Published : 18 Apr 2017 10:54 AM
Last Updated : 18 Apr 2017 10:54 AM
அம்பேத்கர் வலியுறுத்திய உரிமைக்கும் ஆட்சியாளர்கள் முன்நிறுத்துகிற கொள்கைகளுக்குமான இடைவெளியை நீர் என்ற நல்ல உதாரணத்தைச் சொல்லிப் புரியவைத்தது ஏப்.14ல் வெளியான, ‘மோடியின் அம்பேத்கர்' கட்டுரை. அம்பேத்கரையும் அவர்தம் கொள்கைகளையும் முன்னிறுத்தி பிரதமர் மோடி பேசுவதற்கும், அவரது செயல்பாடுகளுக்குமான வேறுபாடுகளை இக்கட்டுரை சரியாகவே முன்வைத்ததுள்ளது. எனினும், அம்பேத்கரின் பொருளியல் ஆய்வுக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதுபோன்ற தொனி வருவது சரியான கூற்றல்ல.
நாடு பொருளாதார மேம்பாட்டை அடைய விவசாய நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும், கேந்திரமான பொதுத்துறைகள் உருவாக்கி, வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்ற அம்பேத்கரின் கொள்கைக்கு நேரெதிரான பாதையில் மோடி அரசு செல்கிறது. அம்பேத்கர் வாழ்நாள் முழுதும் வலியுறுத்திய ஜனநாயகம், சம உரிமை என்ற கோட்பாடுகளுக்கு, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுக்கும் மத்திய அரசின் செயல் நேர் முரணானது என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.
-என்.சுரேஷ்குமார், மதுரை.
தங்கமும் பெட்ரோலும்
இந்தியாவின் அந்நியச் செலாவணியைத் தீர்மானிப்பது தங்கமும் பெட்ரோலும்தான். தங்கத்தின் அன்றாட விலை நிர்ணயம் சரியானது. ஆனால், பெட்ரோல் விலை நிர்ணயமும் சரி என்று சொல்ல முடியாது. தங்கம் சேமிப்பு மற்றும் மறு விற்பனைக்கு உட்பட்டது. ஆனால், பெட்ரோல் அப்படி அல்ல. அதனைச் சேமித்து வைத்து மறு விற்பனைக்கு உட்படுத்துவது நடைமுறைக்கு சரிவராத காரியம். எனவே, அனுதினமும் பெட்ரோல் விலையை மாற்றும் முறையைக் கைவிட்டு, தற்போதுள்ள நிலையையே தொடர வேண்டும்.
-எஸ்.மாணிக்கம், மின்னஞ்சல் வழியாக.
காலில் விழவில்லை!
திமுக நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடர்பான செய்தியில் (ஏப்.17), 'திமுக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த கிரிராஜன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் காலில் விழுந்து வணங்கி வரவேற்றார்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தகவலை மறுத்திருக்கும் திமுக நிர்வாகிகள், “கிரிராஜன் யார் காலிலும் விழவில்லை. ராமகிருஷ்ணன் வந்த சமயத்தில் கீழே விழுந்த அவருடைய கைக்குட்டையை எடுத்துக் கொடுத்தார். அதுதான் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது” என்று விளக்கமளித்தனர்.
-ஆசிரியர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT