Published : 15 Mar 2017 10:06 AM
Last Updated : 15 Mar 2017 10:06 AM
மார்ச் 10 அன்று வெளியான தலையங்கம் (தமிழும், தமிழருமே முதன்மை அக்கறை!), தமிழகத்தின் 50 ஆண்டுகால வரலாற்றையும், ‘உனக்குள் ஓர் ஐ.ஏ.எஸ்.’ பயிலரங்கத்தின் தேவையையும், ‘தி இந்து’வின் பொறுப்புணர்வையும் ஒருசேரப் பறைசாற்றியது. அறிவுசார் தளத்தில் தமிழர்களின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்யும் முயற்சியில் ‘தி இந்து’ இறங்கியிருப்பது, நம் தமிழ்ச் சமூகம் முன்னேற்றப் பாதையில் நிமிர்ந்து செல்ல வேண்டும் என்ற அக்கறை கொண்டவர்களைப் பெருமைகொள்ள வைக்கிறது!
- இரா.முத்துக்குமரன், குருங்குளம் மேல்பாதி.
வாய்மையே வெல்லும்!
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த வதந்திகளால் மருத்துவ உலகமே மன உளைச்சலில் உள்ளதாக மாநில மருத்துவ கவுன்சில், இந்திய மருத்துவக் கழகம் விடுத்த அறிக்கைகள் குறித்த செய்தி (மார்ச் 8) படித்தேன். அரசு சார்பில் ஒவ்வொரு முறை விளக்கங்கள் வெளியாகும்போதும், புதிது புதிதாகச் சந்தேகங்களும் எழுகின்றன. அரசியல் லாப, நஷ்டங்களைத் தவிர்த்து, உண்மையைச் சொல்வதும் உண்மையை நோக்கிச் செல்வதும் மட்டுமே இப்பிரச்சினைக்கான தீர்வு. உண்மையாக நடந்துகொள்ளும் பட்சத்தில் மன உளைச்சலுக்கு இடமில்லையே!
- ஜி.அழகிரிசாமி, செம்பனார்கோயில்.
ஆழமான பிரதிபலிப்பு
மார்ச் 8 அன்று, மகளிர் தினச் சிறப்பாக வெளியான பெருந்தேவியின் ‘சுசிலீக்ஸ் தொடர்பாக நான் என்ன நினைக்கிறேன்’ கட்டுரை, இன்றைய காலச் சூழலில் பெண் மனதின் நுண்ணுணர்வுகளை ஆழமாகப் பிரதிபலித்திருக்கிறது. ஆணாதிக்க சமூக அமைப்பின் அதிகாரத்தைக் கேள்வி கேட்டிருக்கிறது. கட்டுரையின் துவக்கத்தில் குறிப்பிட்டிருக்கும் உணர்வை அனுபவிக்காத பெண்களே இன்று இருக்க முடியாது. ஒற்றை மொபைல் கேமரா வழியாக, நம்மைச் சமூகமே கண்காணிக்கிறது. நம் சுதந்திரத்தில் தலையிடுகிறது. நம் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துகிறது. என்ன செய்யப்போகிறோம் என்பதுதான் பேருரு கொண்டு நிற்கிறது.
- ரஞ்சனி பாசு, ‘தி இந்து’ இணையதளம் வழியாக.
புரிய வைக்காதது யார் தவறு?
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து 20 நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் தொடர்கிறது. மத்திய - மாநில அரசுகள் மௌனம் காக்கின்றன. அதிகாரிகளோ டிவி பேட்டியில், ‘ஹைட்ரோ கார்பன் திட்டம் நல்லது. மக்களுக்குத் தொழில்நுட்ப அறிவு இல்லாததால் புரிந்துகொள்ள முடியவில்லை’ என்கிறார்கள். புரிய வைக்க முயன்று, தோற்ற பிறகு இதைச் சொன்னால் ஏற்கலாம். மக்களிடம் பேசாமல், மக்களுக்குப் புரியவைக்காமல் திட்டத்தை நிறைவேற்ற முற்பட்டால் எதிர்ப்பு வரத்தானே செய்யும்?
- எஸ்.மனோன்மணி மோகன், வேலூர்.
நிச்சயம் நிறைவேறும்!
மார்ச் 7 அன்று வெளியான, ‘மாபெரும் கனவின் பெரும் பகுதி இன்னும் மிச்சமிருக்கிறது!’ கட்டுரை, திராவிடக் கட்சியின் ஆளுமைகளில் முதல்வரான அண்ணாவின் முற்போக்கான புரட்சிகர எண்ணங்களை வெளிப்படுத்தியது. “நாட்டுப் பாதுகாப்பு தவிர, மற்ற அதிகாரங்கள் அனைத்தையும் பற்றிச் சிந்திப்போம். மாநிலங்களுக்குத் தேவையான அதிகாரங்களை மாநிலங்கள் எடுத்துக் கொள்ளட்டும். பின்னர், மாநிலங்கள் விரும்பித் தருகின்ற அதிகாரங்களை மத்திய அரசு எடுத்துக்கொள்ளட்டும்” என்ற அவரின் கனவு மட்டும் நனவாகியிருந்தால், ஒவ்வொரு மாநிலமும் தங்களின் கலாச்சாரத்துடனும் மக்களின் இசைவுடனும் இணைந்து வளர்ந்திருக்கலாம்.
- வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT