Published : 27 Jul 2017 09:25 AM
Last Updated : 27 Jul 2017 09:25 AM
வீட்டு வேலைக்கு அங்கீகாரம்
ஜூ
லை 24-ல் வெளியான, ‘வீட்டு வேலை செய்பவர்களுக்கு அங்கீகாரம் தேவை! என்ற கட்டுரையைப் படித்தேன். வறுமையும், கணவனால் கைவிடப்பட்டும், போதைக்குக் கணவனைப் பலி கொடுத்தும், படிப்பறிவு இல்லாமலும், தனது குழந்தைகளை வளர்த்தெடுப்பதற்காகவும் வீட்டு வேலைக்குச் செல்லும் பெண்களை, பணம் இருக்கும் பண்பாளர்கள் சுரண்டுகிறார்கள். வறுமையை ஒழித்து சமமான வளர்ச்சி பேணுவதே அரசின் லட்சியம் என்று முழங்கும் அரசுகளும், இவர்களைத் தொழிலாளர்களாக அங்கீகரிக்காமல் இருப்பது வேதனையானது. ஏழைகள் எப்போதும் அரசின் நலத்திட்டங்களைச் சார்ந்தே தங்களது காலத்தைக் கழிக்க வேண்டும் என்று அரசு எண்ணுகிறதா? இதுபோன்று வறுமையில் வாடும் பெண்கள்தான் வாக்குச்சாவடிக்குச் சென்று 100% வாக்களிக்கின்றனர். பசுக்களுக்காகச் சட்டம் இயற்றும் நாடாளுமன்றம், வறுமையில் உழலும் இவர்களுக்காக ‘வீட்டு வேலை செய்வோர் பணி ஒழுங்கமைவு மற்றும் சமூகப் பாதுகாப்புச் சட்டம்' இயற்ற முன்வர வேண்டும்.
- க.துள்ளுக்குட்டி, நூர்சாகிபுரம்.
நடிகையும் அழகும்!
ந
டிகை சோனம் கபூர் வளரிளம் பெண்களுக்கு எழுதிய கடிதம், ஒரு நடிகை இப்படிச் சிந்திக்க இயலுமா என்று என்னைப் பிரமிக்க வைத்தது. ‘இளம் வயதினர் நடிகர்- நடிகைகளைப் பார்த்து அவர்களைப் போல அழகாக இல்லையே என்ற தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளாமல், தங்களின் தனித்தன்மையை வளர்த்துக் கொள்ளவேண்டும். புற அழகைவிட, உள்ள அழகே சிறந்தது என்று உணர வேண்டும்’ என்ற சோனம் கபூரின் பதிவைத் தமிழில் மொழி பெயர்த்த பூ.கொ.சரவணனுக்குப் பாராட்டுகள்.
- ராம பழனியப்பன், மின்னஞ்சல் வழியாக.
நாடென்பது மக்கள் இல்லையா?
ஆ
ங்கிலேயர்கள் நமது நாட்டின் வளங்களையும் பொக்கிஷங்களையும் அபகரித்ததை விஞ்சும் அளவுக்கு இருக்கிறது, டெல்டா மாவட்டங்களை பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அமைக்கும் மத்திய - மாநில அரசுகளின் அறிவிப்பு. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 20 கிராமங்களிலும், கடலூர் மாவட்டத்தில் 25 கிராமங்களிலும் சுமார் 57,345 ஏக்கர் வளமான விளை நிலங்களைக் கையகப்படுத்தி, சுமார் 92,000 கோடி முதலீட்டில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கப்படுவதை அனுமதிக்க இயலாது. மேற்கு வங்கத்தில் விரட்டப்பட்ட இத்திட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த அனுமதித்தால், மக்களின் வாழ்வாதாரமும் சுற்றுச்சூழலும் முற்றிலும் அழியும் பேராபத்து உள்ளது.
- அ.அப்பர்சுந்தரம், மயிலாடுதுறை.
ஆயுதமும் தேசத் துரோகமும்
த
னுஷ் பீரங்கிக்கான உதிரி பாகங்களை ஜெர்மனி நாட்டில் தயாரித்ததாகக் கூறி சீனாவில் போலியாகத் தயாரிக்கப்பட்ட செய்தி (ஜூலை-23) அதிர்ச்சி அளிக்கிறது. போர்க்களத்தில் தங்கள் உயிரையும் துச்சமெனக் கருதிப் போராடும் நம் வீரர்கள் இத்தகைய மட்டமான ஆயுதங்களைப் போரில் பயன்படுத்தினால் ஏற்படும் விளைவுகள் ஆபத்தானது. இந்த அவலமான ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகள், அமைச்சர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு ராணுவ நீதிமன்றம் மூலம் தண்டனை கொடுப்பதுதான் சரியானது. இவர்களை நம்பித்தானே எண்ணற்ற வீரர்களும் அவர்களது குடும்பத்தினரும் நாட்டின் பாதுகாப்புக்குத் தங்களையே அர்ப்பணிக்கின்றனர். இது தேசத் துரோகம் இல்லையா?
-ரங்கராஜன், சென்னை.
ஒரு மதிப்பெண் விளைவு!
வ
ந்தேமாதரம் பாடல் எழுதப்பட்டது வங்க மொழியிலா, சம்ஸ்கிருதத்திலா என்பது தொடர்பாக விழுப்புரத்தைச் சேர்ந்த வீரமணி தொடர்ந்த வழக்கில், நீதிமன்றம் அவருக்கு ஒரு மதிப்பெண் வழங்கவும் பணி வழங்கவும் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது (ஜூலை -26). முயற்சியுடன் போராடிய வீரமணி இன்றைய இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டு. இது போன்று முறையீடுகள் வரும்போது, ஆசிரியர் தேர்வு வாரியம் முறையீட்டில் உள்ள நியாயத்தை உணர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பாபநாசம் நடராஜன், தஞ்சாவூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT