Published : 03 Feb 2017 09:27 AM
Last Updated : 03 Feb 2017 09:27 AM

இப்படிக்கு இவர்கள்: சிந்திக்க வைத்த கேள்விகள்

பிப்ரவரி1-ல் வெளியான, ‘மோடிக்கு ஒரு திறந்த மடல்’ என்ற புதன் பெருங்கட்டுரையில், கோபாலகிருஷ்ண காந்தி, பிரதமர் மோடியிடம் கேட்ட கேள்விகள் என்னை வியப்படையச் செய்தன. குறிப்பாக, ‘குறைவான ரொக்கத்தைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்துகிறீர்கள். குறைவான தண்ணீரைப் பயன்படுத்துவது எப்படி என்று சொல்லித்தருவீர்களா? ஏ.டி.எம்.களில் பணம் குறைந்துபோகட்டும், பண அட்டைகளை - டிஜிட்டல் பணத்தைப் பயன்படுத்துங்கள் என்கிறீர்கள்.

நமது ஏரிகள் வற்றிப்போனால் என்ன செய்வது, டிஜிட்டல் தண்ணீர் பயன்படுத்தி நாம் வாழ முடியுமா? தூய்மையாக இருக்குமாறு எங்களுக்குச் சொல்கிறீர்கள் அசுத்தத்தின் ஊற்றாக இருக்கும் பிளாஸ்டிக் பற்றி.. பிளாஸ்டிக் தொழிலதிபர்கள் ‘லாபி’ பற்றிப் பேசுவதில்லையே ஏன்?’ என்று அவர் எழுப்பியுள்ள கேள்விகள் அனைத்தும் சிந்திக்கத் தூண்டுபவை.

- துரை. நித்தியானந்தன், காட்டுமன்னார்கோவில்.



நிறைவேறிய காந்தியின் கனவு

‘தை எழுச்சி’யின் துணை விளைவாக, ‘தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை’ மற்றும் ‘தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு’ ஆகியவை தானாக முன்வந்து இனி கோக், பெப்சியை விற்கப்போவதில்லை என்று அறிவித்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ‘தேச பக்தியை அவரவர்கள் செய்யும் தொழிலில் வெளிப்படுத்துங்கள்’ என்று தேசப்பிதா காந்தி கூறினார். காந்தியின் நினைவு நாளில், அவருடைய கனவு நனவாகி யிருப்பதும், சுதேசிக்கொள்கைக்கு மீண்டும் புத்துணர்வு கிடைத்திருப்பதும் நல்ல விஷயங்கள். வியாபாரிகள் மட்டுமல்ல, மத்திய - மாநில அரசுகளும் கோக், பெப்சிக்கு நிரந்தரத் தடை விதிக்கும் சூழல் வர வேண்டும்.

- அ.அப்பர்சுந்தரம், மயிலாடுதுறை.



ஆளுநர் உரை தேவையா?

புதுவை சட்டப்பேரவை கூட்டத்தொடரில், ஆளுநர் உரையை நீக்கியிருப்பது அறிவார்ந்த செயலாகும். குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர் உரைகளில் மாற்றம் செய்யும் உரிமை அவர்களுக்கு இல்லை. அமைச்சரவை தயாரித்த உரையை படிப்பதே அவர்கள் பணி. தம் கருத்துக்கு முரண்பட்டிருந்தாலும் அதைத் திருத்தவோ, வெட்டவோ ஆளுநர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. இச்சடங்குக்கு முற்றுப்புள்ளி வைத்த புதுச்சேரி அரசின் செயல் பாராட்டத்தக்கது. இதே போல நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்களும் செயல்படுவது காலத்தின் கட்டாயம்.

- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.



சிந்திக்கப் பயந்தவன் கோழை!

ஆசையின் ‘புரட்சிக்கு நேரமில்லை’ எனும் கவிதை அருமை. புரட்சி நடப்பதற்கு என்று தனியாக ஒரு நாளை உருவாக்க முடியாது. அது தானாக வெடிக்கும். புறக்கணிக்க ஆயிரம் காரணம் சொல்பவர்கள், ஏற்றுக்கொள்ள ஒரு முயற்சி செய்யாதது வேதனை. மனதில் ஏற்படும் மாற்றம்தான் புரட்சிக்கு விதை. உரிமைக்கான குரல் ஒலித்துக் கொண்டிருக்கும்போது அதைச் செவிமடுக்காமல், ‘போராட்டம் தீர்வல்ல’ என்று தத்துவம் பேசும் மனிதர்கள் அதிகம். ‘சிந்திப்பவன் மனிதன், சிந்திக்க மறுப்பவன் மதவாதி, சிந்திக்காதவன் மிருகம், சிந்திக்கப் பயப்படுகிறவன் கோழை’ என்ற பெரியாரின் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.

- ப.மணிகண்டபிரபு, திருப்பூர்.



பத்ம விருதும் அரசியலும்

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகளில் தீயணைப்பு வீரர் விபின், மரங்களின் மனிதர் தரிபள்ளி ராமையா, சிற்றாறை மீட்டெடுத்த பாபா பல்பீர்சிங் சீசேவால், களரி ஆசான் மீனாட்சியம்மா, மகப்பேறு மருத்துவர் பக்தி யாதவ் போன்றோருக்கு நாட்டின் பொது நலன்களில் ஈடுபட்ட காரணத்துக்காக விருதுகள் கொடுக்கப்பட்டது, இக்கால இளைஞர் களுக்கும் பொது நலனில் ஈடுபடுவோருக்கும் ஊக்கமளிக்கும் என்பது திண்ணம்.

அ.பட்டவராயன், திருச்செந்தூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x