Published : 21 Sep 2016 05:43 PM
Last Updated : 21 Sep 2016 05:43 PM
காவிரிப் பிரசினையை, தமிழர்களுக்கும் கன்னடர்களுக்குமான விரோத உணர்வுடையதாக அரசியல் சந்தர்ப்பவாதிகள் மாற்றியது வருத்தத்துக்கும் கண்டனத்துக்கும் உரியது.
ஒன்றுபட்ட சென்னை மாகாணத்தில் பல மொழியினரும் தோழமையோடு வாழ்ந்தனர். அன்று, சென்னை மாகாணத்திலேயே சைதாப்பேட்டை ஆசிரியர் கல்லூரிதான், ஆண்களுக்கான ஒரேயொரு அரசு ஆசிரியர் கல்லூரி. அங்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் பேசுவோர் அனைவரும் ஒரு சேரக் கற்றோம். ஒன்றாகச் சாப்பிட்டோம். மாதிரி வகுப்புகளுக்குத் தயார் செய்கையில், ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டோம்.
கோவை மாவட்டத்தில் இருந்த, கொள்ளேகாலம் பள்ளியில் ஒரே வகுப்பில் கன்னடம், தமிழ், ஆங்கில வழி வகுப்புகள் நடைபெறும். ஒரு வாக்கியத்தை மூன்று மொழிகளிலும் சொல்ல வேண்டிய திறன் இருக்கும் ஆசிரியர்கள் அங்கு பணியாற்றினர். கன்னடப் பகுதியைச் சேர்ந்த பல அதிகாரிகளும் தமிழ்ப் பகுதியில் மிகச் சிறப்பாகப் பணியாற்றிவருகின்றனர். நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வோடு தொடர்ந்து செயல்படுவது நாட்டுக்கு மட்டுமல்ல, நமக்கும் நல்லது.
- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.
*
கவிதைக்கும் இடம் வேண்டும்
கேரளம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழகத்தில் எழுத்துக்கான மரியாதை சற்றுக் குறைவே. இருப்பினும், பல படைப்பாளிகளின் முயற்சியால் தற்காலத் தமிழ் இலக்கியச் சூழல் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டுள்ளது.
தொடர்ந்து அதனை முன்னெடுக்கும் வகையில் ‘தி இந்து’ நாளிதழ் சனிக்கிழமையில் இலக்கியத்துக்கென மேலும் ஒரு பக்கத்தை ஒதுக்கியிருப்பது பாராட்டுக்குரியது. கவிதைகளுக்கும் சில பத்திகளை ஒதுக்க வேண்டும்.
- கு.ரவிச்சந்திரன், ஈரோடு.
*
தமிழ் எழுத்தாளர்களைக் கொண்டாடும் விதமாக நூல்வெளியில், கூடுதலாக ஒரு பக்கத்தை இணைத்து தனது தரத்தை மேலும் உயர்த்திக்கொண்டுள்ளது ‘தி இந்து’. தமிழ் எழுத்தாளர்களைச் சிறப்பிக்கும் பணி சிறக்க வாழ்த்துகள்.
- ச.வைரமணி, கோட்டையூர்.
*
மகிழும் வழி செய்வீரா?
பொழுதுபோக்கு ஊடகமான முகநூல், சமூகத்தைப் பழுதுபார்க்கும் ஊடகமாக மாறிவருவதை அரவிந்தனின் ‘விவாத மரபு மீண்டு வருமா?’ கட்டுரை அழகாக உணர்த்தியது. முகநூல் பக்கங்களில் இப்போது பிரமிள், சுந்தரராமசாமி, நகுலன், ந.பிச்சமூர்த்தி, லா.ச.ரா., புதுமைப்பித்தன், மௌனி, ஜி.நாகராஜன் போன்ற இலக்கிய ஆளுமைகளின் பெயர்கள், அவர்களின் படைப்புகள் குறித்த விமர்சனங்களை அதிகமாகப் பார்க்க முடிகிறது.
அதேநேரத்தில், சி.சு.செல்லப்பா, க.நா.சு, வெங்கட்சாமிநாதன், தி.க.சி. போன்றோர் முன்னெடுத்த தரமான, திறமான இலக்கியப் படைப்பை மையமிட்ட விமர்சனப் பார்வை, இன்று குறுகிய வட்டத்தில் செயல்படும் குழு அரசியலாகவும், தனி மனிதத் துதிபாடல் அல்லது தனிமனித அவதூறாக மாறிப்போகிறது. இணையவாசிகள் தரமான விவாத மரபை நோக்கி நகர்ந்தால் மகிழலாம்.
- சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி.
*
கூட்டாட்சியின் தேவை
நவீன தமிழகத்தின் அடித்தளம் திராவிடக் கொள்கைகளே. அதனை வடிவமைத்தது அண்ணாதுரை என்பதை வரலாறு சொல்லும். தமிழகத்தின் வளர்ச்சியை, தனித்துவத்தை இந்தியா வியப்புடன் பார்க்கிறது, ‘அண்ணா ஒரு நாள் இந்தியாவுக்குத் தேவைப்படுவார்’ என்ற கூற்று முற்றிலும் உண்மை. சரியான நேரத்தில் எழுதப்பட்ட சிறப்பான கட்டுரை.
- சுந்தர.பாரதிதாசன், மின்னஞ்சல் வழியாக…
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT