Published : 17 Mar 2017 10:12 AM
Last Updated : 17 Mar 2017 10:12 AM
விடுதலை பெற்று 70 ஆண்டுகளை நெருங்கும் இன்றைய நிலையிலும், பெண்கள் மகிழ்ச்சியான, நிம்மதியான, வன்முறையற்ற வாழ்க்கை நடத்துவது என்பது கேள்விக்குறியாகவே நீடிக்கிறது. தன்னைச் சார்ந்தோரை வாழ்க்கையில் உயர்த்த தன்னை மெழுகாக உருக்கிக்கொண்டு உழைக்கும் பெண்களின் வாழ்வில் வசந்தம் வீச வேண்டும். அவர்களுக்குச் சமமான உரிமைகள் வழங்க வேண்டும். ‘மாற்றத்துக்குத் தயாராகுங்கள்’என்ற குறிக்கோளுடன் வீடு, பணிபுரியும் இடங்கள், அரசியல், ஒட்டுமொத்த சமூகம் ஆகியவற்றில் சாதனைக் கொடியைப் பறக்கவிடத் தயாராக வேண்டும்.
அங்கே பெண்களுக்கு எதிரான வன்முறை புரிபவர்கள் எந்த உயர் பொறுப்பில் இருந்தாலும், பாரபட்சமில்லாமல் தண்டனை வழங்க வேண்டும். வரும் காலங்களில் பெண்களுக்கு எதிரான தவறுகளை யாரும் செய்ய நினைக்காத அளவுக்குத் தண்டனை கடுமையாக இருப்பது அவசியம். தண்டனைகள் முறையாகவும், தெளிவாகவும் வரையறுக்கப்பட வேண்டும். பெண்களை மதிக்காத எந்த நாடும் உயர்ந்ததில்லை; வருங்காலத்தில் உயரப் போவதுமில்லை.
- ஆர்.பிச்சுமணி, திப்பிராஜபுரம்.
நீதிபதிகள் நியமனமும் உச்ச நீதிமன்றத்தின் கடமையும்!
ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி லோதாவின் பேட்டியைக் கண்டேன் (மார்ச் 8). அதில் அவர் “என்ஜேஏசியைக் கொண்டுவந்திருக்கிறார்கள். இந்த நடைமுறை, அரசியல் சட்டம் நிர்ணயித்துள்ள வரைமுறைகளின்படி இல்லை. எனவே, இது சரியா என்று ஆராய்ந்த உச்ச நீதிமன்றம், இது செல்லாது என்று தீர்ப்பளித்தது” என்று கூறியிருக்கிறார். ஆனால், உச்ச நீதிமன்றமே ஏற்படுத்திக்கொண்ட கொலீஜிய முறை இந்திய அரசியல் சட்டத்தில் எங்கும் காணப்படவில்லை.
அரசியல் சட்டத்தின் அங்கீகாரமும் இதற்கு இதுவரை இல்லை. மேலும், நீதிபதிகளே நீதிபதிகளை நியமிக்கும் நடைமுறை உலகின் எந்த நாட்டிலுமே இல்லை. இந்நிலையில், உச்ச நீதிமன்றம் தேசிய நீதித் துறை நியமன ஆணையம் செல்லாது என்று கூறியிருப்பது, அதிலும் அரசியல் சட்டத்தைக் காரணம் காட்டியே செல்லாது என்று கூறியிருப்பது எந்த வகையில் சரி என்று புரிந்துகொள்ள முடியவில்லை. நீதிபதிகள் நியமனத்தை வெளிப்படைத்தன்மையோடு நடத்த வேண்டியது உச்ச நீதிமன்றத்தின் கடமை என்று நாடே எதிர்பார்க்கிறது.
- பொ. நடராசன், நீதிபதி (பணி நிறைவு), மதுரை.
புத்திசாலித்தனமான முயற்சி
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே மனிதக் கழிவுகளை, கழிக்கும் இடத்திலேயே உரமாக்கும் தொழில்நுட்பத்தை மகாத்மா காந்தி தனது சபர்மதி ஆசிரமத்தில் செயல்படுத்தியதைக் கேள்விப்பட்டுள்ளேன். அதே நடைமுறை காந்தியவாதியான குமரப்பா நடத்திய டி.கல்லுப்பட்டி ஆசிரமத்திலும் செயல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், கடந்த 14-ம் தேதி இந்து நாளிதழில், மனிதக் கழிவுகளைப் பயன்படுத்தி 15 நாட்களுக்கு ஒரு முறை 1 டன் இயற்கை உரம் தயாரிக்கும் ஆலை இந்தியாவிலேயே முதன்முறையாக உதகையில் செயல்படுத்தப்படுகிறது என்ற செய்தியைப் படித்தவுடன் மகிழ்ச்சியடைந்தேன். கால்நடை வளர்ப்பு குறைந்து, இயற்கை உரத்துக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மனிதக் கழிவுகளை உரமாக்குவது புத்திசாலித்தனமான முயற்சி. இந்த திட்டத்தை உடனடியாக இந்தியா முழுவதும் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த மத்திய - மாநில அரசுகள் முன் வரவேண்டும்.
- க.துள்ளுக்குட்டி, நூர்சாகிபுரம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT