Published : 17 May 2017 10:24 AM
Last Updated : 17 May 2017 10:24 AM
சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்ற கட்சி, அடித்தட்டு மக்களின் வாழ்க்கைக்காகப் போராடிய கட்சி பொதுவுடமைக் கட்சி. அதன் செல்வாக்கு சரிந்ததற்குக் காரணம் என்னவென்று அக்கட்சியினர் உணரவில்லை என்றே தோன்றுகிறது. 1952 பொதுத்தேர்தலில் இந்தியா முழுமைக்குமான கட்சியாக விளங்கியவர்கள், இன்று ஒரு சில மாநிலங்களில் சுருங்கியது ஏன் என்று ஆக்கபூர்வமான சுயவிமர்சனத்தை மேற்கொண்டிருந்தால், இந்நேரம் அதற்கான நடவடிக்கைகளை அவர்கள் தொடங்கியிருப்பார்கள்.
இடதுசாரிகள் என்ற பெயரில் ஆறு கட்சியினர் ஒருங்கிணைந்தாலும், அதை மக்கள் வலுவான மாற்று சக்தியாகப் பார்க்கவில்லை. இனியாவது யதார்த்தத்தை உணர்ந்து, கம்யூனிஸ்ட்டுகள் ஒரே கட்சியாக இணைய வேண்டிய அவசியத்தை மே 16-ல் வெளியான ‘இப்போதுகூட இல்லையென்றால், கம்யூனிஸ்ட்டுகள் எப்போது இணையப்போகிறார்கள்?’ கட்டுரை உணர்த்துகிறது.
-மு.செல்வராஜ், மதுரை.
உணர்வை மீட்டெடுப்போம்
கோபாலகிருஷ்ண காந்தி எழுதிய, ‘1967 உணர்வை மீட்டெடுப்போம்’ (மே.11) கட்டுரை காமராஜர், அண்ணா ஆகிய இருவருமே தங்களது கொள்கையில் உறுதிப்பாட்டுடன் இருந்ததையும் அதே சமயம் அரசியல் கருத்து வேறுபாடுகளை மீறி தோழமை உணர்வுடன் பழகியதையும் எடுத்துரைத்தது. 1969-ல் அண்ணா மறைந்த பின்னர், காலப்போக்கில் அந்த நட்புணர்வும், அரசியல் நாகரீகமும் மங்கிப்போனதன் விளைவாக, 1972-ல் திமுக பிளவுபட்டதையும், அதன் பின்னர் தனி மனிதப் பகையுணர்வு மேலோங்கியதையும் காமராஜரின் மறைவுக்குப் பின் கூட்டாட்சித் தத்துவம் சந்தித்த சோதனையையும் கட்டுரையாளர் தெரிவித்துள்ளார்.
கூட்டாட்சித் தத்துவம், மதச்சார்பின்மையைக் காக்க, 1967 பாணி கூட்டணி மீண்டும் ஏற்பட வேண்டியது அவசியம். 1967 பொதுத் தேர்தலின் பொன் விழா ஆண்டான இந்த ஆண்டில், இழந்த உணர்வை மீட்டெடுப்பதை தமிழக அரசியல் கட்சிகள் லட்சியமாகக் கொள்ள வேண்டும்.
- கு.மா.பா.கபிலன், சென்னை.
அந்த நாள் ஞாபகம்
மத நல்லிணக்கத்தின் சுவை பற்றி ‘ரங்கத்தில் செயல்படும் கோபால ஐயங்கார் மெஸ்’ என்ற செய்திக் கட்டுரை (மே.16) மனதை நெகிழவைத்தது. மதத்தின் வேறுபட்ட நிலை, சில அரசியல் மற்றும் சமூகத்தின் தலைவர்களால் மிகைப்படுத்தப்பட்டதே தவிர, சாதாரண மக்கள் அதைப் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை. என் தந்தைக்கும், சக வியாபாரியான இஸ்லாமியர் ஒருவருக்கும் இருந்த ஆத்மார்த்தமான நட்பை கட்டுரை ஞாபகப்படுத்தியது.
- ஆர்.எஸ்.ராகவன், பெங்களூரு.
தேவை நேர்மறையான பார்வை!
மே11 அன்று வெளியான, ‘பில்கிஸ் பானு துரத்தும் மன சாட்சியின் குரல்’ கட்டுரை படித்தேன். நீண்ட நெடிய சட்டப் போராட்டங்களுக்குப் பின், 2002-ல் நடந்த குஜராத் கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்குத் தண்டனை உறுதிசெய்திருக்கிறது மும்பை உயர் நீதிமன்றம். மோடி நேரடியாகவோ மறைமுகமாகவோ குற்றம்புரிய துணைநிற்கவில்லை. ஆனால், சட்டத்தின் முன் குற்றவாளிகளாக்கப்பட வேண்டியவர்கள் அதிகாரத்தினால் தப்பவிடப்பட்டிருக்கிறார்கள். இருந்தாலும், ஆள்பவர்களையும் மீறி நீதித் துறையின் மூலம் நீதி நிலைநாட்டப்படுகிறது என்பது இந்தியாவில் ஜனநாயக மரபுகள் இருப்பதினால்தானே? - இதுபோன்ற நேர்மறையான பார்வையும் தேவை.
- ஜீவன்.பி.கே., கும்பகோணம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT