Published : 14 Jul 2017 10:12 AM
Last Updated : 14 Jul 2017 10:12 AM
மத்திய அரசின் மதச்சார்புக் கொள்கை, வெளிநாட்டு ஆய்வு மாணவர்கள் இந்தியாவில் மேற்கொள்ளும் ஆராய்ச்சிகளுக்கு முட்டைக்கட்டையாக மாறிக்கொண்டிருக்கிறது. அமெரிக்கப் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் ஒருவர் தன்னுடைய ஆராய்ச்சிப் பணிகளுக்காக இந்தியா வருவதற்கு விசா கேட்டு விண்ணப்பித்திருந்தார். தமிழ் இலக்கியக் கலாச்சாரத்துக்கு ஐரோப்பியர்களின் பங்களிப்புகள் அவரது ஆய்வின் ஒரு பகுதியாக அமைந்திருந்தது. அந்த மாணவர் ஓராண்டுக்கு முன்னால் ஆராய்ச்சியைத் தொடங்கியபோது அவர் இந்தியா வந்துபோவதற்கு எந்தச் சிக்கலும் உருவாகவில்லை.
ஆனால், அந்த மாணவர் மீண்டும் தனது ஆய்வைத் தொடர்வதற்காக இந்தியா வருவதற்கு இந்த ஆண்டில் இரண்டு முறை விசா மறுக்கப்பட்டது. அந்த மாணவர் ஆய்வுக்காக இணைந்துள்ள கல்வி நிறுவனம் அரசு அங்கீகாரம் பெறவில்லை என்பதுதான் விசா மறுப்புக்குச் சொல்லப்பட்ட காரணம். அங்கீகாரம் இருப்பதற்கான ஆவணத்தை அனுப்பிய பின் தூதரகம் அந்த மாணவரை நேர்காணலுக்கு அழைத்தது. ஆச்சர்யம்... இந்த முறை அவருக்கு விசா கிடைத்துவிட்டது. அவர் தமிழ் மட்டுமல்ல, சம்ஸ்கிருதமும் அறிந்தவர். ஆய்வோடு தொடர்பில்லை என்பதால் அதைப் பற்றி அவர் விசா விண்ணப்பத்தில் குறிப்பிடவில்லை.
இரண்டாவது நேர்காணலில் தான் சமஸ்கிருதம் படித்ததைச் சொல்லி அதன் பெருமையைப் புகழ்ந்தபின் சந்தேகம் தீர்ந்து தூதரகம் விசா வழங்க ஒப்புக்கொண்டுவிட்டது. மொழி, கலாச்சாரம் தொடர்பான ஆராய்ச்சியை இந்திய அரசு எப்படித் திசைதிருப்ப விரும்புகிறது என்பதற்கு ஒரு உதாரணம் இது. வெளிநாட்டு மாணவர்கள் எந்தெந்த ஆய்வுகளில் ஈடுபட்டால் அவர்களுக்கு இந்திய அரசின் வரவேற்பு கிடைக்கும் என்பதைக் காட்டும் சூசகம். இந்தியப் பல்கலைக்கழகங்களின் மானியங்கள் மூலம் இந்திய மாணவர்களின் ஆய்வுத் திசையைத் திருப்புவதும் வரும் காலத்தில் நடக்க முடியாத ஒன்றல்ல.
- பெயர் வெளியிட விரும்பாத வாசகர்
சலிமீற்கு ஒரு சலாம்
அமர்நாத் தாக்குதல் குறித்த ‘தி இந்து’ நாளிதழின் செய்தியும் (ஜூலை 13) அதில் இடம்பெற்ற ஓட்டுநரின் பேட்டியும் உணர்ச்சிகரமாக அமைந்திருந்தன. காஷ்மீர் அமர்நாத் யாத்திரை சென்ற பயணிகள்மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கடவுள் நம்பிக்கையும் வழிபாடும் தனிமனித உரிமை. அதில் பயங்கரவாதம் தலையிடுவதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது. அந்த யாத்திரை சென்ற பேருந்தின் ஓட்டுநர் சலீம் மிர்சாவின் சாமர்த்தியத்தை அனைவரும் பாராட்ட வேண்டும். ஒரு தாக்குதல் என வருகிறபோது பயணிகளைக் காப்பாற்றுவதே அந்த ஓட்டுநரின் நோக்கமாக இருந்துள்ளது.
பேருந்து உரிமையாளரின் மகன் ஹர்ஷ்பாய்க்கோ, பயணிகள் பாதுகாப்போடு தனது தொழிலாளியின் உயிரும் முக்கியமாகப் படுகிறது. உயிரைக் காத்துக்கொள்ள குனிந்துகொண்டு பேருந்தை இயக்க ஆலோசனை தருகிறார். சலீம் குனிந்தவுடன் பயங்கரவாதிகளின் துப்பாக்கி குண்டு ஹர்ஷ்பாய்மீது பாய்ந்து அவர் உயிரிழக்கிறார். இங்கு இந்து, இஸ்லாமியர் என்கிற மதவேறுபாடு எங்குமே இல்லை. இவரைப் போன்ற மனிதர்கள்தான் இந்தியாவில் அதிகம். அதுதான் இந்தியாவை இப்போதும் வாழவைத்துக்கொண்டிருக்கிறது. சலீமிற்கு ஒரு சலாம்.
-சே. செல்வராஜ், தஞ்சாவூர்.
காப்பது கடமை
செம்மொழி தமிழாய்வு நிறுவனம் அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை முழுவதுமாகப் பயன்படுத்தவில்லை, சரியாக இயங்குவதில்லை என்ற குற்றச்சாட்டுக்களையும் நாம் புறம்தள்ளிவிட முடியாது. அதற்கு அரசியல் கட்சிகள் சாராத, துறை சார்ந்த தமிழாய்ந்த அறிஞர்கள் தலைமை இல்லாததைக்கூட காரணமாக கூறலாம். பல நேரங்களில் பாராமுகமாய் இருந்ததன் பலனாகதான் இன்று அதைக் காக்கும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
தமிழக அரசு மத்திய அரசுக்கு சரியான அழுத்தம் கொடுத்து செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை தன்னாட்சி அமைப்பாகத் தொடரச் செய்ய வேண்டும். அதே நேரத்தில், சிறப்பாகச் செயல்படவும் ஆவன செய்யவேண்டும்.இது ஒரு ஆய்வு நிறுவனம் மட்டுமல்ல தமிழரின் பண்பாடு, பாரம்பரியம், கலச்சாரத்தின் அடையாளம். தமிழரின் உரிமையும் கூட. ஆளும் மத்திய அரசின் நோக்கம் முடக்குவதாய் இருந்தால், காப்பது நமது கடமையல்லவா?
- மு.விஜயலட்சுமி, மின்னஞ்சல் வழியாக
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT