Published : 28 Mar 2017 09:32 AM
Last Updated : 28 Mar 2017 09:32 AM
ஆறாம் வகுப்பிலிருந்து ஒவ்வொரு மாணவரும் ஆண்டுக்குக் குறைந்தது ஆறு தாய்மொழி நூல்களும், ஆறு ஆங்கில நூல்களும் வாசிக்க வேண்டும் என்று, 1948-ல் வெளியான பள்ளிப் பாடத்திட்டத்தின்படி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பள்ளிகளில் பொது நூலகம் தவிர, வகுப்பு நூலகங்களும் செயல்பட்டன. பாடநூல் வெளியீட்டாளர்கள் லாபத்தில் ஒரு பகுதியைக் கொண்டு, மாணவர்களுக்காக 50 பைசா முதல் ஒரு ரூபாய் வரை விலை வைத்து நூல்கள் வெளியிட்டார்கள். எனிட் ப்லைடன் நூல்களில் ஒரு பக்கத்தில் கதையும் எதிர்ப்புறம் படமும் இருக்கும்.
அவை மாணவர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றன. குறைந்த விலையில் தமிழிலும் நூல்கள் வெளிவந்தாலும் மாணவரைக் கவரும் வண்ணம் இல்லாதிருந்தன. தினமும் வகுப்பு தொடங்கும்போது மாணவரைப் படிக்கச் சொல்வது ஒரு மரபாக இருந்தது. உச்சரிப்பினைச் சரிசெய்யவும், வாசிப்பு வேகத்தை விரைவுபடுத்தவும் இம்முறை உதவியது. மனப்பாடக் கல்வி முறை இவற்றையெல்லாம் சாகடித்துவிட்டது. பள்ளிப் பாடநூல்களைத் தவிர, வேறு நூல்கள் படிக்கும் வாய்ப்பே இல்லாது இன்று மாணவர் உள்ளனர். பள்ளி அங்கீகாரத்துக்கு நூலகம் இன்றியமையா நிபந்தனையாக இருந்தபோதிலும் அதனை மாணவர் பயன்படுத்தாத நிலையே இன்றும் நிலவுகிறது.
- ச.சீ.இராஜகோபாலன், கல்வியாளர், சென்னை.
அமியை ஏன் வாசிக்க வேண்டும்?
எழுத்தாளர் அசோகமித்திரன் மறைவையொட்டி, ‘நூல்வெளி’யின் (மார்ச்.25) இரு பக்கங்களிலும் வெளியான கட்டுரைகள் நெகிழவைத்தன. குறிப்பாக, ‘அமியை ஏன் வாசிக்க வேண்டும்’ என்கிற கேள்வி, அரவிந்தனின் முக்கியமான குரலாகத் தென்படுகிறது. ‘மாபெரும் எழுத்தாளர்கள்கூட அமியின் எழுத்தில் உள்ள நுட்பங்களை விளக்கத் தெரியாமல் அல்லது மனமில்லாமல் தவிர்க்கும்போது, காட்சிகளின் சாட்சியாக அவர் இருந்த காரணத்தால்தான் உணர்ச்சிவயப்படாமல், பற்றற்ற நிலையில் எளிமையாக எழுத முடிந்தது’ என்பதை அழுத்தமாகக் குறிப்பிட்டது பாராட்டுக்குரியது.
- ராமகிருஷ்ணன் ஜெயபாலன், மின்னஞ்சல் வழியாக.
பாமகவுக்குப் பாராட்டு!
மார்ச் 24-ல் வெளியான, ‘பாமக நிழல் வேளாண் அறிக்கையிலிருந்து தமிழக அரசு கற்க வேண்டிய பாடங்கள்’ கட்டுரை வாசித்தேன். அவர்களின் விவசாயத்துக்கான சிறப்பு நிழல் நிதிநிலை அறிக்கையைப் பற்றியும் அதில் சொல்லப்பட்டிருக்கும் சிறப்பான அம்சங்களைப் பற்றியும் மக்களிடம் கொண்டுசேர்த்ததில் மிக்க மகிழ்ச்சி. மேலும், பாமகவின் மக்கள் நலனுக்கான செயல்பாடுகளாக தர்மபுரி கடத்தூர் ஏரியை இரண்டே மாதங்களில் தூர்வாரியதையும், ஐ.நா. மனித உரிமைக் கழக ஆணையத்தில் ஈழத் தமிழர்கள் சார்பாக பசுமைத் தாயகம் அமைப்பு பேசியதையும் குறிப்பிட விரும்புகிறேன்.
- ஜெயக்குமார், மின்னஞ்சல் வழியாக
வேண்டும் மாற்றம்!
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், ‘போட்டித் தேர்வு களில் வெற்றிபெறும் வகையில் பிளஸ் 2 பாடத்திட்டத்தை மாற்றியமைப்பது தொடர்பாக எடுக்கப்பட்டிருக்கும் முடிவுபற்றி ஒரு வாரத்தில் அறிவிப்பு வெளியிடப்படும்’ என்று கூறியிருக்கிறார். ஆனால், இப்படி ஒவ்வொரு கல்வி ஆண்டின் முதலிலும் இறுதியிலும் முடிவுகள் எடுப்பதும், அறிக்கைகள் வெளியிடுவதும் வாடிக்கையாகிவிட்டன. ஆனால், தமிழகத்தில், கல்வியின் தரமோ மிகவும் பரிதாபமாகத்தான் இருக்கிறது.
- தா.சாமுவேல் லாரன்ஸ், மதுரை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT