Published : 16 Jun 2017 09:59 AM
Last Updated : 16 Jun 2017 09:59 AM

இப்படிக்கு இவர்கள்: சைபர் கிரைம் பிரிவு உதவ வேண்டும்!

பல பெண்களின் மன வருத்தத்தின் பிரதிபலிப்பே இக்கடிதம். சென்னை வெள்ள நிவாரணத்தில் தொடங்கி ஜல்லிக்கட்டு வரை பல ஆச்சரியங்களை நிகழ்த்திய சமூக வலைதளங்களில் பெண்கள் மிரட்டப்படுவதும், அசிங்கப்படுத்தப்படுவதும் தொடர்கிறது. சுவாதி, விஷ்ணுப்பிரியா போன்றவர்களின் இறப்புக்குப் பிறகும் இதுபோன்ற சம்பவங்கள் குறைந்தபாடில்லை.

இன்றளவிலும் காதலித்து ஏமாற்றிவிட்டாள் என்பதில் தொடங்கி பல பதிவுகள் தனிப்பட்ட பெண்களை மோசமாக விமர்சித்துப் பதிவிடப்படுகின்றன. வசதியான வீட்டுப் பெண் என்றால், பணம் பறிப்பதற்காக இல்லாத பொல்லாத ஆபாச மிரட்டல்களும் வருகின்றன. இதையெல்லாம் பெற்றோரிடம் சொன்னால், உனக்கு அப்படிப்பட்ட இடம் தேவையில்லை என்று முகநூல் கணக்கை முடித்துவிடுகிறார்கள். சைபர் கிரைம் போலீஸாரிடம் செல்லலாம் என்றால், அவர்களின் அணுகுமுறையே பயமுறுத்துகிறது.

விஷ்ணுப்பிரியா வழக்கில் சைபர் கிரைம் கொஞ்சம் அக்கறையுடன் உதவியிருந்தால், கண்டிப்பாக அவரைக் காப்பாற்றியிருக்க முடியும். பெரும்பாலான பெண்கள் காவல் நிலையத்துக்குச் செல்ல வேண்டும் என்ற அச்சத்திலேயே சில விஷயங்களை மறைத்து தவறான முடிவுகளை எடுக்கிறார்கள். எனவே, மின்னஞ்சல் வாயிலாகவே புகார் தெரிவிக்கவும், உரிய ஆதாரங்களை அனுப்பி தவறானவர்கள் மீது மிகத் துரிதமாக நடவடிக்கை எடுக்கவும் உரிய ஏற்பாடுகளை சைபர் கிரைம் செய்ய வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் தங்களுக்கு இருக்கும் பொறுப்பை அவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.

- நாகராணி கன்னீஸ்வரி, மின்னஞ்சல் வழியாக.



மரபணு மாற்றிய கடுகு வேண்டாம்!

டி.எஸ்.ஆர். சுப்ரமணியன் எழுதிய, ‘மரபணு மாற்றிய கடுகு வேண்டவே வேண்டாம்’ (ஜூன். 13) கட்டுரை வாசித்தேன். கடுகில் ஆரம்பித்து பின்னர் எல்லா பயிர்களிலும் மரபணு மாற்றப்பட்ட விதைகளை அறிமுகப்படுத்த முயல்வர். நாட்டு விதைகள் பயனின்றி அழிந்துபோகும். கடுகு விளைச்சலை அதிகரிக்க மாற்று வழியே இல்லையா? உலக நாடுகள் பலவும் அதனால் ஏற்படும் விளைவுகளை அறிந்து, மரபணு மாற்றப்பட்ட விதைகளைப் பயன்படுத்துவதைத் தடைசெய்த பின்னர், மத்திய அரசு எந்தத் தைரியத்தில் இதைக் கையில் எடுத்துள்ளது? மக்கள் நலன்களைக் காக்க வேண்டிய அரசு, மக்களுக்கு எதிராகச் செயல்படுவது அழகல்ல.

- திருவள்ளுவன், ‘தி இந்து’ இணையதளம் வழியாக.



வரலாறு திரும்பிவிடக் கூடாது!

ஜூன் 13-ல் வெளியான, ‘மோடியின் பொருளாதாரத் தோல்விகளை ஏன் எதிர்க் கட்சிகள், ஊடகங்கள் பேசுவதில்லை?’ கட்டுரை வாசித்தேன். 2014 நாடாளுமன்ற தேர்தல் நேரம், 2016 தமிழக சட்டமன்றத் தேர்தல் நேரங்களில் அப்போதைய அதிமுக அரசின் தோல்விகளை இதே வகையில்தான் திமுக தவிர்த்த எதிர்க் கட்சிகளும் முக்கிய ஊடகங்களும் பேசாமல் கள்ள மௌனம் சாதித்தன. அதேநிலைதான் இப்போதும். இரண்டு அடிப்படைகளில் இதனைப் புரிந்துகொள்ளலாம்.

பேச முயற்சிக்கும் ஊடகங்களைத் திசைமாற்றிவிடுவது ஒரு வகை. எதிர்ப்பைத் தெரிவிக்கும் எளிய மனிதர்களை அதிரடியாக எதிர்கொள்வதன் மூலம் ஒரு பயத்தினை ஏற்படுத்தி, மேற்கொண்டு விமர்சிக்கவிடாமல் தடுப்பது. இந்த முறைகளைக் கடைப்பிடித்து பெற்ற அல்லது தக்க வைத்த வெற்றிகள், பதவிகள் மத்தியிலும், மாநிலத்திலும் என்ன ஆனது என்பதை வரலாறு எப்போதும் நினைவில் வைத்திருக்கும். மோடி விஷயத்திலாவது எதிர்க் கட்சிகளும், ஊடகங்களும் வாய் திறக்கின்றனவா என்று பார்க்கலாம்.

- ரா.பிரசன்னா, மதுரை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x