Published : 05 Sep 2016 08:55 AM
Last Updated : 05 Sep 2016 08:55 AM
ஒருதலைக் காதல் கொலைகள் குறித்த முழுப் பக்கக் கட்டுரை வாசித்தேன். திரைப்படங்களுக்கு மட்டுமல்ல, செய்தி ஊடகங்களுக்கும் இதில் பங்கு உண்டு. திரைப்படங்களில், இளைஞர்கள் என்றால் காதலித்தே ஆக வேண்டும், மது குடித்தே ஆக வேண்டும் என்று தொடர்ந்து காட்சிகளை முன்வைக்கிறார்கள். செய்தி சேனல்களிலோ, உடுமலை சங்கர் கொலை செய்யப்பட்ட காட்சிகளை ஒளிபரப்ப வேண்டிய அவசியம் இல்லாதபோதும், தொடர்ந்து ஒளிபரப்பினார்கள்.
இதன்பிறகு, பொதுவெளியில் பலர் முன்னிலையில் கொலை செய்யும் துணிச்சல் அதிகரித்துள்ளது. எதைக் காட்டணும், எதைக் காட்டக் கூடாது என்ற சுயதணிக்கை காட்சி ஊடகங்களுக்குச் சுத்தமாக இல்லை. அடுத்தது பெற்றோர். எனக்குக் கிடைக்காதது என் பிள்ளைக்குக் கிடைக்கணும் என்று பெற்றோர்கள் நினைப்பதில் தவறில்லை. ஆனால், தோல்வியையும் ஏமாற்றத்தையும் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவத்தைப் பிள்ளைகளுக்கு உருவாக்க வேண்டியது பெற்றோர்களின் முக்கிய கடமையாகும். ‘எனக்குக் கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக் கூடாது’ என்ற இரக்கமற்ற மனநிலைதான், காதலிக்க மறுக்கும் பெண்கள் கொலை செய்யப்படுவதற்குக் காரணம்.
நவீன வாழ்வு, கொலைகளைப் புதிது புதிதாக வகைப்படுத்திக்கொண்டே இருக்கிறது. ஆணவக் கொலைகளுக்கு அடுத்ததாக தற்போது காதல் கொலைகள் பெருகிவருகின்றன. ஆறறிவுள்ள நாகரிகச் சமூகம் என்று சொல்லிக்கொள்ள வெட்கமாக இருக்கிறது!
- ஜெ.செல்வராஜ், வேடசந்தூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT