Published : 24 Jul 2017 09:11 AM
Last Updated : 24 Jul 2017 09:11 AM
விழிப்புணர்வே தீர்வு
ஞா
யிறு அரங்கில் ‘தொல்லியல் சின்னங்களை நாம் பாதுகாக்கிறோமா?’ என்ற விவாதத்தை வெளியிட்டிருப்பது பாராட்டுக்குரியது. தொல்லியல் சின்னங்களுக்கு இந்தியாவில் மூன்றுவித பிரச்சினைகள் நேர்கின்றன. ஒன்று, மதம் சார்ந்த பிரச்சினை. தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் என்று பார்ப்பதற்குப் பதிலாக அவற்றிற்கு மத முத்திரை குத்தப்பட்டு புறந்தள்ளப்படுகிறது அல்லது சிதைக்கப்படுகிறது. இரண்டாவது பிரச்சினை ஆளும் ஆட்சியாளரால் வருவது. மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் காட்டும் அக்கறையை இதுபோன்ற சின்னங்களைப் பராமரிப்பதில் அவர்கள் காட்டுவதில்லை. மூன்றாவது, வரலாற்றுப் புரிதலற்ற மக்களால் நேரும் பிரச்சினை. அரசியல்வாதிகள், ஆட்சியாளர்களால் இம்மாதிரியான தொல்லியல் இடங்களுக்கு நேரும் பிரச்சினைகளைக் காட்டிலும் இங்குள்ள வரலாற்றுப் புரிதலற்ற மக்களால்தான் அதிகம் நேர்கிறது என்பது உண்மையே. ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள் மேற்கொள்ளும் அழிவு, வெளியில் இருந்து நிகழ்த்தப்படுகிறது. ஆனால் பொதுமக்கள் சின்னங்கள் அமைந்த இடத்துக்குள் சென்று நிகழ்த்தும் அழிவுகள் கவலையோடு பார்க்க வேண்டியவை. பாரம்பரியச் சின்னங்கள் பற்றிய விழிப்புணர்வே இப்பிரச்சினைக்குத் தீர்வு.
-பேராசிரியர் செ.சேவியர், பெரியார் ஈ.வெ.ரா. தன்னாட்சிக் கல்லூரி.
கண்ணியமான ஓய்வூதியம்
ஓ
ய்வூதியம் ஒருபோதும் சலுகையல்ல, அது அரசின் கடமையே. இது பத்திரிகையாளர்களுக்கும் பொருந்தும். (ஜூலை 21, தலையங்கம்) பத்திரிகையாளரின் பணி நாட்டை எதிரிகளிடமிருந்து காப்பாற்றும் ராணுவ வீரரின் பணிக்கு இணையானது. அவர்கள் மக்கள் குரலை பிரதிபலிப்பவர்கள் மட்டுமல்ல, அரசையும் மக்களையும் இணைக்கும் பாலமாக இருப்பவர்கள். இந்தியாவைப் பொறுத்தவகையில் ஆபத்தான பணியும்கூட. ஆகவே இவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கு கடினமான விதிமுறைகளைத் தவிர்த்து ஒவ்வொரு பத்திரிகையாளரும் ஓய்வு காலத்தை கண்ணியமாகக் கழிக்க உதவ வேண்டும்.
-எஸ்.சொக்கலிங்கம், கொட்டாரம்.
சிறை தரும் செய்தி!
த
வறு செய்பவர்கள் காவல் துறையால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். தண்டனைக் காலம் முடிந்ததும் அவர்கள் திருந்தி வெளிவருவார்கள் என்பது பொதுவான நம்பிக்கை. அதனை ஊக்கப்படுத்தும் விதமாக சிறையில் நன்னடத்தையுடன் இருப்பவர்களுக்கு விரைவாக விடுதலை வழங்கும் நடைமுறையும் இங்கே கடைப்பிடிக்கப்படுகிறது. இதற்காக நன்னடத்தை அதிகாரி என்றொருவர் சிறையில் பணியமர்த்தப்பட்டிருக்கிறார். கைதிகளை விடுங்கள், நம்முடைய சிறைக் காவலர்களும், சிறை அதிகாரிகளும் உண்மையிலேயே நன்னடத்தையோடுதான் இருக்கிறார்களா? பணத்தை வாங்கிக்கொண்டு சிறைச்சாலையைக் குற்றவாளிகளின் சொர்க்கபுரியாக மாற்றித் தருகிறார்கள் என்றால், தண்டிக்கப்பட வேண்டியது யார்? சிறைத் துறை நடைமுறைகளை மாற்ற வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்.
-சின்னச்சாமி, திருவண்ணாமலை.
ஊதியதாரர்களுக்கும் வாய்ப்பு வேண்டும்!
ஜூ
லை 22-ல் வெளியான, ‘வாசகர் திருவிழா’ படித்தேன். சென்னையில் வருடத்துக்கு இருமுறை புத்தகக் கொண்டாட்டம் என்பது புத்தகப் பிரியர்களுக்கு இரட்டிப்பு விருந்துதான் என்பதில் ஐயமில்லை. ஆனால் மாத இறுதியில் வருவதால் நடுத்தர வர்க்கம் மற்றும் மாதாந்திர ஊதியதாரர்களில் உள்ள புத்தகப் பிரியர்களுக்கு தங்களுக்குப் பிடித்த புத்தகத்தை வாங்க சற்று சிரமம் ஏற்படும். 31-ம் தேதியன்று புத்தகக் காட்சியை முடிக்காமல் அதனை ஓரிரு தினங்கள் நீடித்தால் மாதாந்தர ஊதியதாரர்களும் தங்களுக்குத் தேவையான புத்தகங்களை வாங்க ஒரு சந்தர்ப்பம் அளிக்கலாமே? அதைப்போன்று இனிவருங்காலங்களில் புத்தகக் காட்சிகளை மாத இறுதியில் ஆரம்பித்து மாத துவக்கத்தில் முடிப்பது போல ஏற்பாட்டினை செய்தால் இருதரப்பினருக்கும் நல்லது. ஏற்பாட்டாளர்கள் இதைக் கவனத்தில் கொள்வார்களா?
-வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT