல் வழியாக.
கலாம் சிறப்பிதழ்
ம
றைந்த குடியரசுத் தலைவர், அப்துல் கலாமின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் (ஜூலை - 27) வெளியான 12 பக்கச் சிறப்பிதழை வாசித்தேன். கலாம் பற்றிய பயனுள்ள தகவல்களையும், அரிதான படங்களையும், அறிவியலாளர்கள், நண்பர்களின் கருத்தையும் வெளியிட்டு கலாமை கௌரவித்திருப்பதுடன், வாசகர்களுக்கும் உதவிசெய்திருக்கிறது ‘தி இந்து’. பாம்பன் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில், மீனவர்கள் தாங்கள் பிடித்த மீன்களைக் கொண்டு செல்வதற்கு வசதியாக ஐஸ் பெட்டிகளுடன் கூடிய ரயில் இயக்க வேண்டும் என்ற கலாமின் நிறைவேறாத கனவையும் மலர் சுட்டிக்காட்டியிருக்கிறது. ஆவன செய்யுமா அரசு?
-நாகராஜன், கடலூர்.
மனதில் கொள்ள வேண்டும்
ம
ெக்காலே கல்வித் திட்டத்தால் மூக்குக் கண்ணாடியில் முதலீடு போட்டவனுக்கே லாபம் என்று கவிஞர் வைரமுத்து எழுதிய வரிகளை நினைவுபடுத்துகிறது ஆயிஷா இரா.நடராசன் ‘காந்தியக் கல்வியும் மெக்காலே வாதிகளும்’ என்னும் கட்டுரை (ஜூலை - 27). ‘மெக்காலே கல்வித் திட்ட’த்தால் பலன் இல்லை என்பதையும் அதற்கு மாற்றாக காந்தி முன் வைத்த ‘வார்தா கல்வி திட்ட’த்தால் என்ன பலன் என்பதையும் அழகாக விளக்கியது கட்டுரை. பள்ளி மாணவர்களுக்காக காந்தி உருவாக்கிய ‘படித்துக்கொண்டே சம்பாதிக்கும், சம்பாதித்துக்கொண்டே படிக்கும் தொழில் பட்டறை உற்பத்திக் கல்வியை சீனா நடைமுறைப்படுத்தி, அதன் வாயிலாக இப்போது பத்தி முதல் கைபேசி வரை நம் நாட்டுச் சந்தையை நிரப்பிவிட்டது’ என்ற வரிகள் சிந்திக்க வைக்கின்றன. ஆயிஷா இரா.நடராசனின் கோரிக்கையை தமிழகக் கல்விக் குழுக்கள் மனதில் கொள்ள வேண்டும்.
-பொன்.குமார், சேலம்.
வடிகட்டல் கூடாது
ஐ
ந்து மற்றும் எட்டாம் வகுப்புகளில் வடிகட்டல் கொணரப்போவதான அறிவிப்பு மிகப் பிற்போக்குத்தனமானது. தண்டனை, வடிகட்டல் ஆகியவை மாணவரிடம் அச்சத்தை உருவாக்கி, படிப்பில் அதிக கவனம் செலுத்துவர் என்ற நம்பிக்கையே இம்முடிவுக்குக் காரணம். தேர்வுகளின் ஆதிக்கம் இல்லாத, அச்சம் தவிர்த்த வகுப்பறையே இளம் வயதினரின் கல்விக்கு உதவும். சொந்தக் குடிசைகூட இல்லாமல், வீட்டில் கற்கும் சூழல் இல்லாத மாணவரது கற்றல் வேகம் குறைவாகவே இருக்கும். ஆனால், எட்டு ஆண்டுகளில் விட்டதைப் பிடித்துவிடுவார் என்ற அடிப்படையில்தான் முதல் எட்டு ஆண்டுகளில் வடிகட்டல்கூடாது என்று கல்வி உரிமைச் சட்டம் கூறுகின்றது. பல கல்விக் குழுக்களும் பத்தாம் வகுப்பு வரை வடிகட்டல் கூடாதென்றும் பரிந்துரைத்துள்ளன.
- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.
நெஞ்சம் கனத்தது
பிரபஞ்சனின், ‘எமதுள்ளம் சுடர் விடுக’ தொடர் நல்ல தொடக்கம். வ.ரா.வின் ‘மகாகவி பாரதியார்’ நூலினைப் படித்து, முக்கிய செய்திகளை எடுத்துக்காட்டி, அதன் மதிப்பீட்டை மிக நேர்த்தியாக அளித்துள்ளார். கூட்டத்துக்குத் தலைமை ஏற்க அழைக்க வந்த மகாகவி பாரதியை, மகாத்மா காந்தியிடம் சரியான முறையில் அறிமுகப்படுத்தவில்லை என்ற செய்தியைப் படித்தபோது நெஞ்சம் கனத்தது. இன்னும் சுடரவிருக்கும் கட்டுரைகளை வரவேற்போம்.
- புவனகிரி.ச.வேல்முருகன், மேல்மருவத்தூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT