Published : 26 Apr 2017 10:08 AM
Last Updated : 26 Apr 2017 10:08 AM
மக்களுக்கு மட்டுமல்ல, அரசியல்வாதிகளுக்கே ஒரு விழிப்புணர்வைத் தரும் விதத்தில் அமைந்திருக்கிறது, ‘மோடியின் காலத்தை உணர்தல்!’குறுந்தொடர். ஏப். 25- ம் தேதி வெளியான கட்டுரையில், கொல்கத்தாவில் ஏதோ ஒன்று இருக்கிறது என்று கட்டுரையாளர் குறிப்பிடும் அந்த சுதந்திர உணர்வு உருவாக, அங்கே கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த இடதுசாரிகளுக்கும் பங்கு உண்டு. ஆண் - பெண் பேதமின்றிப் பழகுவது, வங்க மக்களின் எளிய வாழ்க்கை, அரசியல் உணர்வு என அவர்கள் உருவாக்கிக்கொடுத்த பெருமிதங்கள் அனைத்தும் இன்று கேள்விக்குள்ளாகியிருப்பது கீழே பரவும் ஷாகாக்களால் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை.
நிச்சயமாகக் கிழக்கிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய. மாறாக, கிழக்கு மற்ற பகுதிகளிலிருந்து தேவையற்றவைகளை எடுத்துக்கொள்வதுதான் வேதனை. வங்க தேசியக் கேடயம், தமிழ் தேசியக் கேடயம் உள்ளிட்ட அடையாளங்களை அழித்து இந்தி - இந்து தேசியக் கேடயத்தைத் திட்டமிட்டுத் திணிக்கும் ஆர்.எஸ்.எஸ். அரசியலுக்கு எதிராகக் கட்சி வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்து, பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவைப் பாதுகாக்க வேண்டியது அனைத்து அரசியல் கட்சிகளின் முக்கிய கடமை.
- சே.செல்வராஜ், தஞ்சாவூர்.
மாணவர்களின் விருப்பத்துக்கு வழிவிடுங்கள்!
விடுதலை பெற்று 70 ஆண்டுகளாயினும் மொழி ஒரு தீராத பிரச்சினையாகத் தொடர்வதற்கு இந்தி மொழி பேசுவோரின் ஆதிக்க உணர்வே காரணம். பள்ளிகள் மொழி நிறுவனங்கள் அல்ல. தாய்மொழி கட்டாய மொழி, அதுவே பயிற்றுமொழியாக இருப்பதும் உலக இயற்கை. ஆங்கிலம் கட்டாய மொழியாக இல்லாது மாணவரது விருப்பத்துக்கேற்பக் கற்க வாய்ப்பு தர வேண்டும். மூன்றாம் மொழி ஒன்று கற்க ஒருவர் விரும்பினால், பள்ளிக்கு வெளியேதான் கற்க வேண்டும். அதனை மொழி நிறுவனங்கள் செய்ய வேண்டும்.
மொழிப் பாடங்களுக்கு அதிக நேரம் ஒதுக்கினால் அறிவியல், சமூகப் பாடங்களுக்கு மட்டுமின்றி, மாணவரது பன்முக வளர்ச்சிக்கு உதவும் உடற்கல்வி, ஓவியம், இசை, கைத்தொழில் போன்றவற்றுக்கான நேரம் குறையும். அதனால், அவற்றின் ஆழமும் சரியும். நான் பிரிட்டனுக்குச் சென்றிருந்தபோது, தான் ஐந்து மொழிகள் கற்பதால் கணிதம் போன்ற பாடங்களினின்றுத் தன்னை விடுவித்துக் கொண்டுள்ளதாகவும் ஒரு பெண் கூறினார். ஐரோப்பிய மொழிகளைப் பள்ளிக்கு வெளியே கற்பதாகவும் யூரோ ரயிலில் பயண வழிகாட்டியாக இருந்திட பன்மொழி அறிவு உதவும் என்றும் கூறினார். மாணவரது சுய விருப்பத்துக்கு இடமளிக்கும் கல்வி முறை இப்படித்தான் இருக்க வேண்டும்.
- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.
பொறுப்பை உணர்வார்களா?
ஏப்ரல் 21 அன்று வெளியான 'பொம்மைகளை இப்படியே இயக்கிவிட முடியுமா?’ கட்டுரை படித்தேன். பல உண்மைகளை அது புட்டுப்புட்டு வைக்கிறது. ஒரு மக்கள் தலைவர், அதுவும் மூன்றாம் வகுப்பே படித்த ஒருவர் உருவாக்கிய அமைப்பை, மக்கள் வெறுக்கும்படியாக உருமாற்றிவிட்டனர் சில பொம்மை இயக்குநர்கள். ஒரு ஆட்சியை இரு அணிகளாக்கி, கந்தல் ஆடைபோல மாற்றவா இவர்கள்? இனிமேலாவது பொறுப்பறிந்து செயல்படுவார்களா அமைச்சர்களும் நிர்வாகிகளும்?
- அ.ராஜப்பன், கருமத்தம்பட்டி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT