Published : 02 Aug 2016 05:44 PM
Last Updated : 02 Aug 2016 05:44 PM
>‘குளச்சல் - இணையம் பெருந்துறைமுகத் திட்டம்: போகாத ஊருக்கு வழி’ என்ற கட்டுரை 27.7.16 அன்று வெளியாகியிருந்தது. ‘இணையத்தில் சர்வதேசத் துறைமுகம் அமைக்க வேண்டிய தேவையே இல்லை, அங்கே கடலரிப்பு அதிகம் இருக்கும், கடலின் இயற்கையான ஆழமும் குறைவு’ என்பது போன்ற தவறான தகவல்கள் அதில் இடம்பெற்றிருந்தன.
இந்தியாவில் கொல்கத்தா, சென்னை, தூத்துக்குடி, வல்லார்பாடம் உள்பட 12 பெரிய துறைமுகங்களும், 250 சிறிய துறைமுகங்களும் இருந்தாலும்கூட, அவை சர்வதேசக் கப்பல் வழித்தடத்தில் இருந்து தள்ளியிருப்பதுடன், போதிய ஆழமின்றியும் உள்ளன. ஆக, குறைந்தபட்சம் ஒருநாள் பயண தூரங்களில் சர்வதேச சரக்குப்பெட்டகப் பரிமாற்ற முனையமாகச் செயல்படும் சாத்தியமின்றி அவை உள்ளதால், நாட்டுக்கு மிகப்பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.
எனவே, சர்வதேசக் கடல்வழித் தடத்துக்கு மிக அருகில் உள்ள இணையத்தில் சர்வதேச சரக்குப்பெட்டகப் பரிமாற்ற முனையம் அமைப்பது இன்றியமையாததாகிறது. இணையம் முதல் குமரி வரையுள்ள கடற்கரையை ஆராய்ந்தபோது, இணையம் கடற்கரைக்கு அருகில்தான் (1.5 கி.மீ. 2 கி.மீ தூரத்தில்) ஆழமான பகுதி இயற்கையாக அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி, சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ‘தொடர்கடலோர மேலாண்மைக்கான தேசிய மைய' ஆய்வின்படி, இணையம் கடற்கரை குறைந்த அளவு கடல் அரிப்பும், மணல் குவிப்பும் உள்ள பகுதி என்று கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, இணையம் துறைமுகம் வெற்றிபெறும். துறைமுகத் தடுப்புச் சுவர்களால் கடற்கரை பிராந்தியங்களில் நில அரிப்பும், பாதிப்பும் ஏற்படும் என்பதும், இணையம் துறைமுகம் மற்ற இந்திய துறைமுகங்களின் வியாபார இழப்புக்கு வழிவகுக்கும் என்பதும் தவறான கூற்று.
- சு.நடராஜன்,சிறப்பு அதிகாரி, இணையம் துறைமுகத் திட்டப் பணிகள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT