Published : 02 Sep 2016 03:41 PM
Last Updated : 02 Sep 2016 03:41 PM
'ஆசிரியர் பணியை விரும்பும் பெண் பொறியியல் பட்டதாரிகள்' என்ற செய்தி படித்தேன். கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற அறிவியலில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு போன்ற தொடர் கல்வியை ஆர்வத்துடன் பயின்று, பின் ஆசிரியர் பயிற்சியையும் முடித்த ஒருவரால்தான் தெளிவாகப் பாடம் நடத்த முடியும்.
மேலும், செய்தியாளர் பேட்டி கண்ட அனைத்துப் பொறியியல் பட்டதாரிகளும் சுயமாக விரும்பி பி.எட்., படிப்பில் சேரவில்லை. தற்போது அவர்கள் பார்த்துவரும் வேலையின் மீது அவர்களுக்கு ஏற்பட்ட பிடிப்பின்மை, சூழலியல் சார்ந்த நிம்மதியின்மையின் காரணமாகத்தான் மாற்றுப் பணியாக ஆசிரியர் பணியினை நாடி வந்துள்ளனர்.
அப்படிப்பட்டவர்களுக்கு ஆசிரியர் பணி மீது முழு நாட்டம் எவ்வாறு ஏற்படும்? எத்தனையோ ராமானு ஜன்களையும், சி.வி.ராமன் களையும் உருவாக்க வேண்டிய ஆசிரியர் பணி, இப்படிப்பட்டவர்களால் நிரப்பப்படுவது வருங்காலச் சந்ததியினருக்கு நல்லதல்ல.
- பி.ஆறுமுகநயினார், திருநெல்வேலி.
*
மழை நீர் சேகரிப்பு
குடிப்பதற்கும் சமையலுக்கும் 28 ஆண்டுகளாக மழை நீரையே பயன்படுத்திவரும் மதுரை சேகர் பற்றிய செய்தி, தமிழர்களுக்கு குறிப்பாக சென்னைவாசிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வருகின்ற மழைக் காலத்தை மனதில் கொண்டு, இப்போது முதலே ஒவ்வொருவரும் சேகர் சொன்னபடி மழை நீர் சேகரிப்பைப் பின்பற்றத் தொடங்கினால், பெருமளவு குடிநீர் பிரச்சினை தீர வாய்ப்புள்ளது. சரியான தருணத்தில் இது பற்றிய செய்தியை வெளியிட்ட 'தி இந்து'வுக்கு நன்றி.
- எம்.ஆர்.சத்யநாராயண், சென்னை.
*
இயற்கையோடு இயைந்த வாழ்க்கை
நகர வாழ்க்கையும், தனிக் குடும்ப வாழ்க்கையும் நம்மை வெகுவாக மாற்றிவிட்டது. இயந்திர வாழ்க்கை வாழ்ந்துகொண்டு, நம் குழந்தை களையும் அந்த படுபாதாளக் குழியில் தள்ளுவதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருக்கிறோம்.
ஆனால், டேவிட் புரூக்ஸின் 'அண்டை வீட்டாருக்கு உங்கள் பெயர் தெரியுமா?' கட்டுரையைப் படிக்கும்போது, வருங்காலத் தலைமுறை நிச்சயம் பழங்கால வாழ்க்கையை நோக்கிச் செல்லும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
- ஜீவன்.பி.கே., கும்பகோணம்.
*
மறுஆய்வு நல்லது
மாநகராட்சி மேயர்களை இனி கவுன்சிலர்களே தேர்ந்தெடுப்பார்கள் எனக் கடந்த ஜூன் மாதம் சட்டத் திருத்தம் செய்த தமிழக அரசு, இப்போது நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர்களும் கவுன்சிலர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவித்திருக்கிறது. ஜனநாயக நடவடிக்கைகளில் மக்களை வெகுவாகக் கொண்டு வருவதன் மூலமே மக்களாட்சி வலுப்படும்.
இந்த மாதிரியான சட்டத் திருத்தங்கள் ஆள் கடத்தல், ஊழல், ஒழுங்கீனம் போன்ற மிக மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும். எனவே, இதுதொடர்பான சட்டத் திருத்தத்தை அரசு மறுஆய்வு செய்வது ஜனநாயகத்துக்கும் மக்களுக்கும் நல்லது.
- நா.வீரபாண்டியன், பட்டுக்கோட்டை.
*
ஆக்கபூர்வமான ஆய்வு
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகும் திட்ட செலவுகளைவிட, வெள்ள நிவாரணப் பணிகளுக்கும், வறட்சி நிவாரணப் பணிகளுக்கும் ஆகும் செலவுகள்தான் அதிகம் என்பது வெளிப்படை. வடக்கு வெள்ளத்தால் பாதிக்கப்படும் அதே நேரம், தெற்கோ வறட்சியால் பாதிக்கப்படுவதும் காலம்காலமாக நடக்கிறது.
அரசோடு இணைந்து மக்களும், தொண்டு நிறுவனங்களும் ஏதாவது செய்தாக வேண்டும். கல்லூரிப் பேராசிரியர்களும், ஆய்வா ளர்களும் செயல்முறைக்கு உதவாத விஷயங்களை ஆய்வதை விட்டுவிட்டு, இந்த மாதிரி விஷயங்களில் கவனத்தைத் திருப்ப வேண்டும்.
- அ.பட்டவராயன், திருச்செந்தூர்.
*
பதைபதைக்க வைக்கிறது
வெள்ள பாதிப்புகளால், 28 ஆண்டுகளில் தோராயமாக 45,000 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்ற செய்தியை 'அறிவியலாகட்டும் நிவாரணப் பணிகள்' தலையங்கத்தில் படித்தபோது நெஞ்சம் பதைபதைக்கிறது.
பிஹார் மாநிலத்தின் கோசி ஆறு பிரச்சினையைக் காலங்காலமாகப் பேசிக்கொண்டே இருக்கும் அந்த மாநில அரசு, அறிவியல்பூர்வமான பயனுள்ள முடிவை எடுக்காமல் இருப்பது புதிராகவே உள்ளது.
- எஸ்.சொக்கலிங்கம், கொட்டாரம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT